பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 19 பேர் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை. ஆனால், கலந்தாய்வுநடத்தினாலும் பணி நியமனங்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.
மனு விவரம்:
முன்னதாக, உயர் நீதிமன்றத்தை அணுகியவர்களில் ஒருவர் தனது மனுவில், "நான் பி.லிட்., பி.எட். பட்டதாரி. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்விலும் தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ளேன்.
தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மட்டுமின்றி பிளஸ்–2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களைக் கொண்டு 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படுகிறது.
கடந்த 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு பிளஸ்–2 தேர்வில் 1200–க்கு 1000-க்கும் குறைவான மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. ஆனால், இப்போது 1200–க்கு 1195 மதிப்பெண்கள் வரை எடுக்கக்கூடிய நிலை உள்ளது. 2000–ஆவது ஆண்டுக்கு முன்பு உள்ள பாடத் திட்டங்கள் கடினம், கல்வித் தரம் போதிய அளவு இல்லை போன்ற சூழ்நிலை இருந்தது.
நிலைமை அப்படியிருக்க, அப்போதைய மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் வழங்கினால், எங்களை போன்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் குற்றச்சாட்டு என்ன?
வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60% மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே ஆசிரியர்களின் குற்றச்சாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக