|
பொருளணியியல் |
6.1 |
, |
தன்மை - இயல்பு. ஒரு பொருளின் இயல்பை 'உள்ளது உள்ளபடி', 'நேரில் பார்த்தாற் போல்' விளங்குமாறு சொல்வது தன்மை அணியாகும். 'எவ்வகைப்பட்ட பொருளையும், அதன் உண்மைத் தன்மையை விளக்கும் சொற்களால் கூறுவது தன்மை அணி' என்பது இலக்கணம். 'உண்டு வளர்ந்தான்' 'இரண்டு கண்ணன்' என்பன போன்றவை உண்மைகளே. எனினும் இவை தன்மை அணி ஆகா. பொருளின் உண்மைத் தன்மையைச் சொல்லும்போது சொல்லும் முறையில், கேட்போர் மகிழும்படியாக அழகுணர்ச்சியுடன் சொன்னால்தான் அது தன்மை அணி ஆகும். தன்மை அணியின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காண்போம். |
நூற்பா |
(தண்டியலங்காரம், 29) |
பொருட்களின் தன்மைகள்(இயல்புகள்) என நான்கைக் குறிப்பிடுவர். அவை பொருள்தன்மை(ஒரு பொருளாக இருத்தல்), குணத்தன்மை (பொருளின் குணங்கள்), சாதித்தன்மை(பொருளின் இனம் - மனித இனம், விலங்கினம், பறவை இனம் போன்றன), தொழில் தன்மை(பொருளின் செயல்பாடுகள்) என்பனவாகும். செய்யுளில் இந்நால்வகைத் தன்மைகளையும் அமைத்துப் பாடலாம். ஆகவே தன்மை அணி பொருள்தன்மை, குணத்தன்மை, சாதித்தன்மை, தொழில்தன்மை என நான்கு வகைப்படும். |
நூற்பா |
(தண்டியலங்காரம், 30) |
இங்குப் பொருள் தன்மை, தொழில் தன்மை ஆகிய இருவகைகளையும் எடுத்துக்காட்டுகளின் வழி விளங்கிக் கொள்வோம். |
பொருள் தன்மை |
(எ-டு) நீல மணிமிடற்றன் நீண்ட சடைமுடியன் |
(தண்டியலங்கார மேற்கோள்) |
இப்பாடல் சிவபெருமான் என்னும் பொருளின் தன்மையை(தோற்றத்தை) விளக்கிச் சொல்கிறது. |
நீல நிறக் குவளைமலர் போன்ற அழகிய கழுத்தை உடையவன்; நீண்ட சடைமுடியுடையவன்; மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; நெற்றியில் விழியுடையவன்; தோலுடை யணிந்தவன்; கையில் மானையும் கனல் போன்ற மழுவையும் கொண்டவன் |
எனக் கச்சாலை எனும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவனின் தோற்றத் தன்மைகளை விளக்குவதால் இப்பாடலில் அமைந்துள்ள அணி பொருள் தன்மை அணி ஆகும். |
தொழில் தன்மை |
(எ-டு) மான்தோல் பள்ளி மகவொடு முடங்கி |
(பெரும்பாணாற்றுப்படை, 89-96) |
பெரும்பாணாற்றுப் படையில், வேட்டுவப் பெண்களின் அன்றாடச் செயல்களை அழகுற வருணிக்கும் பகுதி இது. அவர்களின் செயல்கள் கண்ணாற் காண்பதுபோலச் சித்திரிக்கப்படுகின்றன. |
அப்போதுதான் குழந்தை பெற்ற பெண்ணைத் தவிர ஏனைய எல்லாப் பெண்களும் காட்டுக்குள் செல்கின்றனர்; இரும்புப் பூண் பிடித்த வலிமையான பாரையால் நிலத்தை அடிமண் மேலாகக் கிண்டுகின்றனர்; அந்தக் கரம்பு நிலப் புழுதியை அளைந்து அதில் கிடைக்கும் மென்மையான புல்லரிசியை எடுக்கின்றனர்; பின்னர்க் குடிசைக்குத் திரும்புகின்றனர்; குடிசை முன்றிலில் விளாமர நிழலில் நிலத்திலேயே உள்ள பாறை உரலில் அந்த அரிசியை இட்டுக் குற்றுகின்றனர். |
இவ்வாறு வேட்டுவப் பெண்களின் செயல்(தொழில்) தன்மை அழகாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது தொழில் தன்மை அணி ஆகும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக