கடந்த மூன்று வருடங்களாக மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலரும், பணிபுரியும் சில இளைஞர்களும் இணைந்து ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியப் பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர். ஆனால், அவர்கள் செயலை ஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட் போல் ' பக்கெட்' அடைமொழியுடன் அவர்கள் பிரபலப்படுத்தவில்லை. செல்ஃபி எடுத்து பிரச்சாரமும் செய்யவில்லை.
இப்போது இவர்கள், ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்குவதற்காக 'லேக்டோஜன் டின் சேலஞ்ச்' துவக்கியுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனை முன்வைத்துள்ள கோரிக்கையை அடுத்து, ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் பவுடர் வழங்குவதற்காக 'லேக்டோஜன் டின் சேலஞ்ச்' துவக்கியுள்ளனர். எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 17 குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த சேலஞ்சை அவர்கள் துவக்கியுள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட முதியோர்களுக்கும் இவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வந்திருக்கின்றனர். ஆனால், அத்தனையும் அமைதியாகவே நடைபெற்றிருக்கிறது. இந்தக் குழுவிற்கு பெயர் 'படிக்கட்டுகள்'
'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' இணையத்தில் மெகா ஹிட்டாக, இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது.
இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி (38) தொடங்கி வைத்தார். அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும். அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் (tag) செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சேலஞ்சின் நோக்கம்.
மஞ்சுலதா கலாநிதியின் முயற்சி 'படிக்கட்டுகள்' குழுவுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளது. தங்கள் முயற்சியை முன்னரே உலகறியச் செய்திருந்தால் இந்த தொண்டுக்கு பேராதரவு கிடைத்திருக்கும் என உணரச் செய்துள்ளது.
படிக்கட்டுகள் அமைப்பின் நிறுவனர் கிஷோர் கூறியதாவது: " சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையான பசி, ஏழ்மைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தற்போதைக்கு எங்கள் குழுவில் 500 ஆர்வலர்கள் உள்ளனர். ஏழைகளுக்கு உணவு, ஆதரவற்றோர், முதியோருக்கு உணவு, மருத்துவ உதவிகள், சேரிப் பகுதிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல் என பல்வேறு தொண்டுகளை எங்கள் குழுவினர் தாமாகவே முன்வந்து செய்கின்றனர். எல்லாமும் பெற்றவர்கள் எதுவுமே இல்லாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். நிறைய ஆதரவற்றோர் இல்லங்கள் போதிய உதவி இல்லாமல் தள்ளாடி வருகின்றன. உதவி செய்பவர்கள் தொடர்ந்து ஒரு சில இல்லங்களுக்கே உதவுகின்றனர். ஆனால், நாங்கள் முதலில் உதவிக்காக காத்திருக்கும் ஆதரவற்றோர், முதியோர், குழந்தைகள் காப்பகங்களை அடையாளம் கண்டோம். பின்னர், அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை வழங்கி வந்தோம். இப்போது எங்களது குழு வளர்ந்துள்ள நிலையில், மருத்துவ உதவியும், பண உதவியும் கூட செய்து வருகிறோம்" என்றார்.
கிஷோர், சென்னை டி.சி.எஸ் மையத்தில் பணி புரிந்து வருகிறார். ரைஸ் பக்கெட் சேலஞ்ச் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த பின்னரே அதே பாணியில் தனது தொண்டையும் முடுக்கி விட்டிருக்கிறார் கிஷோர். ஆகஸ்ட் 29-ம் தேதி தங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். 'படிக்கட்டுகள் குழுவிற்கு உதவும் ஆர்வலர்கள் ஒரு கிலோ அரிசியை தானமாக அளித்து, அதை புகைப்படம் எடுத்து பகிர வேண்டும்' என வேண்டுகோள் வைக்கப்பட்டது. விளைவு, கடந்த 3 வாரங்களில் 500 கிலோ அரிசி தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட கிஷோர், தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், புதிய உடைகள், பட்டாசுகள், இனிப்புகளையும் சேகரித்து வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
இவர்களது இணைய முகவரி: www.padikkattugal.org. படிக்கட்டுகள் அமைப்பில் இணைய விரும்பும் இளைஞர்கள் 9677983570என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக