புதன், 29 ஏப்ரல், 2015

தமிழகத்தின் நிகழ்த்துக் கலை மரபில் முக்கியமான பிரகலாத சரித்திரம் நாடகம் புத்துயிர் பெற்றிருக்கிறது.


கி.பி.1634 முதல் 1673 வரை ஆட்சிபுரிந்த தஞ்சை நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கர், 32-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதியவர். தான் வாழும் காலத்திலேயே பெரும் பாலான நாடகங்களை மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கச் செய்துள்ளார். அவர் எழுதிய நாடகங்களில் பிரகலாத நாடகமும் ஒன்று. ஒடிசா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பிரகலாத நாடகம் இன்றளவும் நிகழ்த்தப்பட்டுவருகிறது.

நாயக்கர்களின் கலைத்தொண்டின் தடயங்களாக மெலட்டூர், சாலியமங்கலம் போன்ற ஊர்களில் 'பாகவத மேளா' என்று இந்த நாடகம் ஆண்டுதோறும் தெலுங்கு மொழியில் நடத்தப்பட்டுவருவது பிரபலமான ஒன்று. இவ்வகையில், ஆண்டுதோறும் நரசிம்ம சுவாமி வழிபாடாகத் தமிழிலும் பிரகலாத நாடகம் பல ஊர்களில் பல்வேறு சமுதாயங்களால் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கூத்து, நடனம், நாடகம் என்று பல மரபு நிகழ்த்துக் கலைகள் வெறும் கேளிக்கையாக மட்டும் இல்லாமல், ஒரு வழிபாட்டுச் சடங்காகவும் காலம்காலமாக இருந்துவருகின்றன. வடதமிழ்நாட்டில் இன்றளவும் விமர்சையாக நடத்தப்படும் பாரதக் கூத்துபோல் திருவாரூரில் நடத்தப்படும் மனுநீதிசோழன் நாடகம், திருசெங்காட்டங்குடியில் நடத்தப்படும் சிறுத்தொண்டர் நாடகம் போன்றவை அவ்வகையிலானவை. அவற்றுள் மிகவும் பிரபலமானதும், பல இடங்களில் நடிக்கப்படு வதும் பிரகலாத சரித்திரம் எனப்படும் இரணியன் நாடகம்.

நரசிம்ம வழிபாட்டின் தொன்மை

பரிபாடல், சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களில் காணும் குறிப்புகளாலும், பல்லவர் கால சிங்கவேள் கடவுளின் கோயில்கள் மற்றும் புராணச் சிற்பங்கள் வாயிலாகவும், ஆழ்வார் பாசுரங்களாலும் தமிழகத்தில் நரசிம்ம வழிபாட்டின் தொன்மையை அறியலாம். கம்பராமாயணத்தின் இரணிய வதைப்படலம் மூலம் இரணியன் கதை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

தமிழில் நடத்தப்படும் பிரகலாத சரித்திரம், மராட்டிய போசல மன்னர்களின் காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன என்பதைச் சில ஊர்களின் நாடகப் பிரதிகளின் மூலம் அறிய முடிகிறது. இந்த நாடகப் பிரதிகளில் கம்பராமாயணப் பாடல்களும் இடம் பெறுகின்றன.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக