ி.என்.ஆர். ராவ் என, அனைவராலும் அறியப்படும்,
சிந்தாமணி நாகேஷ ராமச்சந்திர ராவ், 79, கர்நாடக
மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். மூத்த வேதியியல்
விஞ்ஞானியான இவர், இளம் வயதிலேயே, அறிவியலின்
மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன்,
20வது வயதிலேயே, அறிஞர்கள் போற்றும் வகையிலான மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதன்
மூலம், ராவின் அறிவாற்றல்
உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தது. மைசூர்
பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற
ராவ், பனாரஸ் இந்து பல்கலையில் முதுகலைப் பட்டம்
பெற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய ராவுக்கு, நிதியுதவியுடன் ஆய்வு மேற்கொள்ள,
நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்தன. ராவ்,
தனது, 24 வயது வயதில் வேதியியலில் முனைவர் பட்டம்
பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் பின், தொடர்ந்து அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட
ராவ், 1,500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரின் திறமையைப்
பாரட்டி, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த, 60 பல்கலைக்கழகங்கள், ராவுக்கு டாக்டர் பட்டம்
வழங்கியுள்ளன. இவரது திறமையைப் பாராட்டி, கான்பூர்
ஐ.ஐ.டி., இவரை நேரடியாக வேதியியல்
துறை தலைவராக நியமித்தது. திறமைக்கு சான்றாக, மத்திய அரசு, நாட்டின் மிக
உயரிய விருதான, "பாரத ரத்னா'
விருதை ராவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மிகப்பெரும் சாதனைகள் படைத்துள்ள ராவ், தினமும்,
அதிகாலை, 4.30க்கு எழும் பழக்கத்தைக்
கொண்டுள்ளார். தினமும், 45 நிமிடங்கள் நடைபயிற்சி, பின், 15 நிமிடங்கள் யோகா செய்யும் இவர், காலை, 8:30
முதல், மாலை, 4:30 வரை பணியில் மட்டுமே கவனம்
செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அடிப்படை அறிவியல்
பற்றிய தேவையை நன்கு அறிந்துள்ள ராவ், பல
சமயங்களில் இளைஞர்கள் அறிவியல் ஆராய்ச்சியில்
ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலக்கியப்
பின்னணி உடைய தன் மனைவியுடன் சேர்ந்து பல
புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பெற்றுள்ள ராவ்,
பொழுது போக்கிற்காக அவ்வப்போது, சமையல்
செய்வதையும் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.
"இளைஞர்கள் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆய்வில் ஈடுபட வேண்டும்' என இளைய
தலைமுறைக்கு அறிவுறுத்தும் ராவ், "சிறிய ஆய்வுக்
கூடங்களில் தான், மிகப் பெரிய கண்டுபிடிப்புகள்
உருவாகின்றன' என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக