திங்கள், 2 டிசம்பர், 2013

தபால் மூலம், நிர்வாகப் பணி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' கல்வித்துறை அலுவலர்கள் கோரிக்கை


தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம், நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு, கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்களை, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்து உள்ளது. 4, 5, 6 தேதிகளில், கோரிக்கை அட்டை அணிந்து, பணியாற்றுவது; 11, 13 தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களிலும், 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.

இது குறித்து, சங்கத்தின் அறிக்கை: கல்வித் துறை வழக்குகள் தொடர்பாக, பள்ளி கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் இருந்து சரியான வழிகாட்டி நெறிமுறைகள் வழங்காததால், மாநிலம் முழுவதும் இருந்து, கல்வித் துறை அலுவலர்கள், ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். இதனால், மாவட்டங்களில், பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனாலும், வழக்குகள் தீரவில்லை. அனைத்து வழக்கு விவரங்களையும் தொகுத்து, ஒரே வழக்காக, சம்பந்தப்பட்ட துறையே, நேரடியாக, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சட்ட சிக்கல்களை தீர்க்க, மாவட்டந்தோறும், சட்ட அலுவலர் நியமிக்க வேண்டும். சிறிய புள்ளி விவரங்களை கூட, "மாவட்டங்களில் உள்ள பணியாளர்கள், நேரில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதனால், அரசின் பணமும், பணியாளரின், தினசரி வேலையும் பாதிக்கிறது. தகவல்தொடர்பு வசதி, எங்கேயோ போய்விட்ட இன்றைய நிலையிலும், நேரில், தபால்களை எடுத்துவரச் சொல்வது, தேவையில்லாத வேலை. இதற்கு, உடனடி முற்றுப்புள்ளி வைத்து, " மெயில்' மூலமாக, விவரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு: மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியாகும்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
மேலும் தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளுடன் சரியான விடைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் கூறியுள்ளது.
வணிகவரிகள் துணை ஆணையாளர், சார் பதிவாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் என குரூப் 2 தொகுதியின் கீழ் வரும் ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கென 114 நகரங்களில் 2 ஆயிரத்து 269 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்வுக்கு 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியுடைய 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொழிப் பாடங்களான தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு குறித்து தஞ்சையைச் சேர்ந்த கார்த்திக் கூறியது:
தமிழ் மொழியிலிருந்து கேட்கப்பட்ட 100 கேள்விகள் எளிமையாக இருந்தன. ஆனால் பொது அறிவு, அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. நேரடியாக இல்லாமல் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன. தவறான அல்லது புரியாத கேள்விகள் என எதுவும் இல்லை என்றார்.
மூன்று மாதங்களில் முடிவு: தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் முக்கியமான தேர்வு மையங்களுக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தனர்.
தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியது:
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும். மேலும், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான சரியான விடையைத் தெரிந்து கொள்ளும் வகையில், அதற்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்படும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்வினை எழுதியவர்களின் எண்ணிக்கை விவரங்கள் ஓரிரு நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

செவ்வாய் கிரக பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) நள்ளிரவு 12.49 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் மொத்தம் 300 நாள்களில் 44 கோடி கிலோமீட்டர் பயணித்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சென்றடையும்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு, கனிம வளம், வளிமண்டலம் போன்றவற்றை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலம் ரூ.450 கோடி செலவில் அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலத்தைச் செலுத்துவதற்காக 440 நியூட்டன் என்ஜினில் உள்ள திரவ எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு எரிக்கப்பட்டது. மொத்தம் 23 நிமிஷங்கள் எரிந்தபிறகு, விண்கலத்தின் வேகம் விநாடிக்கு மேலும் 648 மீட்டர் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் மணிக்கு 41 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதையில் செலுத்துவதற்காக மொத்தம் 198 கிலோ திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் விண்கலத்தின் வேகம் மணிக்கு 35 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 41 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன் சென்ஸார் கருவி, லிமான் ஆல்பா போட்டோமீட்டர் உள்ளிட்ட 5 கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.
புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்லும் விண்கலம், விண்வெளியில் 300 நாள்கள் மிகக் கடினமான பயணத்தை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும்.
அதன்பிறகு, செவ்வாய் கிரகத்துக்கு அருகில் 300 கிலோமீட்டரும், தொலைவில் 80 ஆயிரம் கிலோமீட்டரும் கொண்ட பாதையில் மங்கள்யான் நிலைநிறுத்தப்படும்.
விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைவதற்குள் அதன்பாதை மூன்று முறை சரிசெய்யப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலத்தை துல்லியமாகச் செலுத்தும்வகையில் இவை மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூமியிலிருந்து மிக நீண்ட தொலைவுக்கு விண்கலம் பயணிக்க இருப்பதால் சிக்னல்கள் சென்று சேர்வதிலும், அங்கிருந்து பெறுவதிலும் 6 முதல் 20 நிமிஷங்கள் வரை காலதாமதமாகும்.
எனவே, விண்கலத்தில் ஏற்படும் கோளாறுகளை தானாகவே கண்டறியவும், சரிசெய்யவும் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. விண்கலத்தில் உள்ள கருவிகளைச் செயல்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பல கட்டளைகளை பிறப்பிக்க வேண்டும். சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் இந்தக் கட்டளைகளும் விண்கலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
விண்கலத்தில் மிகப்பெரிய கோளாறோ, விபத்தோ ஏற்பட்டால் பூமியிலிருந்து கட்டளைகள் கிடைக்கும் வரையில் அது தற்காத்துக்கொள்ளும் வசதியும் (நஹச்ங் ம்ர்க்ங்) விண்கலத்தில் உள்ளது.
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்த 2 நாள்களில் பூமிக்கு படங்களையும், தகவல்களையும் அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5-ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து அருகில் 255 கிலோமீட்டரும், தொலைவில் 23,566 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை ராக்கெட் துல்லியமாக நிலைநிறுத்தியது.
புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் செல்ல மணிக்கு 40 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் விண்கலம் பயணிக்க வேண்டும். அந்த வேகத்தைப் பெறுவதற்காகவும், செவ்வாயை நோக்கிய பாதையில் செல்வதற்காகவும் நவம்பர் 7 முதல் 16 வரை ஐந்து முறை விண்கலத்தின் பாதை அதிகரிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கான பாதையில் செல்வதற்கு முன்பாக, பூமிக்கு அருகில் 217 கிலோமீட்டரும், தொலைவில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோமீட்டரும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருந்தது

டி.ஆர்.பி AP POST :பணி அனுபவத்தை கணக்கிட சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை

"டி.ஆர்.பி., மதிப்பெண்ணுக்கு, ஆசிரியப் பணி அனுபவத்தை முழுமையாக கணக்கிட வேண்டும்,' என, தமிழ்நாடு சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 ஒருங்கிணைப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தலைவர் அற்புதராஜ், செயலாளர் நடராஜன் கூறியதாவது:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) சமீபத்திய குளறுபடியால், படித்த, தகுதியான, அனுபவம் வாய்ந்த கல்லூரி ஆசிரியர்களின் எதிர்காலம் பாழாகிறது. ஆசிரியப் பணியின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்திற்கும் 2 மதிப்பெண் வீதம், அதிகபட்சமாக ஏழரை ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. 2007 மற்றும் 2010ல் உதவி பேராசிரியர் நியமனத்தில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.தற்போது, விதியை மாற்றியுள்ளனர். உதாரணமாக ஒருவர் 15 ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தாலும், நான்காண்டுகளுக்கு முன் "பி.எச்டி.,' முடித்தால், அந்த ஆண்டிலிருந்து தான், ஆசிரியப் பணிக்கான அனுபவத்தை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்குகின்றனர். அரசு வேலை கிடைக்குமென நம்பி, சுயநிதிக் கல்லூரிகளில் அனுபவத்திற்காக பணிபுரிபவர்கள் பாதிக்கப்படுவர்.நவ., 25 முதல், இரண்டு கட்டங்களாக, மூன்று கல்லூரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மூலம் சான்றளிக்கப்பட்ட, பணி அனுபவத்தை கணக்கில் கொள்ளாமல், புதிய முறையை பயன்படுத்துகின்றனர். இதனால் விண்ணப்பித்த, 17ஆயிரம் பேரில் 80 சதவீதம் பேருக்கு, உரிய மதிப்பெண் கிடைக்கவில்லை. பணி அனுபவத்தை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள டி.ஆர்.பி.,க்கு, அரசு வழிகாட்ட வேண்டும், என்றனர்.

2012ஆசிரியர் தகுதி தேர்வு: சென்னையில்தேர்வு சான்று வழங்கல்

தமிழகத்தில்,ஆசிரியர் தகுதியை உறுதி செய்யும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012ல் தகுதி காண் தேர்வு நடத்தப்பட்டது. இதில், அந்தந்த மாவட்டத்தில், தேர்வினை எழுதி, தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களுக்கு, அந்தந்த சி...,க்களே சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வுக்கான சான்றுகளை வழங்கியுள்ளனர். அதேநேரம், அந்தந்த மாவட்டங்களில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்காமல், சென்னையில், 2013 ஜூலை மற்றும் அக்டோபரில், சான்று சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், டிச.,31 வரை, சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தேர்வு சான்று வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு சான்றுகளை, சென்னை, அசோக்நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில், நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம், என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.