செவ்வாய், 10 டிசம்பர், 2013

+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவு


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதில்
கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்
கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக
15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பொதுத்தேர்வு விடைத்தாளில்
பெரிய அளவுக்கு மதிப்பெண் மாறுதல் இருந்த ஆசிரியர்களிடம்
மட்டுமே இப்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம்
திருப்தி தரவில்லையென்றால், அவர்களிடம் விசாரணை நடத்தி துறை ரீதியாக
நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 விடைத்தாள்களை
மதிப்பீடு செய்த 200-க்கும் அதிகமான முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பத்தாம்
வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்த 100-க்கும் அதிகமான
பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2, பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுகளை சுமார் 20 லட்சம் பேர் எழுதினர். பிளஸ் 2
தேர்வை மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
மறுமதிப்பீட்டின்போது மாணவர்களின் மதிப்பெண்ணில் அதிகளவில்
மாறுதல்கள் இருந்தன. விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 5,600
மாணவர்களில் 4 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் மாறியது. பல மாணவர்களுக்கு
மதிப்பெண் அதிகரித்தது. அதேநேரத்தில், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு 10
மதிப்பெண் வரை குறைந்துவிட்டது.
வணிகவியல் பாடத்தில் 150 மதிப்பெண் பெற்றிருந்த ஒரு மாணவர்
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.அவரது விடைத்தாளை
முழுமையாக மதிப்பீடு செய்யாமல் மதிப்பெண்
வழங்கப்பட்டிருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக
அதிகரித்தது. இதையடுத்து, பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் உரிய
முக்கியத்துவத்துடன் மதிப்பீடு செய்யவில்லை எனப் புகார்கள் எழுந்தன. பிளஸ் 2
தேர்வில் முக்கியப் பாடங்களின் மதிப்பெண்ணை அடிப்படையாக
வைத்து எம்.பி.பி.எஸ்., பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை
வைத்துத்தான் பிளஸ் 1
மற்றும் டிப்ளமோ படிப்புகளில்
மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகளைப் பொருத்தவரை
பலத்த போட்டி இருப்பதால்
ஓரிரு மதிப்பெண் கூட மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில்
அமைந்துவிடுகிறது. அதனால் பிளஸ் 2
விடைத்தாள்களை கவனத்தோடு மதிப்பீடு செய்ய வேண்டும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதும் விடைத்தாள் நகல்
கோரி 84 ஆயிரம் பேரும், மறுகூட்டல் கோரி 10 ஆயிரத்துக்கும்
அதிகமானோரும் விண்ணப்பித்தனர். அதன்பிறகு, மறு மதிப்பீடு கோரி 5,600
பேர் விண்ணப்பித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் மறுகூட்டல்
கோரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக