புதன், 29 ஏப்ரல், 2015


வினாத்தாள் வரிசை C
வினா எண்  76
.இளிவரல் மெய்ப்பாட்டின் 'வருத்தம்' என்ற பொருள் உணர்த்தும்  உட்கருத்து
A.அச்சம்           B.செயல்
C. முயற்சி          D.துன்பம்
தொல்காப்பியம்- மெய்ப்பாட்டியலில் உள்ள இளிவரல் எனும் மெய்ப்பாட்டில் இடம்பெறும் வருத்தம் என்பதன் உட்கருத்தின் பொருள் குறித்து இவ்வினா அமைந்துள்ளது.
 தொல்காப்பியம்- மெய்ப்பாட்டியலுக்கு பல்வேறு உரைகள் உள்ளன.கீழ்கண்ட இரு சான்றுகளின் அடிப்படையில் வருத்தம் என்பதன் உட்கருத்து இங்கு ஆராயப்படுகின்றது.
சான்று-1
தொல்காப்பிய சூத்திரம்     
  மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
       யாப்புற வந்த இளிவரல் நான்கே.
கருத்து : இஃது, இளிவரல் எனும் மெய்ப்பாட்டு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது.

பொருள் : மூப்பு = முதுமை; பிணி = நோய்; வருத்தம் = இடுக்கண், அதாவது அல்லல்; மென்மையொடு = எளிமை, அஃதாவது நொய்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கே = தொடர்ந்து படரும் மானக்குறை நான்குவகைத்தாம்.
இச்சூத்திரம் கட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும்.
சான்று நூல்
தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை
நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல்  தொகுதி - 2
பதிப்பாசிரியர்:
செந்தமிழ்ச் செல்வர்', தமிழாசிரியர்
'நல்லாசிரியர்'
முனைவர் ச. சாம்பசிவனார்,எம்.ஏ., பிஎச்.டி.,
ஆசிரியர், 'தமிழ்மாருதம்'
மதுரை

சான்று -2
வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின்
முயலும் முயற்சியான் வரும் துன்பம்.

மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே
(புறம்-74)
என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம்.

ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்
அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச்
சொல்லஞ் சொற்கேட்டி ...?
(கலி-47)
என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல்.

சான்று நூல்

தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமவியல்
ஆராய்ச்சிக் காண்டிகையுரை
பாவலரேறு ச.பாலசுந்தரம் 
இளிவரல்  = தொடர்ந்து படரும் மானக்குறை என்பதால் வருத்தம் என்பதற்கு துன்பம் என்ற பொருளே சரியனதாகும் எனலாம்
மேற்காண் சான்றுகளின் அடிப்படையில் வருத்தம் என்பது பயன் தராத வீண்முயற்சியின் விளைவாக உண்டாகும் துன்பம்  எனலாம். எனவே வருத்தம் என்பதன் உட்கருத்து  துன்பம் என்பதே இதன் வழி புலானாகின்றது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக