புதன், 18 டிசம்பர், 2013

தோல்பாவைக் கூத்து


சுமார் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது தோல்பாவைக் கூத்து.மராட்டியத்தில் தோன்றிய இக்கலையை மராட்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில்பரப்பினர். சோழ மன்னர்களுக்குப்பிறகு தஞ்சையைக் கைப்பற்றிய மராட்டிய மன்னர் சரபோஜி ஆட்சிக்காலத்தில் தோல்பாவைக் கூத்து தமிழகத்தில் கால் பதித்தது. மராத்தி மொழி பேசும் கலைஞர்களால்இக்கலை வளர்க்கப்பட்டது. அரண்மனையில்பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்தக் கூத்து, மக்கள் கூடும் திருவிழாக்களிலும் இடம் பெற்றது. மக்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மேலும் மேலும் பரவத் தொடங்கியது.
 இராமாயணக் கதையை மையாக வைத்துத் திருவிழா காலங்களில் 10 நாள்களும் தோல்பாவைக்கூத்து நடத்தப்படும். பின்னர் ஹரிச்சந்திரா நாடகம், நல்லதங்காள் வாழ்க்கை வரலாற்று நாடகங்களும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. திருவிழாவின் நிறைவு நாளான 10-ம் நாள் அப்பகுதியில் மழை பொழியும் என்ற ஐதீகம் இருந்தது. இதனாலேயே, பல ஊர்களில் மழை வேண்டித் தோல்பாவைக் கூத்து நடத்தப்படும் பழக்கமும் இன்றுவரை தொடர்கிறது. 
ஆட்டு தோலில் ஓவியங்கள் நாடகத்தில் வரும் ஒவ்வொரு உருவமும் பாவையாக ஆட்டுத்தோலில் வரையப்பட்டு ஓலைச்சாயம் என்ற வர்ணம் பூசப்படுகிறது. ஒருபுறம் வரை யப்பட்ட ஓவியம் மறுபுறமும் தெளிவாகத் தெரியும்படி இருக்கும். அந்தப் பாவையின் நடுவில் ஒரு குச்சியும் இணைக்கப்பட்டிருக்கும். இதைப் பிடித்தபடியே பாவை நாடகத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப அது அசைக்கப்படும். தோல்பாவைக் கூத்தின் மற்றொரு சிறப்பு, கூத்து நடத்தும் நபர்ஒருவரே கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி, 10 விதமான குரல்களில் பேசுவார். இப்போது அலுங்காமல்டப்பிங் பேசுவதைப்போல அல்ல. இதற்கெனத் தனித்திறன் வேண்டும்.
 ஆனாலும், நாகரிக வளர்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் திரைப்படங்கள்,ொலைக்காட்சி போன்றவற்றின் ஆதிக்கத்தால் பாரம்பரியக் கலைகள் அழிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கலைஞர்களும் நலிவடைந்துள்ளனர். அடுத்த நூற்றாண்டில் இதுபோன்ற கலைகள் இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 36 மராட்டியக் குடும்பத்தினர் இருப்பினும் மராட்டியத்திலிருந்து குமரியிலும் அதை சுற்றியுள்ள ஓரிரு மாவட்டங்களிலும்குடியிருந்து வரும் 36 மராட்டியக் குடும்பத்தினரால் இப்பாவைக் கூத்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்துசந்திரன் கூறியதாவது: தோல்பாவைக் கூத்து என்பதே இன்று உள்ள இளைஞர்கள் பலருக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக நாங்கள் இக்கலையை நடத்தி வருகிறோம். போதிய வருமானம் இல்லாததால் பலர் பல வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கல்வி யின் முக்கியத்துவம், எய்ட்ஸ் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற நாடகங்களைத் தயாரித்துப் பள்ளி களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் காட்சிகளையும் நடத்தி வருகிறோம். தற்போது, சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி 100 இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனாலும், தோல்பாவைக் கூத்து தொழில் 80 சதவிகிதம் அழிந்துவிட்டது. தோல்பாவைக் கூத்தை வளர்க்க அரசு முன்வர வேண்டும். பல்வேறு அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டுச் செல்ல எங்களுக்கும் அரசு வாய்ப்பு கொடுத்து எங்களையும், எங்கள் கலையினையும் வாழ்விக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக