திங்கள், 16 டிசம்பர், 2013

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுத்தரும் புத்தகம்!


நமது கலாசாரம், பண்பாடுகள் மறைந்து வருவதாகவும், அதை மீட்டெடுக்க வேண்டும் என்றும் குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் கூறினார்.
கணக்குத் தணிக்கையாளர் ஜி.நாராயணசாமி எழுதிய "ஏணிப்படிகள்' - சுயசரிதை நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலை பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜி.நாராயணசாமி "பியான்ட் ஆடிட்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம் இந் நூல்.
முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் நூலை வெளியிட, திரிபுரா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
விழாவில் கோகுலகிருஷ்ணன் பேசியது:-
பொதுவாக சுயசரிதை புத்தகங்களில் தாங்கள் செய்த நல்லவற்றை பற்றியே எழுதுவர். ஆனால், நாராயணசாமி தன் தவறுகளையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
நாராயணசாமியின் குடும்பம் ஏழைக் குடும்பம். மொத்தம் ஒன்பது பேர் குடும்ப உறுப்பினர்கள். நாராயணசாமியின் தந்தை ஆசிரியர். அவர் சம்பளம் முப்பத்தைந்து ரூபாய். அதை வைத்து அவர்கள் படித்து முன்னேறியுள்ளனர்.
இன்றைக்கு நீதிபதி என்றால் உயரப் பார்க்கிறீர்கள். அப்போது நீதிபதியாக இருந்த போது எங்களுக்குக் கிடைத்த சம்பளம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே. ஆனால் அப்போது நீதிபதிகள், நீதிபதிகளாக இருந்தோம்.
வாழ்க்கை வசதிகள் உயர்வதற்கேற்ப மனித பண்பாடுகளையும் உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும். பழகும் தன்மையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு பணம் இருக்குமளவு பாசம் இல்லை. பணத்தை வைத்தே மனிதனை எடை போடுகின்றனர்.
நம்முடைய பண்பாடுகள் மறைந்து கொண்டிருக்கின்றன. அதை மீட்டெடுக்க வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்பவர்கள் வர வேண்டும்.
கடவுள் ஏற்பாளரான நாராயணசாமிக்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கடவுள் மறுப்பாளர் பொன்னுசாமி என்பவர் படிப்புக்கு நிதி உதவி செய்துள்ளார்.
அதுபோன்ற இதயம் படைத்தவர்கள்தான் நாட்டுக்குத் தேவை. இறைவன் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டு, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுபவர்கள் நமக்குத் தேவையில்லை. அதேபோல பகுத்தறிவாளர்கள் என்று கூறி கொண்டு, நம்முடைய கலாசாரத்தையும், பழமையான பண்பாடுகளையும் வெட்டித் தள்ளுபவர்களும் தேவையில்லை. நாட்டில் நல்லவை எங்கெல்லாம் உள்ளதோ அதைப் போற்றுபவர்களே நமக்குத் தேவை.
ஆசிரியர் தொழிலை இன்று வியாபாரமாக்கி விட்டனர். அன்றைக்கு ஆசிரியர்கள் உழைப்பதையே தங்கள் கடமையாகவும், மாணவர்கள் உயர்வதைப் பார்த்து மகிழக் கூடியவர்களாகவும் இருந்தனர்.
ஏணிப்படிகள் என்றால் ஆசிரியர்களைத்தான் குறிப்பார்கள். ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தரும் நூல்தான் இந்த ஏணிப்படிகள் என்றார் அவர்.
கும்பகோணம் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் டி.ரங்கசாமி நிதி ஆராய்ச்சி அகாதெமி இணைந்து விழாவை நடத்தின. ஏணிப்படிகள் நூலின் ஆசிரியர் ஜி.நாராயணசாமி ஏற்புரையாற்றினார். இவ் விழாவுக்கு ஓய்வுபெற்ற ..எஸ். அதிகாரி .எம்.சுவாமிநாதன் தலைமைதாங்கினார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், ஜெம் கிரானைட்ஸ் அதிபர் ஆர். வீரமணி, தமிழக முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கணக்குத் தணிக்கையாளர் டி.என்.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், ராஜாஜி மைய இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், கும்பகோணம் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் என்.கிருஷ்ணசாமி, ராஜாஜி பொது நல மையத்தின் செயலாளர் வெங்கடகிரி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thanks to dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக