மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) நள்ளிரவு 12.49 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் மொத்தம் 300 நாள்களில் 44 கோடி கிலோமீட்டர் பயணித்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சென்றடையும்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு, கனிம வளம், வளிமண்டலம் போன்றவற்றை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில் அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலத்தைச் செலுத்துவதற்காக 440 நியூட்டன் என்ஜினில் உள்ள திரவ எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு எரிக்கப்பட்டது. மொத்தம் 23 நிமிஷங்கள் எரிந்தபிறகு, விண்கலத்தின் வேகம் விநாடிக்கு மேலும் 648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் மணிக்கு 41 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் செலுத்துவதற்காக மொத்தம் 198 கிலோ திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் விண்கலத்தின் வேகம் மணிக்கு 35 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 41 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன் சென்ஸார் கருவி, லிமான் ஆல்பா போட்டோமீட்டர் உள்ளிட்ட 5 கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.
புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்லும் விண்கலம், விண்வெளியில் 300 நாள்கள் மிகக் கடினமான பயணத்தை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும்.
அதன்பிறகு, செவ்வாய் கிரகத்துக்கு அருகில் 300 கிலோமீட்டரும், தொலைவில் 80 ஆயிரம் கிலோமீட்டரும் கொண்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்படும்.
விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைவதற்குள் அதன்பாதை மூன்று முறை சரிசெய்யப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலத்தை துல்லியமாகச் செலுத்தும்வகையில் இவை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூமியிலிருந்து மிக நீண்ட தொலைவுக்கு விண்கலம் பயணிக்க இருப்பதால் சிக்னல்கள் சென்று சேர்வதிலும், அங்கிருந்து பெறுவதிலும் 6 முதல் 20 நிமிஷங்கள் வரை காலதாமதமாகும்.
எனவே, விண்கலத்தில் ஏற்படும் கோளாறுகளை தானாகவே கண்டறியவும், சரிசெய்யவும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. விண்கலத்தில் உள்ள கருவிகளைச் செயல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பல கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும். சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் இந்தக் கட்டளைகளும் விண்கலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
விண்கலத்தில் மிகப்பெரிய கோளாறோ, விபத்தோ ஏற்பட்டால் பூமியிலிருந்து கட்டளைகள் கிடைக்கும் வரையில் அது தற்காத்துக்கொள்ளும் வசதியும் (நஹச்ங் ம்ர்க்ங்) விண்கலத்தில் உள்ளது.
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்த 2 நாள்களில் பூமிக்கு படங்களையும், தகவல்களையும் அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5-ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து அருகில் 255 கிலோமீட்டரும், தொலைவில் 23,566 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை ராக்கெட் துல்லியமாக நிலைநிறுத்தியது.
புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்ல மணிக்கு 40 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் பயணிக்க வேண்டும். அந்த வேகத்தைப் பெறுவதற்காகவும், செவ்வாயை நோக்கிய பாதையில் செல்வதற்காகவும் நவம்பர் 7 முதல் 16 வரை ஐந்து முறை விண்கலத்தின் பாதை அதிகரிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கான பாதையில் செல்வதற்கு முன்பாக, பூமிக்கு அருகில் 217 கிலோமீட்டரும், தொலைவில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக