ஓசூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 'வாட்ஸ் அப்'மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது, பனிப்பாறையின் நுனி மட்டும் தான். கப்பலையே தகர்க்கும் கண்ணுக்குத் தெரியாத 'மிதக்கும் பனிப்பாறைகள்' ஏராளம் என்கிறார் பள்ளிக் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரும், தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான என்.குணசேகரன்.
ஓசூரில் பிளஸ் டூ தேர்வில் 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாள் வெளியானது எதைக் காட்டுகிறது?
நமது தேர்வுமுறை எந்த அளவுக்குத் தோல்வி அடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. அவ்வளவே. இதுபோன்ற முறைகேடுகள் பொதுவாக அரசுப் பள்ளிகளில் நடப்பதில்லை. எல்லா தனியார் பள்ளிகளிலும் நடப்பதில்லை. பேராசை பிடித்த சுயநிதி மெட்ரிக் பள்ளி களில்தான் இதுபோன்ற முறைகேடுகள் அதிகம் நடக்கின்றன.
ஒவ்வொரு சுயநிதி மெட்ரிக் பள்ளிக்குப் பின்னாலும் ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், அரசுப் பள்ளி ஆசியர்களும் இருப்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனப்போக்கும் இவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. அவர்களின் பிள்ளைகள் படிப்பதும் பெரும்பாலும் இந்த சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில்தானே. சுயநிதிப் பள்ளிகளின் ஆதிக்கத்தில்தான் பள்ளிக் கல்வித் துறையே இயங்குகிறது.
தவறுக்குக் காரணமான மாவட்டக் கல்வி அலுவலர் (டிஇஓ) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரே?
பிளஸ் டூ தேர்வைப் பொறுத்தவரை டிஇஓ பங்கு குறைவுதான். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்தான் (சிஇஓ) முழுப் பொறுப்பு. சிஇஓ-வுக்குத் தெரியாமல் டிஇஓ செயல்பட வாய்ப்பில்லை. மேலிருந்து கீழ் வரை ஒட்டுமொத்த அமைப்புமே இதற்குக் காரணம். பிரச்சினை பெரிதாகும்போது சிலர் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
சுயநிதி மெட்ரிக் பள்ளிகளைத் தேர்வு மையங்களாக அனுமதிப்பது, தேர்வுப் பணிக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர் களை நியமிப்பது இரண்டுமே விதிகளுக்குப் புறம்பானது; தவிர்க்கப்பட வேண்டும்.
பிளஸ் டூ தேர்வில் வேறு என்ன மாதிரியெல்லாம் முறைகேடுகள் நடக்கின்றன?
மெரிட்டில் மருத்துவம், பொறியியல் சேர்வதற்கான 'கோர் சப்ஜெக்ட்ஸ்' எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் எழுதும் மாணவர்கள் 100% மதிப்பெண் எடுப்பதற்கு ஏதுவாகத் தேர்வு அறையிலேயே ஏற்பாடு செய்வார்கள்.
ஒரு மதிப்பெண் வினாக்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 450-க்கு மேல் எடுத்தவர்களைத்தான் பிளஸ் ஒன்-ல் சேர்ப்பார்கள். அவர்கள் 100% மதிப்பெண்ணை எட்டுவதற்கு 5 - 10 மதிப்பெண்களுக்குத்தான் சிரமப்படுவார்கள். அந்த மதிப்பெண்கள்தான் 'தீர்மானிக்கும் காரணி'. ஆகவே, அதை நேர்செய்வதற்காகத்தான் அறைக் கண்காணிப்பாளரைச் சரிக்கட்டுவார்கள்.
இந்தப் பள்ளிக்கு இவர்தான் தலைமைக் கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் என்பதை யார் முடிவு செய்வது?
சிஇஓ சொல்வதைத்தான் பி.ஏ., டிஇஓ நடைமுறைப் படுத்துவார். ஆனால், அதற்கெல்லாம் அடிப்படை சூத்திர தாரிகள் தனியார் பள்ளி முதலாளிகள்தான்.
அதிகாரிகளை அவ்வளவு எளிதாகக் கையாள முடியுமா?
பிரபலமான தனியார் மெட்ரிக் பள்ளி அதிபர்களின் பார்வைக்கு, சிஇஓ-க்கள் யாரும் அதிகாரிகளாகத் தெரிவதில்லை. மிகச் சாதாரணமான அரசு அலுவர்களாகத்தான் பார்ப்பார்கள். வசதியான மெட்ரிக் பள்ளிகளைப் போய்ப் பாருங்கள், பணி ஓய்வுபெற்ற சிஇஓ-க்கள் நிர்வாக மேற்பார்வையாளர் என்ற பெயரில் இருப்பார்கள். அரசுக்கும் பள்ளிக்கும் தொடர்பாளர்களாக(!) அவர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அதற்காகத்தான் நிர்வாகம் மாதம் ரூ. 30,000, ரூ. 40,000 தந்து அவர்களை அமர்த்திக்கொள்கிறது.
அறைக் கண்காணிப்பாளர் நினைத்தால் தேர்வு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியாதா?
செய்யலாம், அப்படித்தான் ஒன்றிரண்டு முறைகேடுகள் வெளியே வந்துள்ளன. மருத்துவம், பொறியியல் சேர்க்கையை மட்டுமே குறிவைத்துப் பள்ளிகளை நடத்தும் ஊர்களில் 'சிண்டிகேட்' அமைத்து, மொத்தமாகப் பெரிய தொகையை அதிகாரிகளுக்குக் கொடுத்து, இதுபோன்ற விஷயமே வெளியே வராமல் பார்த்துக்கொள்வார்கள். பொதுத்தேர்வு நேரம்தான் சிஇஓ-க்களுக்கு அறுவடைக் காலம். ஓய்வு பெறுவதற்கு முன் லாட்டரி அடிக்கும் நேரம்.
தனியார் பள்ளிகளை எது இப்படிச் செயல்பட வைக்கிறது?
அரசுப் பள்ளி நிர்வாகத்துக்குத் தேர்ச்சி மட்டும்தான் இலக்கு. ஆனால், சுயநிதி மெட்ரிக் பள்ளி நிறுவனங்களுக்கு மருத்துவம், பொறியியல்தான் இலக்கு. இந்த வெற்றியை விளம்பரப்படுத்தித்தான் பிளஸ் ஒன், பிளஸ் டூ-வில் ஆண்டுக்கு தலா ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என்று வசூல் செய்ய முடியும். இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண்ணில் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால், ஒரு பெற்றோருக்கு ரூ.40 லட்சம் இழப்பு. 4 லட்சம் போனாலும் பரவாயில்லை, 40 லட்சத்தை இழக்க வேண்டியதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
'நாமக்கல் மாதிரி கல்வி' மூலம் சதம் எடுக்க வைக்கிறோம் என்பதெல்லாம்?
உண்மைதான். இந்தப் பள்ளிகள் பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கு, பிளஸ் ஒன்னிலிருந்தே மாணவர்களைத் தயார்ப்படுத்துவார்கள். தொடர்ந்து மனப்பாடம், தேர்வு, மனப்பாடம், தேர்வு என்று ஒரு ஜெராக்ஸ் இயந்திரம்போல மாணவர்களை ஆக்கிவிடுவார்கள். இதனால், பெரும்பாலான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதிவிடுவார்கள். சற்றே மாற்றி (ட்விஸ்ட்) கேள்வி கேட்டால் தடுமாறுவார்கள். அந்த இடத்தில்தான் நிர்வாகத்தின் கைங்கர்யம் தேவைப்படும். அதைச் செய்வதற்குத்தான் இத்தகைய குறுக்குவழிகள்.
இந்த நிலைமையையெல்லாம் எப்படி மாற்றுவது? உண்மையில், திறமையான மாணவர்கள் முன்னுக்கு வரும்படியான தேர்வு முறையைக் கொண்டுவர என்ன செய்வது?
இடைக்காலத் தீர்வாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு மையங்களை ரத்துசெய்துவிட்டு, அரசுப் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களை மட்டுமே கொண்டு தேர்வை நடத்தலாம். நிரந்தரத் தீர்வாக, பள்ளிக் கல்விக்குத் தொடர்பே இல்லாத டிஎன்பிஎஸ்சி போன்ற தனித்த தேர்வுத் துறையை ஏற்படுத்தி, அவர்களிடம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒப்படைக்கலாம்.
இந்தியாவில் மருத்துவம், பொறியியல் கல்விக்கான போட்டிதான் இந்த வணிகக் கொள்ளையின் ஆணி வேர். ஆனால், உலக நாடுகள் கல்வியைப் பார்க்கும் விதமே வேறு. குறைந்தபட்ச பள்ளிக் கல்வியே போதும் என்ற நடைமுறைதான் பல முன்னேறிய நாடுகளில் உள்ளது. அதுவும் முழுமையான இலவசக் கல்வியாக இருக்கிறது. முழுமையான இலவசக் கல்வியே சமூகத்தின் உயரிய சொத்தாக அங்கே கருதப்படுகிறது. ஆகவே, தரமான இலவசக் கல்வி என்ற முழுமையான மாற்றத்துக்கான வழிமுறையைக் கல்வியாளர்கள், அறிஞர்கள், சமூக சிந்தனையாளர்கள் கூடி விவாதித்துக் கண்டறிய வேண்டும். இதுகுறித்த அக்கறை அரசுக்கும் ஆட்சிக்கு வருவோருக்கும் இல்லாமல் துளியளவுகூட மாற்றம் ஏற்படாது!
- சி. கதிரவன்,
தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக