ஞாயிறு, 30 நவம்பர், 2014

TRB PG TAMIL :திருநாவுக்கரசர்



  திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகனாகத் திருநாவுக்கரசர் கி.பி. 575-ல் அவதரித்தார். பெற்றோர்கள் அவருக்கு மருள்நீக்கியார் எனப் பெயரிட்டு அழைத்தனர். இளம் பருவத்தில் தம் பெற்றோரை இழந்த அவர் தமது தமக்கiயாரான திலகவதியாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். எனினும், உலக நிலையாமையை உணர்ந்து சமயநூற் கோட்பாடுகளை ஆராயப் புகுந்தார். ஆனால் சிறந்த சமயம் எது என்பதைத் தேர்ந் தெடுப்பதில் அவர்; தெளிவில்லாதவராகிப் போனார். சமணப் பள்ளியின் தலைமை குருவின் தவறான அறிவுரையை நம்பி சமணம் சார்ந்தார்.

  சமண சமயத்தில் மேம்பட்டு தருமசேனர் என்னும் பட்டம் பெற்றார். தன் தம்பியின் இந்த மத மாற்றம் திரகவதியாருக்குப் பெரும் மனவேதனையை அளித்தது. தம்பியின் இந்த மனமாற்றத்தால் திருவாமூரில் வாழ்வதற்கு விரும்பாமல் திருவதிகை என்னும் தலத்தில் குடியேறினார். வருடங்கள் பல உருண்டேடின. ஆனால் தமபியின் மனம் மாறவில்லை. ஒருநாள் தன்னுடைய தம்பியை நினைந்து திருவீரட்டானரிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு நிம்மதி இன்றி நித்திரை போனார். அல்லலுறும் அடியவர்களின் துயர் துடைக்கும் கருணாமூர்த்தியான கங்காதரன் அன்று இரவு திலகவதியாரின் கனவிலே தோன்றி 'சூலைநோய் கொடுத்து ஆட் கொள்வேன்' என்று கூறி மறைந்தார்.

இறைவனின் அருள் வாக்கின்படி தருமசேனர் என்ற மருள்நீக்கியார் சூலை நோயால் பீடிக்கப்பட்டு, சமணர்களின் சாமர்த்தியங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால்,  தமது தமக்கையாரிடம் சரண் புகுந்தார். திருவைந்தெழுத்தோதித் திருநீற்றைத் தன் தம்பியிடம் கொடுத்தார். பயபக்தியுடன் அவர் அளித்த விபூதியை இருகையேந்தி பெருவாழ்வு வந்ததெனப் பெற்று, தன் வயிற்றிலும் உடலெங்கும் பூசிக் கொண்டு, திருவதிகைப் பெருமானை வழிபடடுக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் பதிகம் பாடி சூலைநோய் நீங்கப் பெற்றார். அப்போது. 'இனிக்கும் தேன் தமிழில் நீ எனைப்பாடி மகிழ்வித்தாய். ஆகவே இனி உம்மை மக்கள் 'திருநாவுக்கு அரசர்' என்று அழைப்பர்களாக. உன் பெயரும் புகழும் ஓங்கும்' என்று தெய்வ வாக்கு ஒன்று ஒலித்தது. அன்று முதல் மருள்நீக்கியாரை சிவபகிதர்கள் திருநாவுக்கரசர் என்று அழைக்கலானார்கள்.     


    பல்லவ நாட்டு மன்னனான மகேந்திரவர்ம பல்லவன், சமண மதத் தலைவர்களின் பொய்யான அறிவுரைகளை ஏற்று, திருநாவுக்கரசரைக் காளவாயில் தள்ள உத்தரவிட்டான். சமணர்தம் ஏவலால் திருநாவுக்கரசு சுவாமிகள், சுண்ணாம்பு நீற்றறையில் இடப்பட்டார். சிவ மந்திரத்தை நெஞ்சுள் இருத்தி ஓதியவாறு விளங்கிய சுவாமிகளுக்கு, அவ்வெம்மையுடைய நீற்றறை பனிக்குகை போலக் குளுகுளு வென்றாயிற்று. அடியவரின் துயர் துடைக்கும் கருணாகர மூர்த்தியின் கருணையை நினைந்து நெஞ்சம் நெகிழ, கண்ணீர் கசிய 'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற திருப்பதிகம் அவர் நெஞ்சத்தின் அடியிலிருந்து பிறந்தது. சுண்ணாம்புக் காளவாய் வெப்பத்திலே வெந்து மடிந்து நீறாகிப் போயிருப்பார் நாவுக்கரசர் என்று எண்ணி மகிழ்ந்த பல்லவ மன்னனும், சமணர்களும் காளவாய்க் கதவைத் திறக்கச் செய்தார்கள் - அந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க. கதவு திறக்கப்பட்டது. அனல்காற்று வீசவில்லை. குளிர் தென்றல் குபுகுபு என்று வெளிப்பட்டது. சாம்பலான நாவுக்கரசரின் நீறான உடலுக்குப்பதில் - சம்மணமிட்ட நிலையில், உடலில் திருநீறணிந்த கோலத்தில் அவர் நிஷ்டையில் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.

   பின்னர், சமணர்கள் இவர்க்கு கொடிய விஷத்தை பாலில் கலந்து கொடுத்தும், மதயானையைக் கட்டவிழ்த்து விட்டும் திருநாவுக்கரசர் சுவாமிகளை கொல்வதற்கு முயன்றனர். ஆனால் சிவபெருமான் அருளால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சமணர்களின் தூண்டுதலால், நாவுக்கரசரைப் பெரியதோர் கருங் கல்லில் கயிறுகளால் பிணைத்து, தோணியில் கொண்டுபோய் நடுக்கடலில் வீசிவிட்டு வருமாறு பல்லவ மன்னன் ஆணையிட்டான். சேவர்களும் அப்படியே செய்தனர். சிவ சிந்தனை உறைப்புடைய மெய்த்தொண்டராகிய வாகீசப் பெருந்தகையார் 'எது எப்படியாயினும் ஆகுக, யான் என் எந்தையை ஏத்துவன்' என்று ஸ்ரீ பஞ்சாட்சரத்தைத் துதிக்கத் தொடங்குபவராய் 'சொற்றுணை வேதியன்' என்னும் திருப்பதிகத்தைப் பாடியவுடன் அவரைக் கட்டிய கயிறு அற்றுப்போக அவரை ஏற்றிய கல்லே தெப்பமாக மாற அதன் மீது மிதந்து கரையேறினார்.

    பின்னர் பல ஆண்டுகள் திருவதிகையில் தங்கி உழவாரப்பணி செய்து வந்தார். தலயாத்திரை செய்ய விரும்பித் தலங்கள்தோறும் உழவாரப்பணி செய்தும், பதிகம் பாடியும் வழிபட்டார். அப்போது பெண்ணகடத்தில் இறையருளால் இடபக்குறியும் சூலக்குறியும் தோளில் 

  

பொறிக்கப் பெற்றார். பொன்னம்பலத்தாடும் பெம்மான் நடராஜனை தரிசிக்கத் தில்லைக்கு வந்தார். எங்கு வந்தாய் என்று கேட்ட அம்பல வாணனுக்கு 'பத்தனாய்ப் பாட மாட்டேன்' என்ற திருப்பதிகம் பாடி பதில் உரைத்தார். அதன்பின் தித்திக்கும் பல திருப்பதிகங்களைப் பாடி, சபாபதிக்கு நிகர் எவருமில்லை என்று சிவனடியார்களுக்குப் போதித்து, உழவாரப்பணி புரிந்தவாறு சில காலம் சிதம்பரத்தில் தங்கினார். கி. பி. 644-ல் சீர்காழியில் திருஞானசம்பந்தர் சுவாமிகளை முதன் முறையாகச் சந்தித்து அவரால் 'அப்பரே' என அழைக்கப் பெற்றார். பின்பு பலதலங்களை வணங்கி திருநல்லூர்க்கு வந்த போது இறைவனால் திருவடி சூட்டப்பெற்றார். 

   திங்களுரில் அப்பூதியடிகளின் மகன் அரவு தீண்டி இறக்க, 'ஒன்றுகொ லாமவர்' என்ற திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். திருவாரூரில் திருவாதிரை விழாக்கண்டு மகிழ்ந்து வீதிவிடங்கப்பெருமான் மீது பக்திரசம் சொட்டும் 'திருவாதிரைத் திருப்பதிகங்கள்' என்று அழைக்கப்படும் பத்துப் பதிகங்களைப் பாடினார். மேலும் பல சிவாலயங்களைக் கண்டு வழிபட்ட அவர், திருப்புகலூரில் ஞானசம்பந்தர் பெருமானை இரண்டாம் முறையாகச் சந்தித்து உடனுறைந்தார். 

   பின்பு திருநாவுக்கரசரும் சம்பந்தரும் இணைந்து தலயாத்திரை தொடங்கிப் பல தலங்களை வணங்கித் திருக்கடவூரை அடைந்து குங்குலியக்கலய நாயனரின் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்து பல தலங்களை வழிபட்டுத் திருவீழிமிழலையை அடைந்து சில நாட்கள் தங்கினார். அப்போது பஞசம் ஏற்பட்டதால் அடியவர்கள் பசியால் துன்புற்றனர்.  அது  கண்ட  இருபெரும் சமயக் குரவர்களும் ஈசனை நினைந்து துயில் கொள்ளலாயினர். ஈசன், கனவில் தோன்றிப் பஞ்சம் தீரும் வரையில் படிக்காசு அளிக்கின்றோம் என்று அருள் செய்தனர். அவ்வாறே பீடத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு பொற்காசும், மேற்குப் பகுதியில் ஒரு பொற்காசும் ஆக இரு காசுகள் அளித்தனர். பின்பு இருவரும் திருமறைக்காடு சென்றனர்.  அங்கே வேதத்தால் அடைக்கப் பெற்றிருந்த கதவுகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் 'பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ' என்ற பதிகம் பாடி திறந்தார். திருஞானசம்பந்தர் சுவாமிகள் 'சதுரம் மறைதான்' என்ற திருப்பதிகம் பாடி அடைப்பித்தார். பாண்டி நாட்டிலிருந்து மங்கையர்க்கரசியார் விட்ட அழைப்பிற்கு  இணங்கிச் திருஞானசம்பந்தர் சுவாமிகள் புறப்பட்டபோது, 'நாளும் கோளும் நன்றாயமைய வில்லை' என நாவுக்கரசர் தடுக்கச்


சம்பந்தர் 'வேயுறு தோளிபங்கன்' என்ற கோளறு பதிகம்பாடி நாவுக்கரசரிடம் விடைப்பெற்றுப் புறப்பட்டார். 

    பின்னர் நாவுக்கரசர் தனியாக யாத்திரை மேற்கொண்டு திருநாகைக்காரோணம், திருவாவடுதுறை தலங்களில் உள்ள தயாநிதியான இறைவனை தரிசித்து உள்ளம் உருகிப்பாடி வழிபட்டு, திருப்பழையாறை என்னும் தலத்திற்கு வந்தார். அங்கு வடதளியில் உண்ணா நோன்பிருந்து அரசன் உதவியால் சமணர்களை அகற்றி அத்தலத்து இறைவனை வழிபட்டார். திருப்பழையாறையில் பலநாட்கள்
தங்கிய பின் காவிரிக்கரை ஓரமாக உள்ள சிவஸ்தலங்களான திருவானைக்கா, திருவெயூம்பூர், சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை போன்ற தலங்களுக்குச் சென்று ஈசனை வணங்கி, ஆலயங்களைத் துப்புறவு செய்து மகிழ்ந்தார். பின்னர்த் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியில் இறைவனால் கட்டமுது தரப்பெற்றார். மீண்டும் தன் சிவத்தால யாத்திரையை மேற்கொண்ட அப்பர். திருவண்ணாமலை, காஞ்சி, திருக் கழுக்குன்றம், திருவான்மியூர், திருமயிலை, திருவொற்றியூர், திருப்பாகர், திருவலங்காடு, திருக்காரிக்கரை, திருக்காலத்தி போன்ற திருத் தலங்களை பதிகம் பாடி தரிசித்துவிட்டு திருக்கயிலையை தரிசிக்க வேண்டி பனிமலையில் ஏறிச்சென்றார். 

    திருக்கயிலை செல்லும் வழியில் இறைவனால் தடுத்தாளப்பெற்று அங்குள்ள தடாகத்தில் மூழ்கித் ஒரு வாவியின் மேலேத் தோன்றி கரை ஏறினது திருவையாற்றில் உள்ள ஒரு குளத்தில் எழுந்து கயிலைக் காட்சியைக் கண்டு 'வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி' என்ற பதிகம் பாடி இறைவனை துதித்தார். பின்னர் பல தலங்களை வழிபட்டுத் திருப்பூந்துருத்தியில் சிறிது காலம் தங்கியிருந்து அங்கே திங்களும் ஞாயிறும் தோயும் மடம் ஒன்று கட்டினார். திருஞானசம்பந்தர் சுவாமிகள் திருப்பூந்துருத்திக்கு வந்த போது மூன்றாம் முறையாக அவரைச் சந்தித்தார். சில நாட்கள் உடனுறைந்த திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டு யாத்திலைக்காகப் பிரிந்து சென்றதும் திருநாவுக்கரசர் சுவாமிகள் பாண்டி நாட்டு யாத்திரை மேற்கொண்டார். இறுதியாகத் திருப்புகலூரில் வந்து தங்கி உழவாரப் பணி செய்யும் போது, ஈசன் அப்பரை சோதிக்க விரும்பி நிலத்திலிருந்து பொன்னும், நவமணிகளும் வெளிப்படுமாறு செய்தார். அப்பர் பெருமானோ அவற்றைத் துச்சமாகக் கருதி, குப்பை கூளங்களைப்போல் வீசியெறிந்தார். பற்று அற்றுப் பணி செய்த அப்பர், உடல் தளர்ந்து போனார். உலக வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது.
   

    உலக வாழ்வில் சலிப்படைந்த அப்பர், தீவண்ணனின் திருவடி நிழலை அடைந்து பிறவாப் பெருவாழ்வைப் பெற எண்ணினார். திருப்புகலூர் அண்ணலிடம் தன் விருப்பைக் கூறி வேண்டிக் கொண்டார். அடிகளாரின் வேண்டுகோளை இறைவனும் ஏற்றுக் கொண்டார். திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து வரும்போது தமது எண்பத்தோராம் வயதில் (சுமார் கி. பி. 656 ல்) சித்திரை மாதம் சதய நாளில் சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்தார். 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக