திங்கள், 9 டிசம்பர், 2013

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முழு கவனமும், கேள்வி தாளில் இருந்தால் தான் மூன்று மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிக்க முடியும். கவனத்தை சிதற விட வேண்டாம்,'' என கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார். குரோம்பேட்டை, எம்.ஐ.டி., அரங்கில், நேற்று நடந்த, "தினமலர்' ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: மாணவர்களை பார்த்து உருப்படாதவன், ஒன்றுக்கும் லாயக்கற்றவன் என, கூறுவது மூடநம்பிக்கை. ஒவ்வொரு மாணவரிடமும், ஒரு திறமை மறைந்து கிடக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதில் தான், முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். தேர்வுக்கு செல்லும் போது, குழப்பத்துடன் செல்ல வேண்டாம். இது வருமா அல்லது வராதா, நான் படிக்காத கேள்வி வந்தால் என்ன செய்வது போன்ற குழப்பம் தேவை இல்லை. வெளியே வரும்போது, சக மாணவர்களிடம் எழுதிய விடை குறித்து விவாதிக்க வேண்டாம். அது, அடுத்த நாள் தேர்வுக்கான படிப்புக்கு தடையாக அமையும். தேர்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதை தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். பெற்றோர்களும், அவர்களிடம் பக்குவமாக அணுக வேண்டும். தனியாக இருக்க முயலாதீர்கள், படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். கவனச்சிதைவு ஏற்படுத்த, நம்மை சுற்றி பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. 12ம் வகுப்பு முதல் கல்லூரி முடியும் வரை விடலை பருவம். 98 சதவீதம் தமிழ் திரைப்படங்கள், உணர்ச்சியை மட்டும் ஏற்படுத்த கூடிய காதல் படங்களாக வருகின்றன. பள்ளி வளாகத்தை சுற்றி பாட்டு பாடுவது, திரைப்படத்தில் மட்டும் தான் சாத்தியம். நிஜத்தில் நடக்க கூடியது இல்லை. அதை பார்க்கும் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். "எதுவாக ஆவேன் என்று ஆசைப்பட்டேனோ, அதுவாக நான் ஆவேன்' என்ற மனஉறுதி ஏற்பட வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் நல்ல மதிப்பெண், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு அடுத்து ஒரு நல்ல வேலை, அதில் கிடைக்கும் முதல் ஊதியத்தில் அம்மாவுக்கு ஒரு சேலை, அப்பாவுக்கு ஒரு வேட்டி என்ற உறுதி, பிளஸ் 2 படிக்கும் போதே ஏற்பட்டால், இந்த சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். நீங்களும், நல்ல மனிதர்களாக சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக