நூலகங்களில், குட்டீஸ்களை வாசகர்களாக்க, நான்கு மாவட்டங்களில், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மாநில மைய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், நடுமாடும் நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என, மொத்தம், 3,900 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நூலகங்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை, சென்னை, மதுரை மற்றும் சிவகாசியில் உள்ள பதிப்பகங்களில் இருந்து, லட்சக்கணக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழக சட்டப் பேரவையில், மே மாதம், பள்ளி கல்வித் துறைக்கான, மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, "விருதுநகர், ஈரோடு, மதுரை, திருச்சி என, நான்கு மாவட்ட, மைய நூலகங்களில், தலா, 5 லட்சம் ரூபாய் செலவில், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, நான்கு மாவட்ட மைய நூலகங்களிலும், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு துவக்க, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், 1.5 லட்சம் ரூபாய் செலவில், குழந்தைகளுக்கான மேஜை, நாற்காலிகள் உட்பட, தேவையான பொருட்கள் வாங்கப்படும். அத்துடன், குழந்தைகள் பிரிவின், சுவரில் வர்ணம் பூசப்பட்டு, கார்ட்டூன் படங்கள் வரையப்படும். உலக உருண்டை, புவியியல் வரை படங்கள், கல்வி குறுந்தகடுகள், இரும்பு புத்தக அட்டம் (ரேக்குகள்), 42 அங்குல "டிவி' போன்றவையும் இடம்பெறும். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலர், சபீதா பிறப்பித்துள்ளார்.
நூலக அதிகாரிகள் கூறியதாவது: நான்கு மாவட்ட மைய நூலகங்களில், ஒரு பகுதி, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்படுவதால், குழந்தைகள் ஆர்வத்துடன் வந்து, புத்தகங்கள் படிப்பர். இதன்மூலம், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வளரும். பள்ளிகள் மூலமும், குழந்தைகளை அழைத்து வரவும் ஏற்பாடு செய்வோம். இங்கு வந்து செல்லும் குழந்தைகளை, அந்தந்த பள்ளிகள் மற்றும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு செல்லும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு நூலக அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக