கலை, கைவினைத் துறைகளில் ஈடுபடுவோருக்கும், பிறருடன் சகஜமாகப் பழகுவோருக்கும் வயதான காலத்தில் நினைவாற்றல், புரிதல் திறன் ஆகியவற்றில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ரோசஸ்டர் நகரிலுள்ள மேயோ மருத்துவமனையைச் சேர்ந்த ரோஸ்பர்ட் ராபர்ட் என்பவர் இதுகுறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு, சராசரியாக 87 வயது கொண்ட, நினைவாற்றல், புரிதல் திறனில் எந்தக் குறைபாடும் இல்லாத 256 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓவியக் கலை, சிற்பக் கலை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றில் அவர்களது பங்கேற்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நண்பர்களுடன் பழகுவது, புத்தகங்கள் படிப்பது, சுற்றுலா செல்வது, கணினி, இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, இணையதளம் மூலம் தகவல்களைத் தேடுவது, மின் வணிகத்தில் பொருள்களை வாங்குவது ஆகிய அவர்களது பழக்க வழக்கங்களும் பதிவு செய்யப்பட்டன.
சராசரியாக நான்கு ஆண்டுகள் கழித்து, இந்த 256 பேரில் 121 பேருக்கு "எம்.சி.ஐ.' எனக் கூறப்படும் மிதமான புரிதல் குறைபாடு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குறைபாடு ஏற்பட்டவர்களையும், அவர்களது கலை ஈடுபாடு, பழக்க வழக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கலைத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு நினைவாற்றல், புரிதலில் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு 73 சதவீதம் குறைவு எனத் தெரிய வந்தது. மேலும், நண்பர்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை கொண்டோரை அந்தக் குறைபாடு தாக்கும் வாய்ப்பு 55 சதவீதம் குறைவு எனவும் தெரிய வந்தது. கணினியைப் பயன்படுத்துவதாலும் எம்.சி.ஐ. குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கணினி பயன்படுத்தாதவர்களைவிட இவர்களது நினைவாற்றல், புரிதல் திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 53 சதவீதம் குறைவு என அந்த ஆய்வில் தெரிய வந்தது. அமெரிக்க நரம்பியல் அகாதெமி வெளியிடும் "நியூராலஜி' அறிவியல் இதழில் இந்த ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக