புதன், 20 நவம்பர், 2013

பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் !

நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு மருந்துகளையே உணவாகப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே.
பீட்சா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் உள்ளிட்ட அயல்நாட்டு உடனடி உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்கு உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவது போன்றவை முக்கிய காரணங்கள்.
இவ்வகை உணவுகளில் அதிகளவிலான ரசாயன உப்பு, ரசாயன கலவைகள், செயற்கையான இனிப்பு, கொழுப்பு வகைகள் உள்ளிட்டவை கலந்துள்ளன. தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட விரும்பி, மாற்று உணவுகளை தேடிப்போன மனிதன் இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களைச் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே உணவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, கொழுப்புச்சத்து குறையவும், உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாகிறது.
சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு, இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுமே உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. கோதுமையை விட சிறுதானியங்களில் 10 சதவீதம் சர்க்கரை சத்து குறைவு; நார்ச்சத்து அதிகம்.
ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதியில்லாத ஏழை, எளிய மக்களின் உணவாக விளங்கிய சிறுதானியங்களின் விலை இன்று பன்மடங்கு உயர்ந்து வசதி படைத்தவர்களின் உணவாக விளங்குகிறது.
பொதுவாக சிறுதானியங்களில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்பு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
தானியங்களிலேயே அதிக சத்து வாய்ந்த கேழ்வரகானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் சூட்டினை சமநிலையில் வைத்திருத்தல், குடலுக்கு வலிமையளித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.
இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள வரகை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையவும், மாத விடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு உடல் நலனை சீராக்கிக் கொள்ளவும் பயனாக அமைகிறது.
செரிமான சக்தியை அதிகரித்து உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருப்பது, வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைப்பது போன்ற தன்மை கம்புக்கு உண்டு. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்து அவர்களின் உடல் வலிமையையும் கூடுதலாக்குகிறது.
வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, ஆகியவற்றுக்கு ஏற்ற உணவான சாமை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாமை உணவை சமைத்து உண்ணலாம்.
உடலுக்கு உறுதியை அளிக்கும் வல்லமையுடைய சோளம் உடல் பருமன், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய உணவான சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
சிறுதானியங்களின் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள அரசும் அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால் அவற்றின் விலை குறைந்து அனைவரும் பயன்படுத்த வழி ஏற்படும்

dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக