சனி, 15 நவம்பர், 2014

ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய டி.என்.பி.எஸ்.சி., முடிவு ?

கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும்
குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர், நட்ராஜ், ஆன்-லைன் வழி தேர்வை அமல்படுத்தினார். குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில் மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்தினார். இந்த வகை தேர்வு,
தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்தது. இதனால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.
கடந்த 8ம் தேதி, குரூப் 2 முதன்மைத் தேர்வு, மாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில்
நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வு, இரு தாள்களாக நடத்தப்பட்டது.
காலையில், ஆன்-லைன் வழியிலான தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளித்தல் முறையிலான தேர்வும் நடந்தது. இதில், ஆன்-லைன் வழியிலான தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், சில மையங்களில், 'சர்வர்' முடங்கியதாலும், குறித்த நேரத்தில்,
தேர்வு துவங்கவில்லை. மறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில், ஒரு அறையில், 'சர்வர்' கோளாறால்,தேர்வெழுத முடியாத 43 தேர்வர்கள், போராட்டம் நடத்தினர். கடைசியில், இவர்களுக்கு, மறுநாள் புதியதேர்வு நடத்தப்பட்டது. சென்னை செங்குன்றத்தில் அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது. இப்படி,பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக, ஆன்-லைன் வழி தேர்வு, தேவைதானா என, தேர்வாணையம்ஆலோசித்து வருகிறது.
மின்சார பிரச்னையையும், தொழில்நுட்ப பிரச்னையை யும், தவிர்க்க முடியாது என்பதால், ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, விரைவில், 'போர்டு' கூட்டத்தில் ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக