வங்கி அதிகாரி பணி தேர்வுக்கான .எழுத்துத்தேர்வில் கணிதம் (குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்), பகுத்தாராயும் திறன் (ரீசனிங்) ஆகிய இரு பிரிவுகள் முக்கியமானவை.

காரணம் ஒவ்வொன்றிலும் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, தலா 50 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்கள் இருக்கின்றன. எனவே, எழுத்துத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் இந்த இரு பகுதிகளின் வசம் இருக்கின்றன. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்த வாரத்தில் கணிதத்திறன் தேர்வு குறித்து பார்க்கலாம்.

பள்ளிக் கணக்குகள்

"குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்" என ஐ.பி.பி.எஸ். வங்கி அதிகாரி தேர்விலும், "டேட்டா அனலைசிஸ் இன்டர் பிரட்டேஷன்" எனப் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்விலும் கணிதத்திறன் அழைக்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு அளவிலான அடிப்படை கணிதக் கேள்விகள் மற்றும் தரவுகள், அட்டவணைகளில் உள்ள விவரங்களைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்கக்கூடிய வினாக்கள் இதில் இடம்பெறும்.

அடிப்படையில் பார்த்தால் போட்டியாளரின் கணிதத்திறமையைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். பள்ளியில் படிக்கும்போது அரித்மேட்டிக், அல்ஜீப்ரா உள்ளிட்ட அடிப்படைக் கணிதங்களைப் படித்திருப்போம். 10-ம் வகுப்புக்குப் பிறகு கணிதம் தொடர்பு இல்லாத பிரிவுகளில் சேரும் மாணவர்களும், பிளஸ் டூ- க்குப் பிறகு கணிதத்தை முக்கியப் பாடமாகவோ அல்லது துணைப்பாடமாகவோப் படிக்காதவர்களும் பள்ளியில் படித்த கணக்குப் பாடங்களை மறந்திருக்கக்கூடும். தற்போது வங்கித்தேர்வுக்குத் தயாராகும்போது மீண்டும் அவற்றை நினைவில் கொண்டுவர வேண்டும்.

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பின்னம், வர்க்கம், வர்க்க மூலம், கணம், நிகழ்தகவு, சராசரி, விகித்தாசாரம், அசல், வட்டி, தனி வட்டி,கூட்டு வட்டி லாப-நஷ்டக் கணக்கு, நேரம்-தூரம், நேரம்-வேலை எனப் பள்ளி அளவிலான கணக்குகளே கணிதப் பகுதியில் கேட்கப்படுகின்றன.

நேர மேலாண்மை

கணக்கில் ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகள் நன்கு பிடிக்கலாம். நமக்குப் பிடித்தமான அத்தகைய பிரிவுகளில் கேட்கப்படும் வினாக்களுக்குக் கடகடவெனப் பதிலளித்துவிடுவது நல்லது. எல்லா வினாக்களுக்கும் விடையளித்துவிட வேண்டும் என நினைக்கக் கூடாது. நேர மேலாண்மை மிகவும் முக்கியம்.

மேலும், கணிதத்திறன் பகுதியில், அட்டவணைகள், தரவுகள் (டேட்டா), வரைபடங்கள் (சார்ட்டு) கொடுக்கப்பட்டு அதில் இருந்தும் கேட்கப்படும் வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். ஒரே பகுதியில் இருந்து ஐந்தாறு கேள்விகள் தொகுப்பாகக் கேட்கப்படுவதால், கொடுக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொண்டால் அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதில் பதில் அளித்துவிடலாம்.

இந்தப் பகுதியில், படித்து அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ளச் சற்று நேரம் பிடிக்கலாம். எனவே, விடையளிக்கும்போது துல்லியமும், வேகமும் அவசியம். அடிப்படை கணித அறிவு, இந்தப் பகுதி வினாக்களுக்கு விரைவாக விடையளிக்க உதவும். அதேபோல், "ஆட்-மேன் அவுட்" என்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கேள்விகளில் வித்தியாசமானது, மற்றவற்றுடன் தொடர்பு இல்லாதது எது? என்பதைக் கண்டறியும் கேள்விகளும், கொடுக்கப்பட்டுள்ள தொடரின் அடுத்தது எது? என்பதைக் கண்டுபிடிக்கும் வினாக்களும் கணிதத்திறன் பகுதியில் இடம்பெறுகின்றன.

இதற்கும் அடிப்படைக் கணித அறிவு பெரிதும் கைகொடுக்கும். ஒரு கேள்விக்கு விடைதெரியவில்லை என்றால் அதிலேயே முட்டி மோதிக் கொண்டிருக்கக்கூடாது. உடனடியாக அடுத்த கேள்விக்குச் சென்றுவிட வேண்டும். மற்ற வினாக்களுக்கு விடையளித்துவிட்டு அடுத்த ரவுண்டில், விடுபட்ட கேள்வி களுக்கு விடையளிக்க முயலலாம்.

பயிற்சி

கணிதத்திறன் பகுதியைப் பொறுத்தவரையில், எந்த அளவுக்குக் கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சிஎடுக்கிறீர் களோ, அந்த அளவுக்கு அதில் நிபுணத்துவம் பெற்றுவிடலாம். கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதைக் காட்டிலும், விடையளித்த விதத்தை மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சிபெறும் போதுதான், துல்லியமும், வேகமும் தெரிய வரும். எனவே, பயிற்சி... பயிற்சி... பயிற்சி...என்ற தாரக மந்திரத்தை மனதில்வைத்து கணித கேள்விகளுக்கு விடையளித்துப் பயிற்சி செய்யுங்கள். கணிதத் திறன் பகுதியில் கணிசமான மதிப்பெண் பெற்றுவிடலாம். ரீசனிங் எனப்படும் பகுத்தாராயும் திறன் வினாக்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்