அந்த இளைஞர் அப்போதுதான் தனது முதல் புத்தகத்தை எழுதி முடித்திருந்தார். அதற்கு வந்த வரவேற்பு அவருக்கு நம்பிக்கை அளித்தது. வெளிநாட்டு வங்கி ஒன்றில் உயர் பதவி வகித்துவந்த அவர், இனி தனக்கு எழுதுவது ஒன்றே லட்சியம் என்று முடிவெடுத்தார். ஆனாலும் அவர் வளர்ந்த நடுத்தர வர்க்கச் சூழல், அதிக சம்பளம் தரும் வேலையைத் துறப்பதற்குத் தடைபோட்டது.
தன்னால் தொடர்ந்து எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்க்கமுடியும் என்ற உள்ளுணர்வு அவரை உந்தியது. இந்தியா முழுவதும் சென்று இளைஞர்களிடம் உரையாற்றி அவர்கள் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டவும் ஆசை இருந்தது. திடீரென்று ஒரு நாள் முடிவெடுத்தார். வேலையைத் துறந்தார். எழுத ஆரம்பித்தார்.
அந்த இளைஞரின் பெயர் சேத்தன் பகத். இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களிலும் ரயில்கள், பேருந்துகளில் புத்தகம் படிக்கும் யுவன், யுவதிகளில் பாதிப் பேர் இவரது நாவல்களைத்தான் படிக்கிறார்கள். இவரது நாவல்கள் பாலிவுட்டில் சுடச் சுடத் திரைப்படங்களாக மாறுகின்றன. 3 இடியட்ஸாக இந்தியில் எடுக்கப்பட்டு, ஷங்கரின் இயக்கத்தில் வந்த நண்பன் படத்தின் மூலக்கதை இவருடையதுதான்.
வெற்றிகரமான மனிதர்களின் கதையில் ஒரு புள்ளியில் அவர்கள் தடம் மாறும் முடிவை உறுதியாக எடுக்கிறார்கள். பரிச்சயமற்ற, அதிகம் பயணப்படாத, ஆனால் விருப்பமுள்ள, பாதையில் அவர்கள் அடி எடுத்து வைக்கும்போது அவர்களுக்குத் துணை அவர்களே.
எல்லாம் நன்றாகத்தானே போகிறது, எதற்குத் தேவையில்லாத சாகசம் என்று நினைக்கலாம். பழக்கமான வேலை, பழக்கமான நண்பர்கள், பழக்கமான வாழ்க்கை இவையெல்லாம் வசதியாக இருக்கலாம். பாதை மாறுவதில் ஆபத்து இருக்கலாம்.
ஏன் மாற வேண்டும்?
ஆனால் பழகிய பாதையிலேயே பயணிப்பதில் ஒரு கட்டத்தில் அலுப்பு வரும். அந்த அலுப்பைத் தவிர்க்க நாம் புதிதாக எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். வசதியை மட்டும் நினைத்துக்கொண்டிருந்தால் அலுப்புதான் நமக்கு நிரந்தரத் துணையாக இருக்கும். ஒவ்வொரு நாளையும் புதியதாக, புதிய சவால்களுடன் எதிர்கொள்ள நாம் சவாரி செய்யும் குண்டுச் சட்டியிலிருந்து வெளியே இறங்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் நமக்கென்று வரையறுக்கப்பட்ட பட்டுக் கூட்டுக்குள் அதற்கேயுரிய சௌகரிய, அசௌகரியங்களுடன் வாழ்கிறோம். எப்போதாவது, என்னடா இது வாழ்க்கை என்று அலுத்துக்கொண்டு மறுபடியும் அந்தப் பட்டுக் கூட்டுக்குள் புகுந்துவிடுகிறோம்.
ஒரு மென்பொருள் நிரலை எழுதுகிறீர்கள், வங்கியில் பணக்கட்டை எண்ணுகிறீர்கள், குழந்தைகளுக்கு இரவு உணவு சமைக்கிறீர்கள், ஒரு கட்டட வரைபடத்தை வரைகிறீர்கள், ஒரு செய்திக் கட்டுரையை எழுதுகிறீர்கள். எந்தப் பணியைச் செய்பவராகவும் நீங்கள் இருக்கலாம்.
இந்தப் பணிகளை எல்லாம் செய்யும்போது ஒரு எந்திரம் போல அனிச்சையாகச் செய்கிறோம் என்று உணர்கிறீர்களா? அப்போதே நீங்கள் பழக்கத்திற்கு ஆட்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால் அந்தப் பணியைச் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. உங்களுக்கு சௌகரியமாக ஆகிவிட்ட வேலையின் சாத்தியங்களையும், அழகையும் அதிகரிக்க முயற்சிக்கலாம். நீங்கள் இருக்கும் துறையிலேயே உங்களுக்குத் தெரியாத ஒன்றை நோக்கி கொஞ்சம் முயற்சி செய்து உங்கள் நிபுணத்துவத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு தொழில்நுட்பவியலாளராக இருந்து, நிர்வாக வேலைகளில் அதிகம் நாட்டம் இல்லாதவராக இருக்கலாம். அதுவே உங்கள் இயல்பென்றும் கருதலாம். ஆனால் எந்த உயிருக்கும் வரையறுக்கப்பட்ட இயல்பென்று ஒன்று இல்லை. பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான தகவமைப்புகளைப் படிப்படியாக செய்துகொண்ட உயிரினங்கள் மட்டுமே அழிவைக் கடந்து இன்று நிலைபெற்றுள்ளன.
மேலை நாடுகளில் கல்லூரிப் பருவத்திலேயே, மாணவர்களை அவர்களது வாழ்நிலை, சீதோஷ்ணத்துக்குத் தொடர்பே இல்லாத வேறு நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் அனுப்பும் நடைமுறை இருக்கிறது. சமீபகாலம்வரை எல்லா இளைஞர்களும் ராணுவப் பயிற்சியில் சிறிது காலம் கழிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்துள்ளது. சில நாடுகளில் இன்னும் இம்முறை நடைமுறையில் இருக்கிறது. வேறு கலாச்சாரங்களில், வேறு வேறு வாழ்க்கை நிலைகளுக்குப் பழக்கப்படுவது மனதை விரிவாக்கும். மனிதர்களையும், சமூகங்களையும், பண்பாடுகளையும் மனத்தடையற்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்படும்.
புதிய பாதை, புதிய பயணம்...
தெரியாத இடத்துக்கோ, தெரியாத வேலைச் சூழலுக்குள்ளோ, அறியாத பிரதேசத்துக்கோ செல்லும் வாய்ப்பு வந்தால் தவறவிடாதீர்கள். அந்த அனுபவம் நீங்கள் இதுவரை கருதி வந்திருக்கும் தடைகளை உடைக்கும். புதிய விடுதலைக் காற்றைக் கொண்டுவரும்.
அதற்காக உடனே வேலையை ராஜினாமா செய்யவேண்டியதில்லை. சொத்துகளை விற்று காடு, மலைகளில் அலைய வேண்டியதில்லை. உங்கள் பழக்கங்களில் மாற்றத்தைச் செய்யுங்கள். வீட்டில் நீங்கள் அதிகம் செய்து பழகியிராத வேலைகளில் கணவன் / மனைவியுடன் சேர்ந்து ஈடுபடுங்கள். இது எனக்குச் சம்பந்தமற்ற வேலை என்று அலுவலகத்தில் நீங்கள் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கும் பணியை வலியப் போய் செய்யுங்கள்.
குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவராக இருப்பின் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் எட்டிப் பாருங்கள். வழக்கமாக எரிச்சல்படும் சந்தர்ப்பங்களை முன்பே குறித்துக்கொண்டு, அதை மென்மையாகவும் புன்னகையுடனும் கையாளுங்கள். அலுவலகத்தில் இருந்து எல்லாரும் கிளம்பிய பிறகு விளக்குகளை அணைத்துவிட்டுக் கிளம்பும் பழக்கத்தை நீங்கள் வைத்திருந்தால், ஓரிரு நாட்களேனும் சற்று முன்னதாகக் கிளம்புங்கள். மாலைச் சூரியன் உங்களுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தருவான்.
பழகிய தடம் பாதுகாப்பானதுதான். ஆனால் புதிய அனுபவங்களைத் தராது. உற்சாகமும் மன எழுச்சியும் தராது. சேத்தன் பகத்தைப் போல ஒரேயடியாக இல்லாவிட்டாலும் சிறிதளவேனும் உங்கள் தடங்களை மாற்றிப் பாருங்கள். இந்த மாற்றம் உங்கள் வாழ்வுக்குப் புதிய உயிரோட்டத்தைத் தரும்.
நன்றி ஷங்கர் தி இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக