தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக்கொள்வீர்களா?
புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம். இரண்டு, மூன்று வயதாகும்போதே கடைக்கு அழைத்துவரப்படும் ஒவ்வொரு முறையும் அவளோடு கொஞ்சம் நேரம் செலவிடுவது, பேச்சுக்கொடுப்பது, விளையாடுவது என்றாகியது.
தான் வரைந்திருக்கும் ஓவியம், கற்றுக்கொண்டிருக்கும் எழுத்துக்கள் இவற்றை எனக்காக எடுத்து வைத்துவிட்டுச் செல்வது அவள் வழக்கமாயிருந்தது. தின்பண்டங்களிலும் எனக்குரிய பங்கு பாதுகாத்து வைக்கப்படும் நாளில், நான் தட்டுப்படாமல் போவதன் வருத்தம் அவளது விழிகளில் அடுத்த சந்திப்புவரைகூடத் தேங்கியிருப்பதைப் பார்க்க முடியும். பள்ளியில் சேர்ந்த பிறகு, அவளது ஆக்கங்கள் மேலும் கூர்மையடையத் தொடங்கின.
ஹலோ கிளாஸ்மேட்
இரண்டாம் வகுப்பு வந்த பிறகு, ஒரு கட்டத்தில் அவள் என்னைப் பார்த்து, ஹலோ கிளாஸ்மேட் என்று அழைத்தபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது. மனம் அதை விரும்பவும் செய்தது. வேகமாக நரைத்துக்கொண்டிருக்கும் தலையும் வயதும்… உள்ளூர நகைத்துக்கொண்டாலும், அந்த அழைப்பில் ஒரு போதை கூடியது. அவள் மூன்றாம் வகுப்பு வந்த பிறகு, இந்த வகுப்புத் தோழன் அந்தஸ்து கெட்டிப்பட்டுவிட்டது பெருமிதம் ஊட்டத் தொடங்கியது. இப்போது நான் சொல்ல வேண்டிய கதைகளின் நீளம், கருத்துக்களின் ஆழம், நகைச்சுவையின் அளவு எல்லாமே பன்மடங்கு கூட்டப்பட வேண்டியிருந்தது.
எல்லோர் எதிரிலும் கிளாஸ்மேட் என்று அழைப்பதில் அவளுக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. புத்தக தினத்தை ஒட்டி, இந்த ஆண்டு எனக்கு ஒரு பேனா பரிசளித்தாள் கோகுலவாணி. நிறைய எழுத வேண்டுமாம். சில நாட்களுக்கு முன் கேட்டாள், ‘நூறுக்கு முன் வரும் ஓர் எண்ணுக்குத் தொண்ணூறு என்று எப்படிப் பெயரிடலாம்… இருபது, முப்பது எல்லாம் சரி… அப்படின்னா, 90 என்பதை ஒன்பது என்றுதானே சொல்ல வேண்டும்... தொண்ணூறு எப்படி வரும்?' வழிவழியாக வந்துவிட்ட வழக்கத்தை எனக்குத் தெரிந்தவரையில் எடுத்துச் சொன்னேன். கோகுலவாணி ‘கூகுள்’வாணி ஆகிக்கொண்டிருக்கிறாய் என்றும் வாழ்த்தினேன்.
நீங்க பொய் சொல்றீங்க!
எனது வகுப்பு இப்போது பெரிதாகிவருகிறது. வீட்டுக்கு முன்புறம் புதிதாகக் குடிவந்திருப்பவர்களுக்கு குட்டியும் சுட்டியுமாய் இரட்டைக் குழந்தைகள் - அக்ஷயா, அக்ஷரா. இரண்டு வீட்டுக்கும் இடையே இருக்கும் குறுக்குச் சுவரின் அந்தப் பக்கத்தில் இருந்து அவர்கள் சத்தம் போட்டுக் கூப்பிட்டால், பதில் குரல் கொடுக்காமல் தப்பிக்க வழியே கிடையாது. அவர்களைச் சிரிக்க வைத்துப் பழகிவிட்ட முதல் நாளிலிருந்து அவர்கள் சம்மன் பிறப்பித்தால் குறுக்குச் சுவருக்கு அருகில் போய் ஆஜராக வேண்டிய இன்பத் தொல்லையிலிருந்து விடுபட முடியாது.
அப்புறம் என்ன, டீச்சர்கிட்டே அடி வாங்கத் திணறும் மாணவனாக ஒரு விகடம், கொஞ்சம் சிரிப்புக் கதை, ஆட்டம்பாட்டம்! இரட்டைக் குழந்தைகளுக்காக, “சிரிச்சாத்தான் அட்சயா. முறைச்சாக்கா அட்சரா...” என்று ஒரு ‘தீம் சாங்’மெட்டுப் போட்டு வைத்திருக்கிறேன்.
இந்த ஐந்து வயதுச் சுட்டிகள் பண்ணும் அமர்க்களம் போதாதென்று, அவர்களின் ஜோடிஜோடியான பல வண்ண வசீகர உடைகள், குறுக்குச் சுவர் அருகே கொடியில் தொங்கிக்கொண்டிருக்கும் அழகைத் தனியே பாட வேண்டும். “நான் உங்க ஸ்கூல்ல யூ.கே.ஜி. படிக்கிறேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே, “நீங்க பொய் சொல்றீங்க… பொய் சொல்றீங்க” என்று கூச்சல் எழுப்புவதைக் காலம் முழுக்க ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
அன்பின் மின்னஞ்சல்
ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு மின்னஞ்சல் உரையாடலில் (சாட்) வந்திருந்த அதிர்ச்சித் தாக்குதல் கேள்வி ஒன்றுதான் இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது.
இந்தக் குழந்தை, பிரபலமான ஒரு சிறுமி. ஆகவே, பெயரைத் தவிர்க்கிறேன். நாங்கள் இன்னும் நேரே சந்தித்துக்கொள்ளவில்லை. நான் பார்த்திருக்கிறேன். அவளுக்கு என் முகம் தெரியாது. சூட்டிகையான இந்தக் குட்டிப் பெண் நான்காம் வகுப்பு படிக்கிறாள். அவளது திறமைகளை வாழ்த்தி அவளுடைய பெற்றோருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன் முதன்முதலில். பின்னர், அவளது தந்தைக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவளுக்கே தனியாக மின்னஞ்சல் முகவரி இருப்பது தெரிந்த ஒரு நாளில் தொடங்கியது உரையாடல். அப்போது நான் அறிந்திருக்கவில்லை, இந்த அற்புதக் குழந்தை மிகுந்த எதிர்பார்ப்புகளும், நிபந்தனையற்ற முரட்டு வாஞ்சையும், எல்லையற்ற அன்பும் பூத்துச் சொரிபவள் என்று.
நாளை பேசலாமா?
ஒரு விழாவில் அவள் பேசுவதையும் கேட்டேன். ஆனால், அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பின்றி நகர்ந்துவிட்டேன். மறுநாள் இப்படி ஒரு சாட் வந்தது: “நீங்கள் வந்திருந்தீர்களா...தெரியாதே... கொஞ்சம் என்னைப் பார்த்துக் கை அசைத்திருந்தால்… பாத்ரூம் போக வேண்டும் என்று ஒரு சாக்குச் சொல்லிவிட்டு, மேடையிலிருந்து இறங்கிவந்து உங்களோடு பேசியிருப்பேனே.”
பின்னர் ஒரு நாள், “நேற்று எனது பிறந்தநாள்” என்று ஒரு சாட் வந்த அன்று, “என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டேன்.
“உங்களிடமிருந்து என்ன கேட்பேன், நூல்களைத் தவிர” என்று பதில் வந்தது. அவளுக்குக் கணிதத்தில் நாட்டம் ஏற்படுத்தும் நோக்கில், கணித மேதை ராமானுஜன் குறித்த நூலை அனுப்பிவைத்தேன்.
புத்தகம் கைக்குப் போனவுடன் வந்த உடனடி பதிலில், நூல் ஆசிரியரை எனக்குத் தெரியும் என்ற அவளது பரவசம் என்னைக் கொண்டாடச் செய்துவிட்டது. அன்றைய உரையாடல் கொஞ்சம் நீண்டுவிட, “அங்கிள் நாளை எனக்குப் பள்ளிக்கூடம் உண்டு... நான் தூங்க வேண்டிய நேரம், நாளை பேசலாமா?” என்று அவள் சொல்ல, “அடடா! மன்னித்துக்கொள்” என்று நான் வெட்கத்தோடு குட் நைட் சொன்னேன். “நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்” என்று அத்தனை வினயத்தோடு பதில் போட அந்தக் குழந்தைக்குக் கற்றுத்தந்தது யாராக இருக்கும்?
நீங்கள் இறந்துபோய்விட்டீர்களா?
அப்புறம் இரண்டொரு நாட்கள். நாமாகக் குழந்தையைத் தொல்லை செய்ய வேண்டாம் என்ற உள்ளுணர்வா தெரியவில்லை, மின்னஞ்சல் அனுப்பவில்லை. “உடனே ஏதாவது மின்னஞ்சல் அனுப்பவும்” என்று ஒரு சாட். ஏனோ பதில் போடாது இருந்தேன். “உங்கள் குடும்பப் புகைப்படம் அனுப்பவும்... சீக்கிரம் சீக்கிரம்” என்று மறுநாள் ஒரு சாட். அதற்கும் பதில் போடாதிருந்துவிட்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து இப்படி ஒரு சாட் வந்திருந்ததே பார்க்க வேண்டும்:
“நீங்கள் இறந்துவிட்டீர்களா? (ஆர் யூ டெட்?)”
ஆஹா... இத்தனை தூரம் ஓர் உரிமைச் சீற்றத்தை எத்தனைக் கோடி கொடுத்தாலும் ஈட்ட முடியுமா?
மிகவும் சிறு வயதில் தாயைப் பறிகொடுத்த என்னை வளர்த்த பாட்டி, என் மீது கொள்ளைப் பாசம் கொண்டிருந்தவள். பிறகு, நான் வேலைக்குச் சென்றுவிட்ட காலங்களில், கடிதமும் போடாது, நேரிலும் சென்று பார்க்காத சமயங்களில், “நீ உசிரோடுதான் இருக்கியா?” என்று எனது பாட்டியிடமிருந்து எழுந்த குரல்தான் இந்தக் குட்டிப் பெண்ணின் ஏக்கமும், கோபமும் நிறைந்த கேள்வியில் எனக்கு எதிரொலித்தது.
எப்படி இறந்துபோவேன் என் செல்லக் கன்றுக்குட்டியே, மரணம் நேர முடியுமா இத்தகைய அன்பின் பெருவாழ்வுக்கு..? சுவாரஸ்யமான கணிதப் புதிர் ஒன்றைத் தட்டி அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன் அடுத்த உத்தரவுக்கு!
நன்றி : தி இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக