வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி



கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் மனுவில்: "தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறது. அரசு சட்டவிரோதமாக செயல்பட்ட 88 சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொண்டது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரானைட் ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்துள்ளது.

தமிழக வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் தலைமையிலான குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சகாயம் தலைமையிலான குழுவை உயர் நீதிமன்றம் நியமித்து, தனியாக விசாரணை நடத்தப்படுமானால், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்று வரும் விசாரணையில் தாமதமும், குழப்பமும் ஏற்படும்.

சகாயத்தை நியமிப்பதற்கு முன்னர் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் உரிய ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

தமிழக அரசு வாதம்:

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வைத்த வாதத்தில், 'கிரானைட் குவாரிகள், கனிம குவாரிகள் தொடர்பாக 90 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. 77 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சகாயம் தலைமையிலான குழு அமைப்பது தேவையற்றது' என தெரிவித்தார்.

நீதிபதிகள் கருத்து

தமிழக அரசின் வாதத்துக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, "அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், தமிழகத்தில் பரவலாக சட்டவிரோதமான கிரானைட், கனிம குவாரிகள் முறைகேடுகள் நடைபெற்றுவதை உறுதி செய்துள்ளது. இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.

சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும். ஆகையால், சகாயம் குழுவுக்கு தடை விதிக்க முடியாது" என்று கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக