மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க சதி நடக்கிறது என்று தமிழக மக்கள் முடிவு செய்யும் நிலை இருப்பதாக பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
தமிழகத்தின் மின் நிலைமை
தமிழ்நாட்டில் இம்மாதம் 2–வது வாரத்தில் இருந்து மின்சார விநியோக நிலைமையில் திடீரென, எதிர்பாராதவிதமாக நேரிட்ட பின்னடைவில் உடனடியாக தலையிடக்கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். 2011–ம் ஆண்டு மே மாதம் நான் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் மின்சார நிலைமை மிகவும் மோசமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.
முந்தைய தி.மு.க. அரசு தொலைநோக்கு பார்வையின்றியும் செயல்படாமல் இருந்ததாலும், மின்தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலம் அப்போது கடுமையான மின்தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில், மின்சார நிலைமையை சமாளிக்க கடும் மின்வெட்டுகளை செய்ய வேண்டியிருந்தது. மின்சாரப் பற்றாக்குறையை அகற்ற, நான் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
பதில் கிடைக்கவில்லை
அதன்படி, புதிய அனல்மின் திட்டங்கள் தொடங்கப்படுவதை விரைவுபடுத்தவும், அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனால், நாட்டில் மின்உற்பத்தி உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து, தமிழகம் மின்சாரத்தை வாங்க வசதி ஏற்படும் என்றும் அப்போது தங்களுக்கு கடிதம் எழுதியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால், எனது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை.
மின் நெருக்கடி சமாளிப்பு
நிலைமை இப்படி இருந்தபோதிலும், எனது அரசு தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் மேற்கொண்ட அபாரமான முயற்சிகளால் 2013–ம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் நல்ல பலன் கிடைக்க தொடங்கியது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல், கடும் மின்சார நெருக்கடியை சமாளித்தது தமிழக அரசின் வியக்கத்தக்க சாதனையாகும். ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு நவம்பர் மாத மத்தி வரை தமிழகத்தில் மின்துண்டிப்பு ஏதும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் 25–ந் தேதி சட்டப்பேரவையில் நான் தாக்கல் செய்த அறிக்கையில், மின்தேவைக்கும், இருப்புக்கும் இடையே உள்ள 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டுவிட்டது.
மேலும், மின்விநியோகத்தில் தன்னிறைவு பெறவும், இதன் விளைவாக 2014–ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறுவதற்கு எனது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அந்த அறிக்கையில் பட்டியலிட்டேன். மின்சார நிலைமை மேம்பட்டதால், வீட்டு உபயோக நுகர்வோர்களும், விவசாயிகளும் தொழிற்சாலை நுகர்வோர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மின்சார விநியோக நிலைமையை அடியோடு தாம் மாற்றிக்காட்டியதற்காக அவர்கள் அனைவரும் எனது அரசுக்கு புகழாரம் சூட்டினார்கள்.
தேசிய அனல் மின் கழகம்
ஆனால், சட்டப்பேரவையில் தாம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், மாநிலத்தின் மின்சார நிலைமை வேகமாக மோசமடைந்தது. இதற்கான காரணங்களை உன்னிப்பாக ஆய்வு செய்தால், கூட்டு நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டதுதான் இதற்கு முக்கிய காரணம் என புலனாகிறது.
மேலும், ‘பெல்’ நிறுவனத்தால் சோதனை உற்பத்தி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அனல்மின் திட்டங்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்திடம் ஒப்படைக்கப்படாததும் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான என்.டி.பி.சி., பெல், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் காரணமாகவே சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு மின்உற்பத்தி திடீரென எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது.
வல்லூரில் மின் உற்பத்தி
அண்மையில் சோதனை உற்பத்தியை தொடங்கிய வடசென்னை அனல்மின் நிலைய 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய 2–வது அலகில், கடந்த 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. இந்த 2–வது அலகு தற்போதும் பெல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது.
இந்த தீ விபத்து காரணமாக, பெல் கட்டுப்பாட்டின் கீழுள்ள சோதனை அடிப்படையிலான 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய ஒன்றாவது இரட்டை அலகும், உற்பத்தியை தொடங்க முடியாததால், மேலும் சுமார் 600 மெகாவாட் இழப்பு ஏற்பட்டது. என்.டி.பி.சி. மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழுள்ள டேன்ஜெட்கோ ஆகியவை கூட்டாக தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளில் சென்னை அருகே உள்ள வல்லூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், இவ்வாண்டு ஆகஸ்டு மாதமும் உற்பத்தியை தொடங்கின.
நிலக்கரி கிடைக்கவில்லை
இந்த அலகுகள் அண்மைக்காலம் வரை சுமார் 800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தன. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் டால்செர் சுரங்கத்தில் இருந்து போதுமான நிலக்கரி வழங்கப்படாததால், 500 மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அலகு கடந்த 14–ந் தேதி முதல் செயல்படவில்லை. மேலும், நிலக்கரி பற்றாக்குறையால் வல்லூர் கூட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விநியோகத்தையும், உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தையும் நம்பியிருக்கும் டேன்ஜெட்கோவின் அனல்மின் நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக 500 மெகாவாட் அனல்மின் திறன் உள்ளபோதிலும், நிலக்கரி கிடைக்காத காரணத்தால், இந்த கூட்டு நிறுவனம் செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. எனினும் டேன்ஜெட்கோவின் அனல்மின் நிலையங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி இருப்பை கொண்டு நிலைமையை சமாளித்து வருகின்றன.
இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும் வகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஆயிரத்து 113 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 777 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் சில அலகுகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் பழுது நீக்கல் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்துக்கு 336 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று, சென்னை அணுமின் நிலையத்தின் ஒரு அலகும், கைகா அணுமின் நிலையத்தின் ஒரு அலகும் செயல்படாததால், மேலும் 241 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாப்தாவை எரிபொருளாக கொண்டு செயல்படும், டேன்ஜெட்கோவுடன் இணைக்கப்பட்ட பி.பி.என். தனியார் நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து போதிய நாப்தா கிடைக்காததால் செயல்படாமல் உள்ளது. இந்த நிலை, அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மின் துண்டிப்பு
எனவே மத்திய மின்உற்பத்தி நிலையங்கள், தேசிய அனல்மின்சார கழகத்தின் கூட்டு நிறுவனங்கள், பெல் செயல்படுத்தி வரும் திட்டங்கள் நாப்தாவை நம்பியிருக்கும் தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மொத்த மின் இழப்பு சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது.
டேன்ஜெட்கோவின் 12 அனல்மின் நிலையங்களும், முழு உற்பத்தியை செய்து வரும் நிலையில், மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மோசமாக செயல்பட்டு வருவது விந்தையான நேர்வாக தோன்றுகிறது. இதனால், இம்மாதம் முதல் 2 வாரங்கள் வரை மின்துண்டிப்பு ஏதும் இல்லாமல் இருந்த தமிழகத்தில், மீண்டும் இப்போது பரவலாக மின்துண்டிப்பு நேரிட்டுள்ளது.
திட்டமிட்ட சதி
என்.டி.பி.சி.யின் நிர்வாகத்தின் கீழுள்ள கூட்டு நிறுவனம் உள்ளிட்ட மத்திய மின்உற்பத்தி நிலையங்களும், பெல் நிறுவனத்தால் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிறுவனங்களும் ஒரே சமயத்தில் இவ்வளவு மோசமாக செயல்படுவதை தமிழக மக்களால் நம்ப முடியவில்லை.
எனவே மத்திய நிறுவனங்களின் கீழுள்ள மின்உற்பத்தி நிலையங்கள் தங்களது உற்பத்தியை அதிகபட்சமாக உயர்த்தி தமிழகத்துக்கு இழந்த மின்உற்பத்தியை மீண்டும் வழங்க மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மின்சார உற்பத்தியில் தொடர்ந்து பற்றாக்குறையுடன் செயல்படுவது, தமிழகத்தை இருளில் மூழ்க செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது என்று தமிழக மக்கள் முடிவு செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக