பாலை பாடிய பெருங்கடுங்கோ (16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398): இவர் சேர வரச பரம்பரையினருள் ஒருவர். பாலைத் திணையைப் பலபடப் பல தொகை நூல்களில் சிறப்பித்து இவர் பாடி இருத்தலினால், 'பாலை பாடிய' என்ற அடைமொழியைப் பெற்றார். இவருடைய பாடல்களின் சொல்நயம் பொருள் நயங்கள் படிப்பாரைப் பிணிப்பனவாய் அமைந்துள்ளன.
இடையிடையே நீதிகளை அழகாக அமைத்துள்ளார் இவர். "பாலை நிலம் இன்னாதாயின் தலைவர் பிரிந்த மனை மகளிருக்கு இனிதாகுமோ?" (124) என்று தோழி கூறியது, "நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு" என்ற சீதையின் கூற்றை நினைவூட்டுகின்றது. "நீ தனிமையால் வருந்த யான் நின்னைப் பிரிந்து சென்ற இடத்தே மனம் பொருந்தி யிருப்பேனாயின், இரவலர் என்னைத் துறந்து வாராத நாட்கள் பலவாகுக" என்று தலைவன் வஞ்சினம் கூறுவதாக (137) இவர் கூறியுள்ளார். இக்கருத்தையே இவர் பின்னும், "இரந்தோர்க் கொன்றீயாமை யிளிவு" (கலித். 14) என்று கூறுகிறார். இவர் பாடல்களில் செல்வத்தைப் பற்றிய பல செய்திகள் அழகாகக் கூறப்படுகின்றன. 'தம்முடைய முன்னோரால் ஈட்டி வைத்த பொருளைச் செலவிட்டு வாழ்வோர் செல்வர் எனப்படார்; அஃது இரந்து வாழ்வதினும் இழிவுடையது' (283), "செம்மையி னிகந்தொரீஇப் பொருள் செய்வார்க் கப்பொருள், இம்மையு மறுமையும் பகையாவ தறியாயோ" (கலித். 14), "கிழவ ரின்னாரென்னாது பொருடான், பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும்" (கலித். 21), "அறன் கடைப் படாஅ வாழ்க்கையு மென்றும், பிறன்கடைச் செலாஅச் செல்வமு மிரண்டும், பொருளினாகும்" (அகநா. 155) என்பன பொருளைப் பற்றி இவர் கூறுவனவற்றுள் ஒரு சிலவாம். ஆறலைப் போரின் கொடுமையை, "கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின்" (கலித். 4) என்று குறித்திருக்கிறார். பாலை நிலத்தில் மரம் வெம்பிவாடுதலை, "வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச், சிறியவன் செல்வம் போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி,யார்கண்ணுமிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல், வேரொடு மரம் வெம்ப" (கலித். 10) என்று கூறும் முகத்தால் பல நீதிகளை அமைக்கிறார். நீதிகளை இவர் உவமை வாயிலாக விளக்குவதற்கு, "சிறப்புச்செய் துழையராய்ப் புகழ்போற்றி மற்றவர், புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்பு போல்", "செல்வத்துட் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர், ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்புபோல்", "பொருந்திய கேண்மையின் மறையுணர்ந் தம்மறை, பிரிந்தக்காற் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்பு போல்" (கலித். 25) என்பன உதாரணமாகும். புறநானூற்றில் ஒரு வீரனது ஆற்றலை இவர் பாடியிருக்கும் விதம் படித்து இன்புறற்பாலது (282). இவரைப் பாடியவர் பேய் மகள் இளவெயினி என்பார் (புறநா.11). இவர் இயற்றிய வேறு பாடல்கள்: நற். 10; பாலைக் கலி; அகநா. 12; புறநா. 1.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக