ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இம்மாதம் 27-ம் தேதிக்கு மாற்றிவைத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தீர்ப்பு அறிவிக்கப்படும் இடம், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் இருக்கும் நீதிமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாகவும் நீதிபதி டி'குன்ஹா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஜெ. சார்பில் புதிய மனு:
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதில் அனைத்து விதமான விசாரணைகளும் முடிந்து, இறுதி வாதமும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்தது. நீதிபதி டி'குன்ஹா இவ்வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நேற்று (திங்கள்கிழமை) பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக இருக்கிறார். தீர்ப்பு வெளியாகும் (செப்டம்பர் 20) நாளில் அவர் கண்டிப்பாக பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் உயிருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளாலும் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை சிட்டிசிவில் நீதிமன்ற கட்டிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜூனையா உத்தரவிட்டார். அப்போது பெங்களூர் போலீஸார் பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.
எனவே, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தற்காலிகமாக சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் இருக்கும் நீதிமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, செவ்வாய்க்கிழமை இம்மனு மீது விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
தீர்ப்பு தேதி மாற்றம்:
அதன்படி மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதி டி.குன்ஹா, "ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இம்மாதம் 27-ம் தேதிக்கு மாற்றிவைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்.
போலீஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்பு நாளன்று ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராவது அவசியம். வழக்கு ஆவணங்களை 20-ம் தேதிக்குள் பரப்பன அக்ரஹாரம் சிறை வளாக நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்பதால் 27-ம் தேதிக்கு தீர்ப்பு மாற்றப்படுகிறது" இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக