தொடர்ந்து ராஜிநாமா செய்வதால் அடிப்படைப் பணிகளை நிறைவேற்றுவதில்
சிக்கல் எழுந்துள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம்பல்வேறு கட்டங்களாக கலந்தாய்வுகளை நடத்த வேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 358 கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சுமார் 7
ஆயிரத்து 500 பணியிடங்களில் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அவ்வப்போது எழுத்துத் தேர்வுகளை நடத்தி வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில்
வெற்றி பெற்றவர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை முழுமையான
அளவில் இதுவரை நிரப்ப முடியவில்லை. இதற்குக் காரணம், பணியில் சேரும்
பலரும் ஆறு மாதங்கள் முதல்ஓராண்டுக்குள் தங்களது வி.ஏ.ஓ.
பணியை ராஜிநாமா செய்து விட்டு வேறு பணிக்குச் சென்று விடுகின்றனர்.
பணியின் மீதுள்ள வெறுப்பு: வி.ஏ.ஓ. பணிக்குச் சென்றால் உடனடியாக
பதவி உயர்வோ அல்லது கூடுதல் ஊதியமோ கிடைக்காது. இதனால்,
வி.ஏ.ஓ. பணியை அரசுப் பணிக்கான நுழைவு வாயிலாக மட்டுமே பார்க்கும்
இளைஞர்கள் குரூப் 2, குரூப் 1 போன்ற தேர்வுகளை எழுதி உயர்ந்த
பதவிகளுக்குச் சென்று விடுகிறார்கள் என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த
கிராம நிர்வாக அதிகாரி ஒருவர். வி.ஏ.ஓ. பணியில் உள்ள ஒருவருக்கு பதவி உயர்வு
என்ற வகையில், வருவாய்த்துறையில் 10 சதவீத ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப்
பதவி உயர்வை 25 ஆண்டுகள் கழித்தே ஒரு வி.ஏ.ஓ. பெற முடியும்.
இதனாலேயே இந்தப் பணியில் தொடர்வதற்கு இளைஞர்கள் தயக்கம்
காட்டுவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு கட்ட கலந்தாய்வு: வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப கடந்த
ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற பலரும்ராஜிநாமா செய்து விட்டு வேறு
பணிகளுக்குச் சென்று விட்டனர். இதனால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பலரையும்
கலந்தாய்வுக்கு தொடர்ந்து அழைத்து அவர்களுக்கு வி.ஏ.ஓ. பணியை டி.என்.பி.எஸ்.சி.
வழங்கி வருகிறது. அடிப்படைப் பணிகள் பாதிப்பு: சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமான
வி.ஏ.ஓ.பணியிடங்கள் காலியாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
வருவாய்த் துறையின் அனைத்து வகையான சான்றிதழ்கள், அரசின் இலவச
பொருள்கள், பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி,
சேலை என அனைத்துத் திட்டங்களும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமே
மேற்கொள்ளப்படுகின்றன. காலிப் பணியிடங்களால் இந்த
அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
பதவி உயர்வும்-கட்டாய பணியும்: புதிதாக வி.ஏ.ஓ. பணியில்
சேருவோருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதவி உயர்வு வழங்கினால்
தொடர் ராஜிநாமாவைத் தவிர்க்கலாம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள்
கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும், வி.ஏ.ஓ. பணியில் சேர்ந்து குறிப்பிட்ட
காலம் வரை அதே பணியில்தொடர வேண்டும் என்ற உத்தரவு கொண்டு வரப்பட வேண்டும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக