10.55 AM: ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.
10.54 AM: நீதிமன்ற வளாகத்துக்குள் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீஸார் அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
10.50 AM: சரியாக 10.42 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருக்கிறார். அவருடன் சசிகலா, இளவரசியும் உள்ளனர். 10.55 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
10.45 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஓசூர் சாலையில், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
10: 38 AM: நீதிமன்றத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற சேலை உடுத்தியிருந்தார். பச்சை நிறம் அவரது ராசியான நிறம் என்பது கவனிக்கத்தக்கது.
10.35 AM: வி.வி.ஐ.பி. பாஸ்கள் அளிக்கப்பட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள், பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
10.29 AM: நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் வந்தடைந்தனர்.
10.24 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹார நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
10.15 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. செய்தி சேகரிப்பதற்காக நீதிமன்றத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் செய்தியாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
10.10AM: நீதிமன்ற வளாகத்திற்குள், அதிமுகவினர் மதுரை ராஜன் செல்லப்பா, முத்துராமலிங்கம், சசிகலா புஷ்பா, செங்கோட்டையன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் அமைச்சர்கள் செலூர் ராஜூ, மாதரவரம் மூர்த்தி, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, ரமணா, சின்னையா, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.பி.,சரோஜா, காஞ்சி பன்னீர் செல்வம் மற்றும் எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10.05 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் பெங்களூரில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதேவேளையில், சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
10.00 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.குன்ஹா பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.
9.58 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ. தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து செய்தியாளர்கள நடந்து செல்கின்றனர்.
9.54 AM: பரப்பன அக்ராஹாரா பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் கடைகள் மூடல்.
9.48 AM: முக்கியப் புள்ளிகள் வாகனங்கள் கூட ஒரு கி.மீ-க்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9.45 AM: போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் மற்றும் அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனைவரையும் நடந்து செல்லுமாறே போலீஸார் வலியுறுத்துகின்றனர்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செல்லும் வழியில் ஓசூர் சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
9.40 AM: பெங்களூர் மடிவாலா முதல் எலக்டரானிக் சிட்டி வரையிலான 5 கி.மீ. தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
9.08 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதால், பெங்களூரில் அவர் வரும் வழி முழுவதும் கட்-அவுட், பேனர்களை அதிமுக-வினர் வைத்துள்ளனர்.
9.06 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்திற்குள் தங்களை அனுமதிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு.
8.41 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிறப்பு நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8.41 AM: சென்னை - போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் புறப்பட்டனர்.
8.40 AM: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. |
வரலாறு காணாத பாதுகாப்பு
சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தமிழக எல்லையான ஓசூரில் தங்கியுள்ளனர். 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக எல்லையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றன. பஸ், ரயில் மற்றும் விமானம் மூலமாக பெங்களூர் வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீதிபதி டி'குன்ஹாவின் அசராத அணுகுமுறை
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும், அசராத அணுகு முறையும் உள்ளது. |