எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி : சிறப்பு விதிகள் - II பொதுப்புணர்ச்சி விதியில் கூறப்படாத ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப்பெயர்கள் முன்னர் மற்ற எண்ணுப்பெயர்கள் வந்து புணர்தல் பற்றியும், ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்கள் முன்னர்ப் பத்து வந்து புணர்தல் பற்றியும், எண்ணுப்பெயர்கள் தம்முன் தாமே வந்து புணர்தல் பற்றியும் சில சிறப்பு விதிகளை நன்னூலார் கூறியுள்ளார். அவற்றை ஈண்டுக் காண்போம். 6.3.1 ஒன்பது முன்னர்ப் பத்து, நூறு வருதல் (தொண்ணூறு, தொள்ளாயிரம் அமையும் முறை) ஒன்பது என்னும் நிலைமொழியின் முன்னர்ப் பத்து, நூறு என்னும் எண்ணுப்பெயர்கள் வருமொழியில் வந்து புணரும்போது, 1. வருமொழியில் உள்ள பத்து, நூறு என்பனவற்றை முறையே நூறு எனவும், ஆயிரம் எனவும் திரித்து, 2. நிலைமொழியின் முதலில் உள்ள ஒகர உயிரோடு தகரமெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி, 3. நிலைமொழியின் இறுதியில் உள்ள பது என்பதை நீக்கி, 4. பது என்பதற்கு அயலே நின்ற னகர மெய்யை முறையே ணகர மெய்யாகவும், ளகர மெய்யாகவும் திரித்துக் கொள்வதால் முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன. ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின் முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு தகரம் நிறீஇ, பஃது அகற்றி, னவ்வை நிரலே ண, ளவாத் திரிப்பது நெறியே (நன்னூல், 194) (ஒன்பான் - ஒன்பது; பஃது - பது; னவ்வை - னகரமெய்யை; நிரலே - முறையே) இனி இவ்விதிப்படி தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பன எவ்வாறு அமைந்தன என்பதைக் காண்போம். 1) தொண்ணூறு அமையும் முறை ஒன்பது + பத்து ஒன்பது + நூறு (பத்தை நூறாகத் திரித்தல்) தொன்பது + நூறு (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்) தொன் + நூறு (பது என்பதை நீக்கல்) தொண் + நூறு (னகரத்தை ணகரமாகத் திரித்தல்) = தொண்ணூறு 2) தொள்ளாயிரம் அமையும் முறை ஒன்பது + நூறு ஒன்பது + ஆயிரம் (நூற்றை ஆயிரமாகத் திரித்தல்) தொன்பது + ஆயிரம் (நிலைமொழி முதலில் தகரத்தை நிறுத்தல்) தொன் + ஆயிரம் (பது என்பதை நீக்கல்) தொள் + ஆயிரம் (னகரத்தை ளகரமாகத் திரித்தல்) = தொள்ளாயிரம் 6.3.2 ஒன்று முதல் எட்டு முன்னர்ப் பத்து வருதல் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்கள் நிலைமொழியில் நின்று வருமொழியாக வரும் பத்து என்னும் எண்ணுப்பெயரோடு புணரும்போது, பத்து என்னும் சொல்லின் நடுவில் உள்ள தகரமெய் கெடும். அஃதாவது தகரமெய் கெட்டுப் பத்து 'பது' என்றாகும். நிலைமொழியில் உள்ள எட்டுவரையிலான எண்ணுப்பெயர்கள் பொதுவிதியிலும், சிறப்பு விதியிலும் தமக்குச் சொல்லப்பட்ட விகாரங்களை ஏற்புடையவாறு பெற்று வரும். சான்று: ஒன்று + பத்து = ஒருபது இரண்டு + பத்து = இருபது மூன்று + பத்து = முப்பது நான்கு + பத்து = நாற்பது ஐந்து + பத்து = ஐம்பது ஆறு + பத்து = அறுபது ஏழு + பத்து = எழுபது எட்டு + பத்து = எண்பது 6.3.3 பத்து, ஒன்பது முன்னர்ப் பிற எண்ணுப்பெயர்கள் வருதல் வருமொழியில் ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், ஆயிரம், கோடி என்னும் எண்ணுப்பெயர்களும், பிறபெயர்களும் வந்து புணரும்போது, நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயர், தன் இறுதி உயிர்மெய்யாகிய 'து' என்பதைப் போக்கி, இன், இற்று என்னும் சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும். ஒன்பது என்னும் நிலைமொழியும், வருமொழியில் எண்ணுப்பெயர்கள் முதலானவை வந்து புணரும்போது, இவ்விரண்டு சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும். சான்று: பத்து + ஒன்று > பத் + இன் + ஒன்று = பதினொன்று பத்து + மூன்று > பத் + இன் + மூன்று = பதின்மூன்று பத்து + பத்து > பத் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து பத்து + மடங்கு > பத் + இன் + மடங்கு = பதின்மடங்கு ஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம் 6.3.4 பத்து முன்னர் இரண்டு வருதல் வருமொழியில் இரண்டு என்னும் எண்ணுப்பெயர் வந்து புணரும்போது, நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயரின் இறுதியில் உள்ள 'து' என்னும் உயிர்மெய் கெட, நடுவில் நின்ற தகரமெய் னகரமெய்யாகத் திரியும். சான்று: பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னிரண்டு 6.3.5 எண்ணுப்பெயர்கள் தம்முன் தாம் வருதல் ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில், ஒன்பது என்ற எண்ணுப்பெயர் மட்டும் தவிர்ந்த ஏனைய ஒன்பது எண்ணுப்பெயர்களும் தமக்கு முன்னர்த் தாமே வந்து இரட்டிக்கும்போது பின்வருமாறு புணரும். 1. நிலைமொழியில் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள் கெடும். 2. அவ்வாறு கெட்டபின் வருமொழி முதலில் உயிர் வந்தால் வகர மெய் மிகும்; வருமொழி முதலில் மெய்வந்தால் வந்த மெய் மிகும். சான்று: ஒன்று + ஒன்று > ஒ + ஒன்று > ஒ + வ் + ஒன்று = ஒவ்வொன்று எட்டு + எட்டு > எ + எட்டு > எ + வ் + எட்டு = எவ்வெட்டு இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் ஒன்று, எட்டு என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு, வருமொழி முதலில் உயிர் வந்ததால் வகர மெய் மிக்கது. மெய் வந்ததால், வந்த அந்த மெய்யே மிக்கது. மூன்று + மூன்று > மூ + மூன்று > மூ + ம் + மூன்று = மும்மூன்று பத்து + பத்து > ப + பத்து > ப + ப் + பத்து = பப்பத்து இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் மூன்று, பத்து என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு, வருமொழி முதலில் மெய்வந்ததால், வந்த அந்த மெய்யே மிக்கது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக