வியாழன், 13 நவம்பர், 2014

“என் பையன் யூகேஜி படிக்கிறான், நீங்க என்ன படிக்கிறீங்க மிஸ்?”

  ஒரு பெரிய கல்வி நிறுவன வளாகத்துக்குக் கணக்கு தணிக்கை செய்யச் சென்றிருந்தேன். அந்த வளாகத்துக்குள், நர்ஸரிப் பள்ளியிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரிவரை இருந்தன. நர்ஸரிப் பள்ளி முதல்வர் அறைக்குப் பக்கத்து அறையில்தான் தணிக்கை வேலைகள் நடந்தன. குழந்தைகளின் குதூகலக் கிறீச்சிடல்களுக்கு இடையில் ஆசிரியைகளின் அதட்டல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

வகுப்பறையில் பாடம் நடத்தப்படும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. பள்ளியின் சுவர்களில் ஆங்காங்கே 'SPEAK IN ENGLISH' என்று எழுதப்பட்டிருந்தது. அநேகமாக ஒவ்வொரு 50 அடி தூர இடைவெளியில் இந்த நோட்டீஸ் கண்ணில்பட்டது.

பள்ளி முதல்வர் அறையின் பக்கத்து அறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை அடிக்கடி சத்தமாகக் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டிருந்த கேள்விதான் இந்தப் பதிவுக்கான காரணம். மாணவர்களிடம் அவர் கேட்டது: "Are you understand?".

அந்த ஆசிரியை வன விலங்குகள்குறித்த பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். 'பொர்க்கிபைன்', 'பொர்க்கிபைன்' என்று வேறு சொல்லிக்கொண்டிருந்தார். வெகுநேரம் கழித்துத்தான் விளங்கியது, அவர் முள்ளம்பன்றியைச் சொல்கிறார் என்று. அதன் சரியான உச்சரிப்பு 'போர்க்கியூபைன்'. இன்னொரு விலங்கின் பெயர் ஆசிரியையின் மொழியில் 'லியோபார்ட்' (என்னவென்று தெரிகிறதா? Leopard! அதாவது 'லெப்பர்ட்) இதுகூடத் தேவலாம்.

அந்த ஆசிரியையை மிஞ்சிவிட்டார் முதல்வர். தணிக்கையின் இறுதியில் நான் எழுப்பியிருந்த கணக்குகள் தொடர்பான சந்தேகங்களைப் படித்துவிட்டுக் கேட்டார்: "இந்த ப்ராப்ளம்களுக்கெல்லாம் என்ன சால்வேஷன் சார்?" ('சொல்யூஷன்' என்பதுதான் 'சால்வேஷன்' என்றாகிவிட்டது என்பதை அறிக).

திரும்பி வரும்போது பள்ளிப் பேருந்து இருக்கைகளின் முதுகில்கூட அந்த வாசகம் ஒட்டப்பட்டிருந்தது கண்ணில்பட்டது: SPEAK IN ENGLISH. முன்பு, தமிழ்ப் பெண் விலாசினியின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், அவருடைய குழந்தையின் பள்ளி ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு, "என் பையன் யூகேஜி படிக்கிறான், நீங்க என்ன படிக்கிறீங்க மிஸ்?" என்று கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக