அழகும் அமைதியும் நிறைந்திருக்கிற காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரோஜாக்களை மலரச் செய்யும் ஒரு இளங்காலைப் பொழுதில்தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. எதிரி நாட்டின் துப்பாக்கி ரவைக்கு இலக்காகிச் சாய்கிறான் ஒரு ராணுவ வீரன்.
அல்லும் பகலும் அவனையே நேசித்துக் கைப்பிடித்த காதல் மனைவி இளம் விதவையாகிறாள். அவளுடைய வாழ்வில் ஒளியேற்ற வேண்டியவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். அரசின், அதிகாரத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி ஓய்கிறாள்.
முட்டி மோதி முன்னேறத் தன் கணவனின் பெயரில் நடனப்பள்ளி தொடங்குகிறாள். எல்லையில் தன்னைப் போல் கணவனை, மகனை, தகப்பனை இழந்து நிற்கும் அபலைக் குடும்பங்களுக்கு குத்துவிளக்கேற்றும் அறப்பணியைத் தொடர்கிறாள். இந்த நெஞ்சுரத்துக்குச் சொந்தக்காரர் சுபாஷினி வசந்த்.
குளிர்மழை ஓய்ந்த காலைப் பொழுதில் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் சுபாஷினி வசந்தைச் சந்தித்தேன்.
காதலை உணர்ந்த தருணம்
சுபாஷினிக்கும், அவருடைய கணவர் கர்னல் வசந்த் வேணுகோபாலுக்கும் சொந்த ஊர் பெங்களூர். இருவருக்குமே தாய்மொழி தமிழ். இருவரது வீடுகளும் அருகருகே இருந்ததால் இருவருக்கும் சிறு வயதிலேயே நட்பு மலர்ந்தது. இருவரும் பரதநாட்டியத்தையும் இசையையும் ஒன்றாகக் கற்றுக்கொண்டார்கள்.
வசந்த் வேணுகோபாலின் அப்பா மத்திய அரசு வேலையில் இருந்ததால் அவர்கள் மைசூர், ஷிமோகா, உடுப்பி, மங்களூர் என கர்நாடகா முழுவதும் சுற்றி வந்தார்கள். நீண்ட இடை வேளைக்குப் பிறகு கல்லூரி நாட்களில்தான் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
வசந்த் வேணுகோபாலுக்கு சிறு வயதில் இருந்தே ராணுவத் தில் சேர வேண்டும் என்பதுதான் லட்சியம். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது என்.சி.சியில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். 1988-ல் டேராடூனின் இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார்.
அந்தப் பிரிவுதான் தங்களுக்குள் இருந்த காதலை உணர்த்தியது என்கிறார் சுபாஷினி. "பல நேரங்களில் எங்கள் இருவரின் விருப்பங்களும் மன ஓட்டங்களும் ஒரே புள்ளியில் ஒட்டிக்கொள்ளும். அவர் டேராடூனில் இருந்தபோதுதான் அவர் மீதான தேடலும் அன்பும் அதிகரித்தது.
ஒரு முறை அவர் விடுமுறைக்கு வந்தபோது என்னிடம் தன் நேசத்தைச் சொன்னார். நானும் மறைக்காமல் ஒப்புக்கொண்டேன். அவருக்குள்ளும் அத்திப் பூப்போல காதல் ஒளிந்து கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று நெகிழ்ச்சி யுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சுபாஷினி.
கைசேர்ந்த கனவு
அதன் பிறகு ஏழு ஆண்டுகள் கடிதத்தின் வாயிலாகவே இருவரின் நேசமும் பலப்பட்டது. சின்னச் சின்ன கவிதைகள், ஓவியம், புகைப்படம் வாயிலாகக் காதல் வளர்ந்தது. இவர்களின் காதலை வலுப்படுத்தியது திருமணம். பெங்களூர், குன்னூர், வெலிங்டன், சிக்கிம், ராஞ்சி, ஜம்மு-காஷ்மீர் என வசந்த் வேணுகோபாலுக்குப் பல ஊர்களுக்கு இட மாறுதல் கிடைத்தது.
தன் கணவர் நாட்டுக்குச் சேவை செய்தால், சுபாஷினியோ ராணுவக் குடியிருப்பில் இருக்கும் பெண்களுக்கு நடனம் சொல்லித் தருவார். அன்பாகவும் அழகாகவும் நாட்கள் கழிந்தன. இவர்கள் மகிழ்ச்சியின் அடை யாளமாக ருக்மினி, யசோதா என இரு மகள்கள் பிறந்தனர்.
சாதாரண ராணுவ வீரனாக வாழ்க்கையைத் தொடங்கிய வசந்த், படிப்படியாக முன்னேறி இளம் வயதிலேயே ராணுவத்தில் கர்னலாக உயர்ந்தார். அவருக்கு மீண்டும் காஷ்மீருக்குப் பணி மாறுதல் வந்தது. அதனால் பிள்ளைகளின் படிப்பு தடைப்படக் கூடாது என்பதற்காக சுபாஷினியையும் குழந்தைகளையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
திசைமாறிய வாழ்க்கை
அதன் பிறகு தன் வாழ்க்கையைச் சூறையாடிய அந்த நிகழ்வை வேதனையுடன் விவரிக்கிறார் சுபாஷினி.
"அன்று நடந்ததை என்னவென்று சொல்ல? விதியின் சதியா? தீவிரவாதிகளின் கொடுஞ்செயலா? 2007-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, 'அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல் வசந்த் வேணுகோபால் உட்பட மூவர் பலி' என்ற செய்தி எங்கள் உலகத்தையே சுக்குநூறாக நொறுக்கியது. எங்கள் குடும்பத்தில் பேரிடி விழுந்தது.
ஒரே மகனைப் பறிகொடுத்த பெற்றோர், கணவனை இழந்த நான், தகப்பனை நாட்டுக்கு வாரிக் கொடுத்த பிள்ளைகள்... அனைவருமே உருக்குலைந்து கண்ணீரில் கரைந்தோம்.
ஆறுதல் சொல்லவும், எங்களைத் தேற்றவும் யாருமில்லை. அரசு மரியாதையுடன் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது என இப்போது செய்தித்தாள்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அந்த அளவுக்கு அந்தக் கொடிய நாட்களில் நான் என்னை மறந்து நடைபிணமாக வாழ்ந்தேன்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை என எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக்கொண்டோம். அனைத்தையும் ஆற்றும் அருமருந்து காலத்திடம்தானே இருக்கிறது" என்று சொல்லும் சுபாஷினி, அதற்கு மேல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் வலியோடும் வேதனையோடும் கடந்து வந்திருக்கிறார்.
கர்னல் வசந்த் வேணு கோபால் இந்திய நாட்டிற்கும் ராணுவத்திற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவருக்கு ஜனவரி 26, 2008 குடியரசு தினவிழாவில் 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டது.
புது விடியல்
கணவரின் மறைவிற்குப் பிறகு வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்தார் சுபாஷினி. அப்போது அவருடைய குடும்பத்தினரும், புகுந்த வீட்டாரும் உறுதுணையாகவும் உதவியாகவும் இருந்திருக்கிறார்கள்.
இரண்டு மகள்களையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அதனால் மீண்டும் சலங்கையைக் காலில் கட்டிக்கொண்டு நடனப்பள்ளிகளுக்குச் சென்று நடனம் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு தன் கணவர் பெயரில் 'வசந்த ரத்னா' என்ற நடனப்பள்ளி ஆரம்பித்து, இதுவரை 500-க்கும்
மேற்பட்டவர்களுக்கு பரதநாட்டி யம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதில் கிடைக்கும் வருமானம் மூலம் தன் பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறார்.
சுபாஷினியின் கணவர் மறைந்தபோது கர்நாடக அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், சில தலைவர்களும், 'கர்னல் வசந்த் குடும்பத்திற்கு நாங்கள் பொறுப்பு. அவருடைய குழந்தைகளின் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய மனைவிக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்கிறோம்' என அறிவித்தார்கள். ஆனால் எதையுமே செய்யவில்லை என்கிறார் சுபாஷினி.
அரசின் மெத்தனம்
"அசோக் சக்ரா விருது பெற்றவரின் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.1.25 லட்சம் அல்லது 2 ஏக்கர் நன்செய் நிலம் வழங்க வேண்டும். அதேபோல் அவர்களுடைய குடும்ப செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.800 கட்டாயம் கொடுக்க வேண்டும் என ராணுவச் சட்டம் சொல்கிறது. தற்போதைய விலைவாசிக்கு அரசு தரும் பணம், ராணுவ வீரரின் குடும்பத்திற்குப் போதுமானதா?" என்று கேள்வி கேட்கும் சுபாஷினி, தனக்குப் பணம் வேண்டாம், 2 ஏக்கர் நிலம் வழங்குமாறு கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதினார்.
ஆண்டுகள் பல கடந்த பிறகும் எந்தப் பதிலும் இல்லை. அதேபோல் தனக்கு நியாயமாக வழங்க வேண்டியவற்றை வழங்குமாறு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், ராணுவ தலைமையகத்திற்கும் கடிதம் எழுதினார். 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. நீங்கள் கர்நாடக அரசைத் தான் தொடர்பு கொள்ள வேண்டும்' என்ற பதில்தான் கிடைத்தது. அதனால் மீண்டும் கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான அரசி யல் தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டார். யாரும் எவ்வித உதவியும் செய்ய வில்லை.
"என் கணவர் இறந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்குள்ள அதிகார மையங்களும், சட்ட விதிமுறைகளும் மிகவும் மெத்தனமாகச் செயல்படுகின்றன. நாட்டிற்காக உயிரைக் கொடுத்தவனின் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்ய முன்வருவதில்லை.
அவனுடைய தியாகத்தைப் போற்றத் தெரியவில்லை" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தும் சுபாஷினி, நாட்டைக் காக்கும் கடமையைச் செய்யும்போது உயிரிழக்கும் ராணுவ வீரனின் குடும்பத்துக்கு, இந்தியா முழு வதும் ஒரே மாதிரியான சட்ட வரை முறைகளை உருவாக்க வேண் டும் என்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.
வழிகாட்டும் அறக்கட்டளை
இந்தப் பணிகளுக்கிடையில் ஒரு ஆத்மார்த்தமான பணியாகத் தன் கணவர் வசந்த் வேணு கோபாலின் சரிதையை, 'Forever forty Colonel Vasanth AC' என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.
தன்னைப் போன்று படித்து, விவரம் தெரிந்தவர்களாலேயே உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கான குடும்ப நிவாரணத் தொகையை பெற முடிவதில்லை. படிக்காத பெற்றோர், விவரம் தெரியாத மனைவி, பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி சுபாஷினியை அச்சுறுத்தியது.
அதனால் நாடு முழுவதும் யுத்தத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தை இணைக்கத் திட்டமிட்டு, 2012-ல் தன் கணவர் பெயரில் 'வசந்த ரத்னா' என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். சில நலம் விரும்பிகள், நண்பர்களின் உதவியால் கிடைக்கும் நிதியுதவியை மறைந்த ராணுவ வீரனின் குடும்பத்திற்கும், பிள்ளைகளின் குடும்பத்திற்கும் கொடுத்து உதவி வருகிறார்.அந்த அறக்கட்டளையில் தற்போது 35 குடும்பங்களை இணைத்திருக்கிறார்கள்.
"பலியான ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறோம். அதே போல் கல்வி மற்றும் தலைமைப் பண்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களுக்கு 'கர்னல் வசந்த் வேணுகோபால் ஏ.சி.' நினைவு விருதையும் வழங்குகிறோம்.
எங்கள் அறக்கட்டளை மூலம் முதலில் கர்நாடகா, பிறகு நாடு முழுவதும் உள்ள பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து, உரிமைகளுக்கு வலுவான குரல் கொடுப்போம். எதையும் தனி யாகக் கேட்டால் நம் நாட்டில் கிடைப்பதில்லை. வாக்குவங் கிக்குத் தானே இங்கு மரியாதை. எங்களுக்காகப் போராட யாரும் முன் வராதபோது நாங்கள் தானே ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்" என அழுத்திச் சொல்கிறார் சுபாஷினி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக