ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த அவசர மனுவில், சிறைத் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்பதால், 389 (1) பிரிவின் கீழ், அரசு தரப்பு பதில் இல்லாமலேயே ஜாமீன் பெற முடியும் என்றும், எனவே ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்ற கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர், ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு அமர்வு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும்.
இதனிடையே, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி'குன்ஹா இன்று கர்நாடக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.ஏ.பட்டேலை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை ஏற்றுக்கொண்டது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார்.
இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அதுதொடர்பான அறிவிப்பாணை வரும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பவானி சிங் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக