வெள்ளி, 29 நவம்பர், 2013

'அனைவரின் வாழ்வையும் தீர்மானிக்கும் மூன்று ஆண்டுகள்'

''ஒவ்வொருவரின், 15 முதல் 17 வயது வரையிலான காலக்கட்டம், வாழ்வில் முக்கியமான காலக்கட்டம். இதில், நாம் ஜெயித்தால், நம் வாழ்வை, நாம் நிர்ணயிக்கலாம்; இல்லையெனில், அடுத்தவர் தீ்ர்மானிப்பர்,'' என, பேராசிரியர், பர்வீன் சுல்தானா பேசினார்.
'
ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேசியதாவது:அதிக சம்பளம் வாங்கலாம்
எந்த சொல், யார் வாழ்வை மாற்றும் என தெரியாது. உங்கள் வாழ்வை மாற்றும் சொல், இந்நிகழ்ச்சியில் கிடைத்தால், மகிழ்ச்சி அடைவேன். 'கலை பாடங்கள் படிக்கிறோம்' என, மாணவர்கள் தாழ்வாக நினைக்கக் கூடாது; அறிவியல் பாடம் படித்தால், அதிக சம்பளம் வாங்கலாம்; கலை பாடம் படித்தால், சம்பளம் கொடுக்கலாம். பல மாணவர்கள், காலை, 8:00 மணிக்கு பின்னரே, படுக்கையை விட்டு எழுகின்றனர்; இது தவறு.காலை, 3:30 மணிக்கு எழுந்தால் ஞானி; 5:00க்கு எழுந்தால் நல்ல மாணவன்; 6:00க்கு எழுந்தால், சாதாரண மாணவன்; 7:00க்கு எழுந்தால் எருமை; 8:00 மணிக்கு எழுந்தால், காட்டு எருமை.இதை மாணவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 15 முதல் 17 வயது வரையிலான காலக்கட்டம், ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான காலக்கட்டம். அது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் காலக்கட்டம்.இதில், வெற்றி பெறுவது நல்லது.நாம் ஜெயித்தால், நம் வாழ்வை, நாம் நிர்ணயிக்கலாம்; இல்லையெனில், அடுத்தவர்கள் தீர்மானிப்பர். கடந்த இரண்டு மாதங்களாக, வெளிநாடுகளில், பேசுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன்.
'
தினமலர்' நாளிதழ் சார்பாக, சென்னை பள்ளி மாணவர்களுக்கு, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது' என, கேள்விப்பட்ட உடனே, ஓடோடி வந்தேன். நானும், மாநகராட்சி பள்ளியில் படித்து வளர்ந்தவள் என்பதால், இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, சென்னை வந்தேன். இந்தியாவையே துாக்கி நிறுத்தும் ஆற்றல் கொண்டவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். பள்ளி மாணவர்கள், இரண்டு விஷயங்களை எப்போதும் தங்களில் நெஞ்சில், நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று, நன்றியுணர்வு; மற்றொன்று, நன்னடத்தை.இதை இன்று மட்டுமல்ல, எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.அமெரிக்க அதிபர், ஒபாமா இரண்டாவது முறையும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, அவரின், 'மாற்றத்தை நம்மால் நிகழ்த்திக் காட்ட முடியும்' என்ற வாசகம் முக்கியமானது.அந்த வாசகத்தை அவர் சொல்லவில்லை. அவரது குரு, தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து, அந்த மந்திர சொல்லை பெற்றார். மண்டேலா தன் குரு, மார்டின் லுாதர் கிங்கிடமிருந்து பெற்றார்; மாட்டின் லுாதர் கிங், காந்தியிடமிருந்து, அந்த மந்திர சொல்லை பெற்றார்; காந்தி, சுவாமி விவேகானந்தரிடமிருந்து, அந்த சொல்லை பெற்றார்.விவேகானந்தரின் சொற்கள்
ஆக, ஒபாமா, இரண்டாவது முறையாக, அமெரிக்க அதிபராவதற்கு, விவேகானந்தரின் சொற்கள் தேவைப்பட்டுள்ளது.
'
வீரேஸ்வர்' என, இயற்பெயர் கொண்டு, 'நரேந்திரன்' எனவும் அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர், ஒரு முறை தன் குருவிடம், ''நான் கண்களை மூடி தியானித்த போது, காளியை கண்டேன்,'' என்றார். அதற்கு, குரு, ''அப்போது, காளியிடம் என்ன கேட்டாய்?'' என்றார்.
''
எதுவும் கேட்கவில்லை. பல முறை பார்த்த போதும் எதுவும் கேட்கவில்லை. எனக்கு ஏற்கனவே, நிறைய கொடுத்திருக்கிறாள்; மேற்கொண்டு என்ன கேட்பது என்ற எண்ணத்தினால், எதுவும் கேட்கவில்லை,'' என்று விவேகானந்தர் கூறினார். இது தான் நன்றியுணர்வின் எடுத்துக்காட்டு.
'
தமிழ் வழியில் படிக்கிறோம்' என, எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாதீர்கள். எனக்கு இப்போது வரை தமிழ் தான், சோறு போடுகிறது. என் வாழ்வுக்கும் பெருமைக்கும், அதுவே காரணம்.அமெரிக்காவில், பாம்பு பண்ணையில் கோடிக்கணக்கான பாம்புகளை வைத்துள்ளனர். இறுதியாக, நான்கடி நீளம் கொண்ட, ராஜ நாகத்தை வைத்துள்ளனர்.
'
பண்ணையில் உள்ள அனைத்து பாம்புகளையும் சாப்பிடும் சக்தி, ராஜ நாகத்துக்கு உண்டு' என்றனர். அதன் அருகில், 'பிளாக் மாம்போ' என்ற சிறிய பாம்பையும் வைத்துள்ளனர்.
'
இது, ராஜ நாகத்தையே கொல்லும் சக்தி கொண்டது' என்றனர். நாட்டில், பல ராஜ நாகங்கள் இருக்கலாம்; ஆனால், நீங்கள், 'பிளாக் மாம்போ'வாக இருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக