திங்கள், 6 ஏப்ரல், 2015

சா.தேவதாஸ், சாகித்ய அகாதெமியின் 2014- ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்க விருதுக்குத் தேர்வு

"லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என்ற ஆங்கில நாவலை தமிழில் மொழியாக்கம் செய்த எழுத்தாளர் சா.தேவதாஸ், சாகித்ய அகாதெமியின் 2014- ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்க விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கிய உலகில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. அந்த வகையில் சிறந்த மொழியாக்க நூலுக்கான 2014- க்கான விருதை சாகித்ய அகாதெமி திங்கள்கிழமை இரவு அறிவித்தது. பல்வேறு மொழிகளில் இருந்து 24 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இலக்கிய விமர்சனம், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், சுயசரிதை போன்ற சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான படைப்புகளை ஒவ்வொரு மொழிக்கும் மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் அதன் நிர்வாகக் குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம், இந்திரன், டாக்டர் தமிழவன் கார்லோஸ் ஆகியோர் அடங்கிய தமிழ் மொழிக்கான தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின்படி, பபானி பட்டாச்சார்யாவின் "ஷேடோ ஃபிரம் லடாக்' என்ற ஆங்கில நூலை தமிழில் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' என மொழியாக்கம் செய்த இலக்கிய எழுத்தாளர் சா.தேவதாஸ், விருதுக்குத் தகுதி பெற்றதாக நிர்வாகக் குழு அறிவித்தது. இதேபோல, திருவள்ளுவர் தமிழில் இயற்றிய "திருக்குறள்' நூலை ராஜஸ்தானி மொழியில் "குறள்-காவியா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக கைலாஷ் மண்டேலா என்பவரும் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தகுதி பெற்றுள்ளார். விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு அவர்களின் படைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட தாமிர பட்டயம், சால்வை, ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட உள்ளன. இவை வரும் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் என்றும் சாகித்ய அகாதெமி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக