தலைவனின் மனைவிக்குதான் இல்லறக் கடமைகளும் சொத்தும் சமூகச்செயல்பாட்டு உரிமைகளும் வாரிசு உரிமையும் உண்டு. ஆசை நாயகிகளுக்கு அவ்வுரிமைகள்மறுக்கப்பட்டிருந்தன. இதனை நற்றிணையின் 330ஆவது பாடலும் அகநானூற்றின் 16ஆவது பாடலும் விளக்கியுள்ளன.
இல்வாழ்வில் "கற்பு" என்பது இல்லறக்கடமையாற்றுதலைக் குறித்தது. அக்கடமையைச் செய்யத் தகுதியற்றவர்களாகக் கருதப்படும் சின்னவீடுகளைக் கற்பற்றவர்கள் என்று கருதினர்.பின்னாளில்தான் கற்பு என்பது உடல், மனம் சார்ந்த்தாகக் கருதப்பட்டது.
தலைவனுக்குரிய மனைவி யார், ஆசை நாயகிகள் யாவர் என்ற வகைப்பாட்டினை விளக்கக் கரணம் என்ற திருமணம் உதவியது. அவ்வாறு திருமணம் செய்துகொண்ட பெண்தான் தலைவனின் அதிகாரபூர்வமான மனைவி. யாருக்கும் தெரியாமலே அல்லது சிலருக்கு மட்டும் தெரிந்து அவன் மணந்துகொள்ளும் பெண்கள்ஆசை நாயகிகள். இதற்குச் சான்றுகளாக அகநானூற்றின் 36, 46, 66, 166, 206 ஆகிய பாடல்களும் நற்றிணையின் 313ஆவது பாடலும் உள்ளன.
காலத்தின் தேவையோ!
ஆசை நாயகிகளைச் சமுதாயம் ஏற்றுக்கொண்டது ஓர் விபத்துதான். அது காலத்தின் தேவையாகக்கூட இருந்திருக்கலாம். அதாவது, பழந்தமிழ்ச் சமுதாயம் முதலில் வேட்டைச் சமுதாயமாக இருந்து பின்னர் போர்ச்சமுதாயமாக மாறியது. வேட்டையிலும் போரிலும் ஆண்களின் உயிரிழப்பு மிகுதி. ஆதலால், ஆண் துணையினை இழந்த பெண்கள் மிகுந்திருக்கலாம்.அக்காலத்தில் பெண்கள் ஆண்களைவிட எண்ணிக்கையில் மிகுந்ததால் "பலதார மணம்" (ஓர் ஆண், பல பெண்களை மணப்பது) அதற்கு ஒரு சமநிலைத் தன்மையைக் கொண்டுவரும் என்று அச்சமுதாயம் கருதியிருக்கலாம். அப்படியென்றால், "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற தமிழ்ப் பண்பாடு என்னவாயிற்று? அப்பண்பாடு வாரிசுரிமைக்காகத்தான் பின்பற்றப்பட்டது. வாழ்க்கை நலத்துக்காக அல்ல.
சங்க காலத்தில் ஆசை நாயகிகள் மட்டும்தான் இருந்தனரோ? விலைமகளிர் என்று யாரும் இல்லையா? இல்லை. சங்க காலத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியங்களுக்கும் எழுதப்பெற்றுள்ள உரைகளில் விலைமகளிர் பற்றிய செய்திகள் இருக்கின்றன. மூலப் பாடல்களுக்கும் உரைகளுக்கும் இடைப்பட்ட காலம் மிகப்பெரியது.அதனால்தான், உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தின் சமூக வெளிப்பாடுகளே அவர்கள் உரைகளில் பிரதிபலித்துள்ளன.
தொல்காப்பிய மூல நூற்பாவில் பரத்தை, காமக்கிழத்தியர், பரத்தையர் என்ற சொற்கள் யாரைக் குறிக்கின்றன? அவை ஆசைநாயகியைத்தான் குறிக்கின்றன. தலைவனின் பலதார திருமணத்தைக்(சமூகத்தால் ஏற்கப்படாத) குறிக்கின்றன. விலைமகளிரைக் குறிக்கவில்லை.
வெளியாள்
"பரத்தை" என்பதற்கு அயன்மை, அயலார், அயலாந்தன்மை, அயலவர், வெளியாள், அந்நியர்,புறப்பெண்டிர் என்று பொருள்கொள்ளலாம். பரத்தை என்பது, "வெளியாள்" என்றால், "உள்ளாள்" என்பது யாரைக்குறிக்கிறது? தலைவியைத்தான் குறிக்கிறது. தலைவியைத் தவிர்த்துத் தலைவனுக்கு இன்பம்தரும் பிற பெண்கள் வெளியாட்கள்தான் - பரத்தையர்தான்.
ஆனால், அவ்வெளியாட்களாக அப்பெண்கள் தன் தலைவனுக்கும் அவனது தலைவிக்கும் பிறந்த குழந்தையைத் தன்குழந்தையாகப் பாவிக்கும் செயல்களும் அக்குழந்தைக்கு அணிகலன்களை வழங்குவதும் அக்குழந்தை அப்பெண்ணைத் தாய் என்று அழைப்பதும் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. இப்பாசப்பிணைப்பினை எப்படிப் புரிந்துகொள்வது?
எக்காலத்திலும் எந்தப் பாலியல் தொழிலாளியும் தன் நுகர்வோரின் குழந்தையைத் தன் குழந்தையாகப் பாவித்ததில்லை. அக்குழந்தைக்குப் பொன்நகையை அணிவித்ததில்லை. அக் குழந்தை அவளைத் தாய் என்று அழைத்ததும் இல்லை. இவற்றின் வழியாக அவ் வெளியாட்கள் –பரத்தையர் "விலைமகளிர் அல்லர்" என்பது புலனாகின்றது.
சின்னம்மாக்கள்
தன் கணவரைப் போலவே தன் குழந்தையும் வெளியாட்களுடன் நட்புறவுகொள்வதைத் தலைவி கண்டிக்கும் நிகழ்வுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. தலைவி அவ்வெளியாள்களை "எங்கையர்" என்ற சொல்லால் அழைக்கின்றாள்.
அதாவது, "என்னுடைய தந்தை" என்பது "எந்தை" என்றானதுபோல, "என்னுடைய தங்கைகள்" என்பது "எங்கையர்" என்றானது.
தலைவிக்கு உடன்பிறந்த தங்கைகள் அவர்கள் அல்லர். ஆனால், "அம் முறையுடைய பெண்கள் அவர்கள்" என்பது இங்கு குறிப்புணர்த்தப்படுகிறது. அப்படியானால், தலைவனின் குழந்தைக்கு அப்பெண்கள் சின்னம்மாக்கள்தானே!
அகநானூற்றின் 16ஆவது பாடல் பெரியம்மா-சின்னம்மாவின் உறவினை உறுதிப்படுத்தியுள்ளது.தன் தலைவனின் குழந்தையைக் கண்ட சின்னம்மா, அவனை அன்போடு அருகே அழைத்து, "வருக என்னுயிரே" என்று கொஞ்சுகிறாள். அதனைக் கண்ட தலைவி, "குறுமகளே! ஏன் பேதுற்றனை.நீயும் இவன் தாய்தானே!" என்று அன்புறவு பாராட்டுகிறாள். அத்தகைய அன்புறவு பலதார மணத்தில் பின்பற்றப்படுவதுதான்.
இச்சின்னம்மாக்கள் தம் தெருவில் (அவர்களுக்கெனத் தனித் தெருவும் இருந்தது -பரத்தைச்சேரி) தம் வீட்டில் தனித்திருந்து, தலைவனோடு மட்டுமே வாழ்ந்தனர். அவர்களுக்குப் பிற ஆண்களோடு, எவ்விதமான தொடர்பும் இருக்கவில்லை. அவ்வாறு வெளியாட்கள் பிற ஆண்களோடு தொடர்பிலிருந்தால், தலைவி அவர்களை "எங்கையர்" என்று அழைப்பாளா? ஆக,சின்னம்மாக்கள் "விலைமகளிர் அல்லர்" என்பது தெளிவாகின்றது.
இப்போது, என் மனத்தில் ஒரு கேள்வி எழுகின்றது. தலைவியைப் பெற்ற தாயினை "நற்றாய்" என்றும் தலைவியை வளர்க்கும் தாயைச் "செவிலித்தாய்" என்றும் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.ஆதலால், செவிலித்தாய் என்பவள் தலைவியின் தந்தைக்கு ஆசைநாயகியா? காரணம்,இலக்கியத்தில் தலைவியின் தோழியாக வருபவள் செவிலித்தாயின் மகள் அல்லர்.செவிலித்தாய்க்குச் சொந்த மகனோ, மகளோ இருப்பதாக இலக்கியத்தில் குறிப்புகள் இல்லை.இது மேலும் ஆய்வுக்குரியது.
குழப்பமும் தெளிவும்
தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள "காமக்கிழத்தியர்" சொல் யாரைக் குறிக்கிறது?விலைமகளிரையா? அல்ல. "கிழத்தி" என்றால், தலைவியைக் குறிக்கும். "கிழவன்" என்பது,தலைவனைக் குறிக்கும். "காமக்கிழத்தியர்" என்பது, ஆசைநாயகிகளைக் குறிக்கும்.
சங்க இலக்கியங்களில் காணப்படும் "காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை, நயப்புப் பரத்தை, இற்பரத்தை, இல்லிடப்பரத்தை" போன்ற சொற்கள் அவ் இலக்கியங்களின் மூலப்பாடலில் இடம்பெறவில்லை. அப் பாடல்களின் திணை, துறை, அடிக்குறிப்புகள், பதவுரை போன்றவற்றில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அப்பாடல்களைப் புரிந்து கொள்வதற்காகப் பிற்காலத்தில், சங்ககாலத்துக்குப் பின்னர் எழுதப்பெற்றவை.
முற்காலத்தில் "நாற்றம்" என்ற சொல் "நறுமணம்" என்ற பொருளில் கையாளப்பட்டது.பிற்காலத்தில் அதே சொல் "விரும்பத்தகாத மணம்" என்ற பொருளில் கையாளப்பட்டுவருகின்றது.அதுபோலத்தான், முற்காலத்தில் ஆசைநாயகிகளைக் குறித்த சொற்கள் பிற்காலத்தில் விலைமகளிரைக் குறிக்கப் பயன்படுகின்றன.
யாருக்குச் சொந்தம் யார் யாரோ?
வெளியாளுக்குத் தன் தலைவனின் மனைக்கிழத்தி (தலைவி) யார் அவளுடைய பிள்ளைகள் யார் யார் என்பதெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், தலைவிக்குத் தன் தலைவனுக்கு யாரெல்லாம் ஆசைநாயகிகள் என்பது தெரியாது. ஒன்றிரண்டு என்றால் தெரிந்திருக்கும்!
வழித்தடத்தில் தன் தலைவனின் தலைவியைச் சந்திக்கும் ஒரு ஆசைநாயகி, அவளருகில் சென்று,தன்னை அறிமுகப்படுத்தும் விதமாக, "நான் தூரத்தில் வசிப்பவள். உனக்குத் தங்கைமுறையை உடையவள்" என்று கூறித் தலைவியின் நெற்றியையும் கூந்தலையும் அன்புடன் வருடுகிறாள்.இந்தப் பாசவருடல் அகநானூற்றின் 386ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்படிப் பாசமாக அவர்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டைகள் வருவதும் உண்டு.
சக்களத்திச் சண்டைகள்
"சக்களத்தி" என்றால் சக கிழத்தி என்று பொருள். அதாவது, அக்காள் – தங்கைகள்.அவர்களுக்குள் ஏன் சண்டைவருகிறது? அவர்களுக்குத் தனித்தனியே கணவர்கள் இருந்துவிட்டால் ஏன் சண்டைவரப்போகிறது? ஒரே கணவன் என்பதால்தான். அதுவும் அவர்கள் ஒருதாய் வயிற்று அக்காள் – தங்கைகளாக இல்லாமல் இருப்பதால்தான் இச் சண்டை வலுக்கிறது.
குறிப்பாக இச் சண்டைகள் அக்காலத்தில் மருதத்திணை சார்ந்த இடங்களில் (வயலும் வயல் சார்ந்த இடங்கள்) மிகுதியாக உள்ளது. காரணம், தலைவனிடம் செல்வம் மிகுந்துள்ளது.அவனுக்கு "வீடுகள்" சிலவற்றைப் பராமரிக்கும் தெம்பும் வந்துவிடுகிறது. அவன் ஆசைநாயகியிடம் மிகுதியான நேரத்தைச் செலவிடுவது தலைவிக்குப் பிடிக்கவில்லை. தன் கணவனைக் கட்டுப்படுத்த இயலாத தலைவி, தன் கணவனின் ஆசைநாயகியின் மீது சினத்தைக் காட்டுகிறாள். இதனை அகநானூற்றின் 76, 276, 336, 346 ஆகிய பாடல்களும் குறுந்தொகையின் 8, 164, 80, 364, 370 ஆகிய பாடல்களும் விளக்கியுள்ளன.
தலைவனைப் பிரிந்து வருந்துவது தலைவி மட்டுமல்ல, சிலவேளைகளில் ஆசைநாயகிகளும்தான்.இச்சோகத்தினை நற்றிணையின் 90, 216, குறுந்தொகையின் 238, அகநானூற்றின் 146 ஆகிய பாடல்களில் காணமுடிகின்றது. ஆசைநாயகிகள் விலைமகளிர்களாக இருந்தால், இச்சோகம் அவர்களை வாட்டியிருக்குமா? இதன்வழியாகவும், ஆசைநாயகிகள் விலைமகளிர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.
நற்றிணையில் இடம்பெற்றுள்ள 320ஆவது பாடல் ஒரு பரத்தை தன் தலைவன் தன்னைப் பிரிந்து பிறிதொரு பரத்தையிடம் சென்றதால் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ளது. அப்படியென்றால் அந்தப் பரத்தை கைவிடப்பட்டவள் ஆகிறாள். அவள் இனி வேறு ஒரு தலைவனைத் தேடிக்கொள்வாளோ? அப்படியென்றால், இந்தப் பரத்தையும் விலை மகளாகிறாளோ?
ஆசைநாயகியைச் சரிவரப் பேணிக்காக்காத தலைவர்களால் அவர்கள் வேறுவழியின்றி,வாழ்வாதாரத்துக்காக விலைமகளாக மாறுகின்றனர். போரில் வென்று கொள்ளையடித்துவரும் பொருட்களுடன் அடிமைகளாகப் பெண்களையும் கொண்டுவருதல் வழக்கமாக இருந்துள்ளது.அவ்வாறு கொண்டு வரப்பட்ட மகளிர் "கொண்டிமகளிர்" என்று அழைக்கப்பட்டனர்.அப்பெண்களும் காலப்போக்கில் விலைமகளிராகிறார்கள்.
நற்றிணையில் இடம்பெற்றுள்ள 170ஆவது பாடல் பரத்தையைக் கண்ட ஊர்ப்பெண்கள் தம் தலைவனை அவளிடமிருந்து காத்துக்கொள்வதற்கு முற்படுவதாகக் கூறியுள்ளது. அப்படியென்றால்,ஆசைநாயகியைவிட விலைமகள் ஆபத்தானவளோ!
சங்க காலத்தில் பெண்ணுடல் விற்கப்படவில்லை. சங்க காலத்துக்குப் பின்னர் பெண்ணுடல் பல வகைகளில் விற்கப்பட்டது. காலத்தால் பிற்பட்ட பரிபாடலையும் மதுரைக்காஞ்சியையும் வீதிகளில் விலைமகள்கள் பெருகிவிட்ட தன்மையினைப் புலப்படுத்துகின்றன.
மதுரைக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள 569 முதல் 576 ஆம் வரையிலான அடிகள் அக்காலத்தின் பெரு நகரங்களுன் ஒன்றான மதுரை நகர வீதிகளில் விலைமகள்கள் வலம்வருவதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.
பரிபாடலின் 20ஆவது பாடலின் 48 முதல் 58 வரையிலான அடிகளில் தெருவில் செல்லும் விலைமகளைக் கடிந்துகொள்ளும் நிகழ்வு சுட்டப்பெற்றுள்ளது.
சங்ககாலத்திற்குப் பின் காலவோட்டத்தில் இவ் விலைமகளுக்குப் பொதுமகள், வரைவின் மகளிர்,கணிகை, சலதி, தாசி, வேசி, தேவரடியாள், விபச்சாரி, பாலியல் தொழிலாளி இன்னபிற பெயர்கள் ஏற்பட்டன.
காலங்கள் மாறினாலும் மனைவி, ஆசைநாயகி, விலைமகள் என்ற முத்தரப்பும் வலுவுடன்தான் உள்ளன.
- – -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக