அருமருந்தாகப் பயன்படும் நெருஞ்சி முள்
என் வயது 67. நான் லாரி ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். பத்து
வருடங்களாக எனது கால், பாதம் இரண்டும் வீங்கியுள்ளன. நின்று வேலை
செய்வதால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் எனது இரு முழங்கால் மூட்டுகளும் மிகவும் வலிக்கிறது. நிற்க,
நடக்க, உட்காரக் கூட முடிவதில்லை. இப்பிரச்னைகள் தீர ஆயுர்வேதத்தில்
வழிகள் கூறப்பட்டுள்ளனவா? .பழனி - மடிவாலா, பெங்களூர்.
நீங்கள் பல ஆண்டுகள் உடலைக் குலுக்கும் வாகனத்தில் பயணம் செய்ததாலும்,
பயணத்தின் நடுவே எளிதில் செரிக்காத பரோட்டா, மாமிசவகை உணவுகளை
அதிக அளவில் உண்டதாலும், நேரம் தவறி உண்டதாலும், போய்ச் சேர
வேண்டிய சரக்கை விரைவாகச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் துரிதமாக
உட்கொண்டதாலும், முறைகேடான அளவில் பல இடங்களிலும் நீரைக்
குடித்ததாலும், நன்றாகத் தூங்காததாலும், கண்விழிப்பு ஆகியவற்றாலும், உங்களுடைய உடம்பிலுள்ள தோஷங்களாகிய வாத பித்த கபங்கள்
சிறுநீர்பையில் தங்கியதால் உடலின் கீழ் பாகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடலில் உள்ள வாயு கோபமடைந்து
வயிற்றிற்கு கீழே அமைந்துள்ள இரத்தக்குழாய்களின் வழியாக கபம் எனும்
தோஷத்தை தன்னுடன் சேர்த்து கவர்ந்து இரத்தம் கபம் ஆகியவற்றை
வெளிப்புற இரத்தக்குழாய்களை நோக்கித் தள்ளுவதுடன் அதனால் ஏற்படும்
தடைபட்ட வாயுவினுடைய பாதையால் சருமம், மாமிசம் ஆகியவற்றில் தங்கி
நெருக்கமுற்று உயர்ந்து வீக்கத்தை உண்டாக்கும். வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது பிரேக், ஆக்ஸிலரேட்டர், கிளட்ச் ஆகியவற்றை அடிக்கடி
கால்களால் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் கால் தசைகளுக்கும்,
தசைநார்களுக்கும், எலும்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும் ஏற்படும்
சோர்வானது கவனிக்கத்தக்கது. அப்பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள சோர்வை
உதாசீனப்படுத்தாமல் தகுந்த ஓய்வை நீங்கள் அளித்திருந்தால் இந்த
வயோதிகத்தில் இப்பிரச்னைகளை முடிந்தவரை தவிர்த்திருக்கலாம். பசியினுடைய தன்மை உங்களுக்குக் கெடாதிருந்து மலச்சிக்கலும், சிறுநீர்
வெளியேற்றமும் நன்றாக இருக்கும்பட்சத்தில் வீக்கத்தை நம்மால் எளிதாகப்
போக்கிவிட முடியும். அதற்கு நெருஞ்சி விதை ஓர் அருமருந்தாகப்
பயன்படும். நெருஞ்சி முள் விதையை சுமார் 15 கிராம் அளவில் எடுத்து ஒரு
லிட்டர் தண்ணீரில் வேக வைத்து அரை லிட்டராகக் குறுக்கி ஒரு நாளில் பல
தடவை சிறிது சிறிதாக பருகி வருவதால் வீக்கம் வடியக்கூடும். இதை சாப்பிடும் நாட்களில் உணவில் இனிப்பு, புளிப்பு ஆகியவற்றை அறவே
நீக்கிவிட வேண்டும். அரை உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பகல் தூக்கம் கூடாது. மாமிசவகை உணவுகளை முழுவதுமாக தவிர்க்க
வேண்டும். வீக்கம் மூட்டில் வந்து தங்கியிருந்து ஒரு குத்துவலியையும் ஏற்படுத்திக்
கொண்டிருந்தால் நெருஞ்சி விதையை விட நீர்முள்ளி கஷாயம் பெரிதும்
பயன்படும். இந்த கஷாயம் கோகிலாக்ஷம் என்ற பெயரில் விற்பனை
செய்யப்படுகிறது. கற்றாழைச் சோறு 10 மில்லி லிட்டரில் கால் ஸ்பூன்
சுத்தமான மஞ்சள்தூளைக் கலந்து அதனுடன் 10 சொட்டு பசு நெய் விட்டுக்
குழைத்து மதியமும், இரவிலும் உணவிற்கு சுமார் அரைமணிநேரம் முன்பாகச் சாப்பிடுவதால் இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய கேந்திரங்களாகிய கல்லீரல்
மற்றும் மண்ணீரல் பகுதிகள் சுத்தமடைவதால் இரத்தத்தில் ஏற்பட்டுள்ள காந்தல்
குறைந்து சுத்தமான இரத்தம் இரத்தக் குழாய்களின் வழியாக எடுத்துச்
செல்லப்படுவதால் மூட்டுப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி போன்றவை
நன்றாகக் குணமடையும் என்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம் தங்களுக்குப்
பயன்படக்கூடும். உண்ணும் உணவு நன்றாக செரிக்கக் கூடிய நபராக நீங்கள்
இருந்தால் இந்த தைலப் பிரயோகமானது காலையிலும், மாலையிலும் சிறிது
சூடாக்கி முழங்கால் மூட்டின் மீது இதமாக உருட்டித் தேய்ப்பதாலும்,
வெதுவெதுப்பான எண்ணெய்யை ஒரு பஞ்சில் முக்கி மூட்டின் மீது சுமார்
அரைமணிநேரம் போட்டு வைப்பதாலும் இம்மருந்தினுடைய வீரியமானது அப்பகுதியில் உட்சென்று எலும்புகளுக்கு இடையே காய்ந்து போயுள்ள
சவ்வுப் பகுதியில் நெய்ப்பை ஏற்படுத்தி இரண்டு எலும்புகளுக்கு இடையே
ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தித் தருவதாலும் வீக்கத்தையும் வலியையும்
குறைத்து உங்களால் நிற்க முடியும், நடக்கவும் முடியும். கால்களில் வீக்கம், அதனால் ஏற்படக் கூடிய வலி ஆகியவற்றால்
துன்பப்படுபவர்கள் கீழ்கண்டவற்றை முறையாக கடைப்பிடிப்பது நலம் - புளிப்பு, எண்ணெய்ப் பசை, குளிர்ச்சி ஆகியவற்றை உணவில்
சேர்க்காமலிருப்பது நலம். அதிக அளவில் தண்ணீரை அருந்தக் கூடாது. பிராணிகளின் மாமிசம், வறண்ட மாமிசம் ஆகியவற்றை உண்ணக் கூடாது. உணவு செரிக்காத நிலையிலும், உடல் களைத்த நிலையிலும் பெண் சேர்க்கை
தகாது. அதிகமான கால்நடை, உடலைக் குலுக்கும் வாகனங்களில் பிரயாணம் செய்வது
போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக