அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியது:
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.
குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும், அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக