ஞாயிறு, 24 மே, 2015

வரும் 25ம் தேதிஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும்

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. .
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 இடங்களை நிரப்ப, பள்ளிக்கல்வித்துறை முயற்சிமேற்கொண்டுள்ளது. ஆனால், 'ஆசிரியர்களை மட்டும் தான் நியமிப்போம். ஏற்கனவே பல நியமனங்கள் தொடர்பாக வழக்குகள்நிலுவையில் உள்ளதால், புதிய தேர்வு நடத்துவது மற்றும் நியமனம் தாமதமாகும்' என, டி.ஆர்.பி., தெரிவித்துவிட்டது.
இதையடுத்து,கல்வித்துறையே தேர்வு நடத்த முடிவு செய்து, தேர்வை, அரசு தேர்வுத்துறையிடம் ஒப்படைத்தது. 'தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கும்' என, அறிவிப்பு வெளியானது.இதில், 8.7 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதலில், மே 21ம் தேதிநுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின், 23ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்போது, அதுவும் தள்ளிப்போகிறது. 'வரும் 25ம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும்' என, இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சனி, 23 மே, 2015

TRB PG TAMIL:நிகண்டுதமிழ் இலக்கியங்களைப் போலவே இலக்கணங்களும் பல்வேறு கால கட்டங்களில் பலவகையான பாக்களில் இயற்றப்பட்டுள்ளன. நிகண்டுகளின் யாப்பு வளர்ச்சியைக் காணும்போது ஆசிரியம், வெண்பா, கலித்துறை,  விருத்தம் ஆகியவை பயன்பட்டுள்ளதை அறியலாம்.  முதல் ஆறு நிகண்டுகளின் யாப்பு அமைப்புகளைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.
 

எண்

நிகண்டு

ஆசிரியர்

யாப்பு

நூற்றாண்டு

1

2

3

4

5

6

திவாகரம்

பிங்கலந்தை

உரிச்சொல்

கயாதரம்

சூடாமணி நிகண்டு

அகராதி நிகண்டு

திவாகரர்

பிங்கலர்

காங்கேயர்

கயாதரர்

மண்டல புருடர்

ரேவண சித்தர்

நூற்பா (ஆசிரியப்பா)

நூற்பா (ஆசிரியப்பா)

வெண்பா

கட்டளைக் கலித்துறை

விருத்தம்

நூற்பா (ஆசிரியப்பா)

9

10

14

15

16

16

 

திவாகரரும் பிங்கலரும் நூற்பாவில் கூறிய நிகண்டினைப் பின்வந்தோர் வெண்பா,  கட்டளைக் கலித்துறை,  விருத்தம் ஆகிய பாக்களைப் பயன்படுத்தி இயற்றினர்.  ஆசிரியப்பாவை விட ஏனைய பாக்கள் எளிதாக மனப்பாடம் செய்ய உதவும். எதுகையும் மோனையும் தளையும் பாவின் வடிவத்தை மனத்தில் நன்கு நிறுத்தும்.  கட்டளைக் கலித்துறையில் எதுகை,  மோனை,  தளையுடன் எழுத்து வரையறையும் சேர்ந்து இனிமையாகின்றது. விருத்தப்பாவில் இவற்றோடு இசையமைதியும் பொருந்திப் பாடல்கள் மேலும் மனப்பாடத் தகுதியடைகின்றன. எனவே, காலத்திற்கேற்ற வளர்ச்சியில் பல யாப்புகள் பயன்படுத்தப்பட்டன.    கருத்து அடிப்படையில் காணும்போது,    நிகண்டுகளின் பொருள்களில் பெரும்பான்மையும் முன்பிருந்த நிகண்டுகளின் சொல் தொகுதிகள் அப்படியே எடுத்தாளப்படுகின்றன. ஆசிரியர்கள் தம் காலத்தில் தோன்றிய சொற்களையும் சேர்த்துக்கொள்வார்கள்.  இவ்வாறு சேர்த்து எழுதும்போது பழைய யாப்புமுறையைப் பயன்படுத்தாமல் வேறு யாப்பைப் பயன்படுத்துவது நூல்களுக்கிடையே வேறுபாட்டைக் காட்ட உதவும்.  எனவே,  யாப்பின் புதுமைக்காகவும் கருத்துப் புதுமைக்காகவும் நிகண்டுகளின் யாப்பில் பல்வேறு வளர்ச்சிகளைக் காணமுடிகிறது.


TRB PG TAMIL :சிற்றிலக்கியங்கள்

  

 பிற்காலச் சிற்றிலக்கியங்கள்
 

சிற்றிலக்கியம் வடமொழியில் பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.  தமிழில் யாப்பு,  செய்யுள் எனும் சொற்களைப் போன்றே பிரபந்தம் என்ற சொல்லுக்கும் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். சிற்றிலக்கிய நூல்கள் நெடிய பாடல்கள் போன்றவை.  ஒருசில துறைகளைப் பற்றிய செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை.   சுருங்கிய அளவில் எளிதில் படித்து முடிக்கக்கூடியனவாக அமைபவை.   சங்க இலக்கியத்திலேயே சிற்றிலக்கிய வகைகள் பல கிளைவிட்டன.  குறிப்பாக,  பத்துப்பாட்டு நூல்கள் இறைவனை, அரசனை, வள்ளலைப் புகழ்ந்து பாடிய அடிப்படையிலேயே பிற்காலச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கொண்டன. நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் சார்ந்த சிற்றிலக்கியங்களும் செழித்தன. பின்னர், சிறப்புப் பெற்ற பிள்ளைத்தமிழ், தூது, உலா போன்ற சிற்றிலக்கியங்கள் தழைத்தோங்கின.
 

அறம்,  பொருள்,  இன்பம்,  வீடுபேறு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ குறைந்து வரப் படைப்பவை சிற்றிலக்கிய வகைகள். இவற்றைப் பாட்டியல் நூல்கள் பல்வேறாக வரையறுக்கின்றபோதிலும் பொதுவாகச் சிற்றிலக்கிய வகைகள் 96   எனும் வழக்குக் காணப்படுகின்றது. இத்தொண்ணூற்றாறு வகைகளுள் பரணி, தூது, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு போன்றவை முக்கியமானவையாகக் கருதப்பெறுகின்றன.
 

சிற்றிலக்கிய வகைகளுள் பெரும்பான்மை கடவுள் (அ)  மன்னன் (அ)  தலைவனைப் புகழ்வதாக அமைகின்றன. குறவஞ்சி மற்றும் பள்ளு இலக்கியங்கள் முறையே குறிஞ்சி நில,  மருதநில மக்களின் வாழ்வியலை விளக்குகின்றன. 
 

சிற்றிலக்கிய
வகைகள்

சிறந்த
நூல்கள்

ஆசிரியர்
பெயர்

காலம்
(கி.பி.)

பா

அமைப்பும் சிறப்பும் - பிற நூல்கள்

பரணி

 

1. கலிங்கத்துப் பரணி
(முதல் பரணி)

செயங் கொண்டார்

11 ஆம் நூற்.

கலித்தாழிசை

1000 யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம். 13 உறுப்புகளால் ஆனது. தோற்ற நாடு, தோற்ற தலைவன், தோற்ற பொருள் ஆகியவற்றைத் தலைப்பாகக் கொண்டு அமைவது.

பிற நூல்கள் :

1. அஞ்ஞவதைப் பரணி (தத்துவராயர்)

2. பாசவதைப் பரணி (வைத்தியநாத தேசிகர்)

2.தக்கயாகப் பரணி

ஒட்டக் கூத்தர்

12 -ஆம் நூற்.

கலித்தாழிசை

தூது

 

1.நெஞ்சுவிடு தூது (முதல்தூது)

உமாபதி சிவம்

14-ஆம் நூற்.

கலிவெண்பா

 

அக மற்றும் புறச் செயல்களுக்காக மனிதரையோ, அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாகப் படைக்கப்படும் இலக்கிய வகை. இஃது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும்.

பிற நூல்கள் :

1. அழகர் கிள்ளைவிடு தூது (சொக்கநாதப் புலவர்)

2. விறலிவிடு தூது (கூளப்ப நாயக்கன்)

2. தமிழ்விடு தூது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

காலம் அறிய முடிய வில்லை

உலா

மூவருலா

ஒட்டக் கூத்தர்

12 -ஆம் நூற்.

கலிவெண்பா

தலைவன் உலா வரும்பொழுது எழு பருவ மகளிர் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) அவன்மீது காதல் கொள்வதாக அமைவது.

பிற நூல்கள் :

1. திருக்கயிலாய ஞான உலா (முதல் உலா) (சேரமான் பெருமாள் நாயனார்)

2. ஏகாம்பரநாதருலா (இரட்டைப் புலவர்கள்)

கலம்பகம்

 

1. கச்சிக் கலம்பகம்

இரட்டைப் புலவர்கள்

14-ஆம் நூற்.

பல்வகைப் பாவும், பா இனமும் விரவி வரும்

 

பல்வகை மலர்களால் ஆன மாலை போன்று பல்வகையான 18 உறுப்புகளைக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை. 

பிற நூல்கள் : 

1. நந்திக் கலம்பகம் (கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது) 

2. தில்லைக் கலம்பகம் (இரட்டைப் புலவர்கள்)

2. மதுரைக் கலம்பகம்

குமரகுருபரர்

17-ஆம் நூற்.

பிள்ளைத் தமிழ்

மீனாட்சி - யம்மை பிள்ளைத் தமிழ்

குமரகுருபரர்

17-ஆம் நூற்.

விருத்தப்பா

கடவுளையோ,  அரசனையோ, தலைவனையோ குழந்தை யாகப் பாவித்துப் பாடப்படும் இலக்கிய வகை. 3 முதல் 21 மாதங்கள் வரையிலான குழந்தைப் பருவச் செயல்பாடுகள் பாடப்படும். ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

பிற நூல்கள் :

1. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (முதல் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்)

2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பகழிக் கூத்தர்)

குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி (முதல் குறவஞ்சி)

திரிகூட இராசப்பக் கவிராயர்

18 - ஆம் நூற்.

விருத்தம், அகவல், வெண்பா, கலித்துறை, கொச்சகம், இசைப் பாக்கள்

தலைவன் மீது காதல் கொண்ட குறிஞ்சி நிலத் தலைவி அடைந்த துயரைப் போக்கும் விதமாக முக்காலம் உணர்ந்த குறத்தி குறி கூறும் முறையில் படைக்கப்படும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (சிவக்கொழுந்து தேசிகர்)

2. பெத்லகேம் குறவஞ்சி (வேதநாயக சாஸ்திரியார்)

பள்ளு

முக்கூடற் பள்ளு (முதல்பள்ளு)

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

17 (அ) 18 - ஆம் நூற்.

சிந்து, விருத்தம் கலந்தும் வரும்

மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்யும் பள்ளர் நில மக்களின் வாழ்வியலைப் பேசும் இலக்கியம். இது 'உழத்தி பாட்டு' என்னும் பெயராலும் வழங்கப்பெறும். இதில் நெல் விதையின் வகைகள், மாட்டின் வகைகள், பயிர்த்தொழில் கருவிகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

பிற நூல்கள் :

1. திருமலைப் பள்ளு

2. திருவாரூர்ப் பள்ளு

பிற சிற்றிலக்கிய வகைகள் (முதன்மையானவை)

அந்தாதி

அற்புதத் திருவந்தாதி (முதல் அந்தாதி)

காரைக்கால் அம்மையார்

கி.பி. 6 (அ) 7 - ஆம் நூற்.

வெண்பா / கட்டளைக் கலித்துறை

ஒவ்வொரு பாடல் அடியின் கடைசிச் சீரின் முடிவில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருமாறு பாடப்படும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. சடகோபர் அந்தாதி (கம்பர்) 

2. பொன் வண்ணத்து அந்தாதி (சேரமான் பெருமாள் நாயனார்)

கோவை

பாண்டிக் கோவை (முதல் கோவை)

ஆசிரியர் பெயர் தெரிய வில்லை

6 (அ) 7 - ஆம் நூற்.

கட்டளைக் கலித்துறை

தலைவன், தலைவி முதன்முதலில் சந்தித்தல் முதல் அவர்களின் வாழ்வில் நிகழும் பல்வேறு காதல் நிகழ்வுகளைக் கோவைபடச் (தொகுத்து) சொல்வதால் கோவை எனப் பெயர் பெற்றது. 400 பாடல்களில் அமையும்.

பிற நூல்கள் :

1. திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

2. தஞ்சைவாணன் கோவை (பொய்யாமொழிப் புலவர்)

மாலை

திரு விரட்டை மணிமாலை (முதல் மாலை)

காரைக்கால் அம்மையார்

6 (அ) 7 -ஆம் நூற்.

ஏதேனும் ஒரு பா / பாவினம்

ஒரு பொருள் குறித்துப் பல்வேறு கூறுகளைத் தொகுத்து ஒரே பாவால் பாடப்பெறும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. மீனாட்சியம்மை திருவிரட்டை மாலை (குமரகுருபரர்)

2. நான்மணி மாலை (சிவப்பிரகாசர்)


 

வெள்ளி, 22 மே, 2015

கட்டிடத் தொழிலாளியின் மகள் எஸ்எஸ்எல்சி தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதல் இடம்


தேனி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியின் மகள் எஸ்எஸ்எல்சி தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதல் இடம் பெற்றார்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் ஆர். ராஜேஸ்வரி, அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் 492 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.

இவர் எடுத்த பிற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 97, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என பெற்றுள்ளார்.

கூழ் விற்பவரின் மகள்

ஆண்டிபட்டியை சேர்ந்த கம்பங்கூழ் விற்பவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஆர். பாலவைஷ்ணவி. ஆண்டிபட்டி அரசு மேல்நிலையில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் 490 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் பெற்ற பிற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 95, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்துள்ளது. என்னை சிரமப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன் என்றார்.


 

சென்னை பல்கலை. அரங்கில் நடக்கும் விழாவில்தமிழக முதல்வர் ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்பு


அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா சனிக்கிழமை (மே 23) முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்கும் அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியலும்:

ஜெயலலிதா - முதல்வர் | காவல், உள்துறை

ஓ.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித் துறை

நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

ஆர்.வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி

எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்

ப.மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்

ப.வளர்மதி - சமூல நலத்துறை, சத்துணவு.

பி.பழனியப்பன் - உயர் கல்வித்துறை

செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவுத்துறை

ஆர்.காமராஜ் - உணவு, இந்து சமய அறநிலைத்துறை

பி.தங்கமணி - தொழிற்துறை

வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை

எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை

எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை

டி.கே.எம். சின்னையா - கால்நடை பராமரிப்புத் துறை

எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் துணிநூல்

எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை

என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

கே.எ.ஜெயபால் - மீன்வளத்துறை

முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பம்

ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்

பி.வி.ரமணா - பால்வளத்துறை

கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித்துறை

தோப்பு என்.டி.வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்துறை

டி.பி.பூனாச்சி - காதி, கிராமத் தொழில்

எஸ்.அப்துல் ரஹிம் - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

சி.விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை

ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு.

முன்னதாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழக்கம்போல செயல்படும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்த பட்டியலை விரைவில் அளிக்குமாறும் கோரினார்.

இதையடுத்து, பிற்பகல் 1.28 மணிக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 2.03 மணிக்கு ராஜ்பவன் சென்றார். அவரை பூங்கொத்து கொடுத்து ஆளுநர் வரவேற்றார். அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா அளித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அதில் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.


 

தமிழக அரசு பள்ளிகளின் சிறந்த கல்விச் சூழல் போன்றவற்றில் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

தமிழக அரசு பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, போதிய ஆசிரியர் நியமனம் மற்றும் சிறந்த கல்விச் சூழல் போன்றவற்றில் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 90.7 சத்வீதம் என்று இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 92.9 சத்வீதமாக உயர்ந்து இருக்கின்றது. இதில் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 98.75% அரசு பள்ளிகள் 89.23 % ஆகவும் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் தேர்ச்சி விகிதிம் 89.23% இருப்பது பாராட்டுக்குரியது ஆகும். மேலும் இந்த ஆண்டில் 1164 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், கடந்த ஆண்டை விட 606 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கூறியிருக்கின்ற தகவல் அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

மாநில அளவில் 499 மதிப் பெண் பெற்று 41 மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் என்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கது ஆகும்.

இதைப் போன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் கடந்த ஆண்டைவிட 1.5 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாகவும், 22 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்று சாதனை புரிந்துள்ளன.

தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்ட அடிப்படை வசதிகள், கல்விச் சூழல் குறைபாடுகள் இவற்றிற்கு இடையே அரசு பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது பெரும் முயற்சியால் 89.23 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளனர். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அரசு நிலை ஆணை எண் 270 ன் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் எந்தப் பள்ளியிலும் இல்லை என்பது வேதனைக்குரியது.

குடிநீர், கழிவறை, துப்புரவு உள்ளிட்ட கல்வி பயில்வதற்கான சூழல் அனைத்துமே அரசு பள்ளிகளில் கண்டுகொள்ளப்படுவது இல்லை. மேற்கூரை இடிந்துவிழும் நிலையில்தான் வகுப்பறைகள் உள்ளன.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் கிடையாது. அரசு ஆணைப் படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை நிறைவேற்ற தமிழக அரசு இதுவரை முயற்சிக்கவில்லை. இருக்கின்ற குறைவான ஆசிரியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள், ஆதார் அட்டை விசாரணை என்று பல வேலைகளுக்கு அனுப்பி, ஆசிரியப் பணியை அரசே சீர்குலைக்கிறது.

மேலும் உடற்பயிற்சி, கணினி, அறிவியல், இசை, ஓவியம் மற்றும் தொழில் பயிற்சி போன்ற பாடங்களுக்கு பல இடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் ஒருசில பள்ளிகளிலும் நிரந்தரப் பணி ஆசிரியர்கள் இல்லை. பள்ளிகளில் எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணிகளையும் ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டிய சூழல். இதுதான் தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசு பள்ளிகளின் உண்மை நிலைமை. சாதாரண ஏழை எளிய கிராப்புற மக்களின் பிள்ளைகள் பயின்று வரும் அரசு பள்ளிகள் கவனிப்பாரின்றி கிடப்பது நல்லதல்ல.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழிசெய்யும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூடி இருப்பது கண்டனத்துக்குரியது.

அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி உரிய முறையில் கவனிக்கப்படுமானால், கல்வித்தரம் உயர்ந்து சாதனைகளையும் எட்ட முடியும் என்பதை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் உணர்த்துகின்றன. எனவே, தமிழக அரசு பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, போதிய ஆசிரியர் நியமனம் மற்றும் சிறந்த கல்விச் சூழல் போன்றவற்றில் கவனம் செலுத்த முன்வர வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.


 

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்ததாக கூறப்படும் மாணவர் சேர்க்கை குறித்து தணிக்கை நடத்தப்பட வேண்டும்

 கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி அளிக்க தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி மாணவர்களைச் சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ 97.05 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை தெளிவில்லாமலும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

கல்வி பெறுவதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் அப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலுள்ள நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை இந்தச் சட்டம் இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

மாறாக, பணக்கார மாணவர்களைக் கொண்டு இந்த இடங்களை நிரப்பும் தனியார் பள்ளிகள், அவ்வாறு சேர்க்கப்பட்ட அனைவரும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஆவணங்களில் பதிவு செய்துவிடுகின்றன.

இந்த மோசடியை புள்ளிவிவரங்களுடன் நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படும் தமிழக அரசு இன்று வரை, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, சேர்க்கையை முறைப்படுத்தவோ முன்வரவில்லை.

இந்த நிலையில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ.150 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை என்றும், இதனால் நடப்பாண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்கப்போவதில்லை என்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு மிரட்டல் விடுத்தன. இதையடுத்து கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்ததற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.97.04 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யும்படி பிரதமருக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5ஆம் தேதி கடிதம் எழுதினார். ஆனால், அக்கடிதத்தை மத்திய அரசு பொருட்படுத்தாத நிலையில், தமிழக அரசே அதன் சொந்த நிதியிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு ரூ.97.05 கோடியை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2013 - 14 ஆம் ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014 - 15 ஆம் ஆண்டில் 86,729 மாணவர்களும் சேர்க்கப்பட்டதாகவும், இதற்காக முறையே ரூ.25.14 கோடியும், ரூ. 71.91 கோடியும் வழங்கப்பட இருப்பதாகவும் கடந்த 16.05.2015 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 102 -ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் எண்ணிக்கை தனியார் பள்ளிகள் அளித்த தகவல்களின் அடிப்படையிலானது தானே தவிர, அரசு அமைப்பால் தணிக்கை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது அல்ல.கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களைச் சேர்த்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த 25% ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினருக்கு பதிலாக பணக்கார மாணவர்களை சேர்த்து தவறாக கணக்குக் காட்டப் பட்டிருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்துவிட்டு தனியார் பள்ளிகள் தந்த விவரங்களை அப்படியே ஏற்று பணம் வழங்கக்கூடாது.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தவறாக கணக்கு காட்டி சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர்களுக்காக அரசும் கட்டணம் செலுத்துவது தவறாகும்.

அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கைத் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. உதாரணமாக 2013 - 14 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின்படி 1.43 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களில் 11% (15,730 ) மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 31%(44,330) மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதாக மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை தெரிவித்திருந்தார். ஆனால், இந்த இரு புள்ளி விவரங்களுக்கும் தொடர்பின்றி 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக அரசு கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல், 2014 - 15 ஆம் ஆண்டில் 2,959 மாணவர்கள் இந்தச் சட்டப்படி சேர்க்கப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன; 89,941 பேர் சேர்க்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு பொருந்தாத வகையில் 86,729 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக எந்த அடிப்படையில் அரசு கூறுகிறது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு முதல் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; அப்போதிலிருந்து தான் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி மழலையர் வகுப்புகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கு பணம் வழங்குவது சரியல்ல. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்காத தனியார் பள்ளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி அளிக்க தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே, கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் நடந்ததாக கூறப்படும் மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அடங்கியக் குழுவைக் கொண்டு விரிவானத் தணிக்கை நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும் கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி, ஜெயநந்தனா


அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும் கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி, ஜெயநந்தனா. அரசுப் பள்ளி மாணவ - மாணவியரான இவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 499/500 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றவர்கள்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள சின்னக் கிராமம் பரணம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவரான எஸ். பாரதிராஜா, விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்தவர். அப்பா சேகர், அம்மா கவிதா இருவருமே விவசாயிகள்.

"அம்மா அப்பா ரெண்டு பேருமே காலையில வேலைக்குப் போனா ராத்திரிதான் திரும்பி வருவாங்க. கஷ்டப்படுற குடும்பம் எங்களுது. 'படிப்புதான் நம்ம குடும்ப சூழ்நிலையை மாத்தும்டா'னு எங்க தாத்தா, பாட்டி அடிக்கடி சொல்வாங்க. வைராக்கியத்தோடத்தான் படிச்சேன். எங்க பள்ளிக்கூடம் ஒண்ணும் பெரிய வசதியான பள்ளிக்கூடம் இல்ல.

ஆனா, எங்க டீச்சர்லாம் ரொம்ப ஈடுபாட்டோட பாடம் நடத்துறவங்க. குறிப்பா, ஹெச்எம் ராஜம் நிறைய உற்சாகப்படுத்துவாங்க, உதவிசெய்வாங்க. நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்; எங்களை மாதிரி ஏழை மக்களுக்கு உதவணும். நம்ம பள்ளிக்கூடம் மாதிரியான அரசுப் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் எல்லா வசதிகளும் கொண்டதா மாத்தணும்கிறது என் கனவு. இன்னைக்கு என்னாலேயே எங்க பள்ளிக்கூடம் மேல எல்லார் கவனமும் திரும்பியிருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா" என்கிறார் பாரதிராஜா.

ரொம்பலாம் மெனக்கெடலை!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். வைஷ்ணவி. வீடியோகிராஃபராக இருந்த தந்தை வி. ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணமடைய தாய் காந்திமதிதான் இவருக்கு எல்லாமும். வைஷ்ணவி கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. தனியார் பள்ளி வேண்டாம் என்று அடம்பிடித்து அரசுப் பள்ளிக்கு வந்தவர் இவர். "அஞ்சாவது வரைக்கும் ஒரு தனியார் பள்ளியிலதான் படிச்சேன். எதுக்கெடுத்தாலும் கண்டிப்பு. பிடிக்கலை.

அம்மாகிட்ட சொல்லி அடம்பிடிச்சு அரசுப் பள்ளியில சேர்ந்தேன். இங்கே நல்ல டீச்சர்ஸ். நல்லாவும் சொல்லிக்கொடுத்தாங்க, ஜாலியாவும் இருக்க விட்டாங்க. அன்னைஅன்னைய பாடத்தை அன்னைஅன்னைக்கே படிச்சுடுவேன். அவ்வளவுதான். ரொம்பலாம் மெனக்கெடலை. இப்படி முதலிடம் பிடிப்பேன்லாம் எதிர் பார்க்கலை. எனக்கே ஆச்சரியமா இருக்கு" என்று சொல்லும் வைஷ்ணவிக்கு மருத்து வராவது ஆசை. "கிராமங்கள்ல போய் நிறைய பேருக்கு உதவணும்ணா" என்கிறார்.

படிப்பு, விளையாட்டுனு ஒரே ஜாலிதான்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெயநந்தனா. அப்பா இளங்கோ - அம்மா தமிழ்ச்செல்வி. ஜெயநந்தனாவின் கதையும் கிட்டத்தட்ட வைஷ்ணவி கதைபோலத்தான். ஐந்தாவது வரை தனியார் பள்ளியில் படித்த ஜெயநந்தனாவை அரசுப் பள்ளியில் சேர்த்தவர் அவருடைய அப்பா. "எங்கப்பா ஒரு அரசு ஊழியர் (உணவுப் பாதுகாப்பு அலுவலர்).

ஒரு அரசு ஊழியர் பொண்ணு அரசுப் பள்ளியிலதான் படிக்கணும்னு சொல்லி திடீர்னு இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டுட்டாங்க. எனக்கும் இது சந்தோஷம்தான். ஏன்னா, நான் நிறைய விளையாடுவேன். அதனால, படிக்குற நேரத்துல படிப்பு; மத்த நேரத்துல விளையாட்டுன்னு ஜாலியாதான் படிச்சேன். எங்க டீச்சர்ஸ் கொடுத்த உற்சாகம் இப்போ முதலிடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துடுச்சு" என்று சொல்லும் ஜெயநந்தனாவின் கனவு விஞ்ஞானியாவது. "நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்" என்கிறார்.

மதிப்பெண்களைவிடவும் உண்மையில் இவர்களைக் கொண்டாடவைப்பவை இந்த வார்த்தைகள்தான்: "ஏழை மக்களுக்கு உதவணும்"; "கிராமங்களுக்குப் போய் நிறையப் பேருக்கு உதவணும்"; "நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்"...

கனவுகள் நனவாகட்டும் செல்லங்களே!

- சி.கதிரவன், வி. சீனிவாசன், எஸ்.எஸ். லெனின்

எனக்குத் தெரிந்து ஓர் உதாரணம்: ஜோ. செந்தில்நாதன்

ஒரு பயணத்தின்போது, அந்த அற்புதமான பள்ளியை நான் கண்டேன். அப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டடம் ஓர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கானது என்றால், பலர் நம்ப மறுப்பார்கள். உள்ளே ஒரு குடில். 'சுனாமியின்போது உயிரிழந்த எங்கள் குழந்தைகள் 80 பேர் நினைவாக அமைக்கப்பட்ட குடில் இது' என்றார் தலைமையசிரியர் பாலு. நினைவுத் தூணில் உள்ள பெயர்ப் பட்டியலைப் படித்தபோது, சுனாமியின் கோர முகம் கண் முன் வந்து சென்றது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த இடங்களில் ஒன்று கீச்சாங்குப்பம். சுனாமி அவ்வூர் பள்ளியையும் நிர்மூலமாக்கியது. மீண்டும் அங்கு இன்னொரு பள்ளிக்கூடம் கட்டும் சூழலில்தான், பாலு அங்கு தலைமையாசிரியராக வந்திருக்கிறார். தனித்துவமிக்க பள்ளியாக அது உருவெடுக்க வெறும் கட்டிடம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்தவர் பள்ளியை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெறவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்களுக்கு நாற்காலி மேஜைகளில் தொடங்கி கழிப்பறை வசதி, கணினி கல்வி வரை கொண்டுவந்திருக்கிறார். சுனாமி மறுவாழ்வுக் குடியிருப்பிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர அரசுப் பேருந்தையும், சொந்த செலவில் வேன் வசதியையும் செய்துகொடுத்திருக்கிறார். கற்பித்தலிலும் சிறப்புக் கவனத்தை அவர் கொடுக்க அனைத்து வகுப்புகளும் 'ஸ்மார்ட் கிளாஸ்'களாக மாறி இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது இந்த அரசுப் பள்ளி.

எவ்வளவோ ஆசிரியர்கள் பாலுவைப் போல இருக்கிறார்கள். எவ்வளவோ பள்ளிகள் இந்தப் பள்ளியைப் போல இருக்கின்றன. இதையெல்லாம் பேச யாரும் இல்லை என்பதுதான் நம் சாபக்கேடு. 'தி இந்து' அந்தக் குறையைப் போக்கிவிட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் இப்படித் தன் பள்ளியை மாற்ற முனைந்தால் அரசுப் பள்ளிகளில் உள்ள சகலப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும். அரசுப் பள்ளி நம் பள்ளி. நம் கல்வி நம் உரிமை!

அஜிதனும் நியாஸும் கொடுத்துவைத்தவர்கள்! மு. சையது அபுதாஹிர்

இன்று நான் தமிழகத்தின் பெரிய பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மாணவன். எனது தந்தை பீடி வேலை செய்பவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்கவைக்கிறார். என் தந்தைக்கு என்னைப் பற்றி ஏராளமான கனவுகள் உண்டு. ஆனால், அவர் எனது ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்தவர் இல்லை. எனது தந்தையைப் போல், பெரும்பாலான தந்தையர்கள் பெரும் கனவுகளுடன், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் போல் பெரும்பான்மை மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிக்காமல் வேறு ஒரு துறையில் பயணம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயணம் எத்தகைய வெற்றியைக் கொடுக்கும், மனதுக்கு எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

என் பள்ளிக்கூட வாழ்க்கை சந்தோஷமாக அமைந்ததில்லை. எனது பள்ளி வாழ்க்கை என்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை எனக்குச் சொல்லிக்கொடுக்கவும் இல்லை. நான் பேசும்போது தெரிகிறது, எனக்கு மட்டுமல்ல; பல மாணவர்கள் இதே நிலையில் இருக்கிறார்கள் என்று.

நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 12 வருடங்களைப் பள்ளியில் செலவழிக்கிறோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்குத் தெரியவில்லை. அந்த வகையில் அஜிதனும், நியாஸ் அஹமதுவும் கொடுத்து வைத்தவர்கள்.

பெற்றோர்களுக்கு ஒரு மடல்! வெண்மணி மாணிக்கம்

கல்வி என்பது ஒருவரை நல்ல மனிதராக உருவாக்கப் பயன்பட வேண்டும். ஆனால், இன்றைய கல்விச் சூழல் மாணவர்களை சுயநலவாதிகளாகவும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான நம்முடைய வெறுப்புக்குப் பின் நிறையவே கற்பிதங்கள் இருக்கின்றன.

'அரசுப் பள்ளி மாணவர்களே மோசம்' என்ற சித்தரிப்பு யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியாது, ஆனால் பலரது மனங்களில் வேரூன்றி நிற்கிறது. இவர்களுடைய அவதூறுகளுக்கெல்லாம் மாறாக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்து நிற்கும்போதுகூட, அரசுப் பள்ளிகளையோ அரசுப் பள்ளி மாணவர்களையோ இவர்கள் அங்கீகரிப்பதில்லை. கள்ள மவுனம் சாதிப்பார்கள்.

தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதைப் பெருமையாகக் கருதும் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுங்கள் என யாரும் கட்டளையிடவில்லை. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிகள்தான் உயர்வானவை என்கிற போலி பெருமிதத்தை நிஜமாக்க அரசுப் பள்ளிகள் மீதும் அங்கு படிக்கும் மாணவர்கள் மீது காழ்ப்பைக் கொட்டி, பிள்ளைகளை வளர்க்காதீர்கள். ஏனென்றால், ஏற்றத்தாழ்வைப் போற்றி வளர்ப்பதல்ல; ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்ல கல்வியின் முதன்மைப் பணி. நீங்கள் ஏனைய பிள்ளைகளை மட்டப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கே தீங்கிழைப்பவர்களாக மாறிவிடுகிறீர்கள்!

உண்மையைக் கண் கொண்டு பார்ப்போம்! - ஜே. ஆர். வி. எட்வர்ட்

இந்திய தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேறியவர்களில் சுமார் 10% மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கலாம்; ஆனால், வழக்கமான செய்திதான்.

பல ஆண்டுகளாகவே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழக மாணவர்களின் நிலை இதுதான். ஐ.ஐ.டி. தேர்வில் தேறுவோர் விழுக்காட்டை வைத்து மட்டும் கல்வியின் தரத்தை எடை போட முடியாது என்றாலும், இன்றைய கல்வியின் யதார்த்த நிலை குறித்து கவலைப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் செய்தியாக இதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளிலும்கூட இதுதான் இன்றைய யதார்த்தம். நம்முடைய மெட்ரிக் பள்ளிகளுக்கே இந்தப் பெருமைகளுக்கான அங்கீகாரமெல்லாம் போய்ச்சேர வேண்டும்.

மதிப்பெண்களுக்காக மாணவர்களின் படைப்புத் திறனையும் சிந்தனைத் திறனையும் நசுக்கியடித்து, உருப்போடும் இயந்திரக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்கள்தானே? உலகிலேயே நல்ல கல்வியைக் கொடுக்கிறோம் பேர்வழி என்று மெட்ரிக் பள்ளிகளைத் தேடித் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் உண்மையில் நம் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான கல்விமுறையைக் கொடுக்கிறோம் என்பதைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாமே நசுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

கைகோப்போம், துணைநிற்போம்! - சீ.நா. ராம்கோபால், புதுச்சேரி

தொடர்ந்து அரசுப் பள்ளிகள் குறித்து எதிர்மறையான கருத்துகள் வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் 'தி இந்து'வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மிகப் பெரிய பணி இது. என்னால் முடிந்த பணியாக 'நம் கல்வி நம் உரிமை' தொடரில் வெளிவந்த எல்லாக் கட்டுரைகளையும் பிரதியெடுத்து நான் பணிபுரியும் அலுவலகத்தில் நண்பர்களுக்குக் கொடுத்துள்ளேன். உங்களின் மகத்தான பணிக்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம்!

எழுச்சி வரட்டும்! - ஹரிகரன், தோகா-கத்தார்

மிகப் பெரிய பணியைச் செய்கிறது 'தி இந்து'. 'நம் கல்வி… நம் உரிமை' தொடர் கட்டுரைகள் மிகவும் முக்கிய மானவை. அரசுப் பள்ளிகளை நோக்கி நம் மக்களின் பார்வையைத் திருப்ப இந்தக் கட்டுரைகள் பெரும் ஊக்கமாக அமையும். அதுவே அரசுப் பள்ளிகளின் மறுஎழுச்சிக்கும் வழியாக அமையட்டும்!

உரக்கச் சொல்வோம் மீண்டும்! வே. தேன்மொழி, கோவை

நம் ஊரில், நம் வீட்டருகே, நம் கண் பார்வையில் நடைபெறும் நமக்கான அரசுப் பள்ளிகளை, நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அரசுப் பள்ளிகளின் மூலம் கல்வி பெற்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான் நாம் - இன்றைய பெற்றோர். அப்போது நம்மை அறிவின் வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்ற அரசுப் பள்ளிகளை, இன்று அழியும் நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பது சரிதானா?

ஆங்கிலத்தின் வழியே தனியார் பள்ளிகளில் பயின்றால்தான் , நம் பிள்ளைகள் முன்னேற முடியும் என்பதற்கு உண்மையில் என்ன ஆதாரம், அல்லது அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்குதான் என்ன ஆதாரம்? இதையெல்லாம் உரக்கப் பேச வேண்டிய காலம் உருவாகிவிட்டது. அதற்கான களத்தை 'தி இந்து' அமைத்துவிட்டது. அரசுப் பள்ளி நம் பள்ளி. இதை உரக்கச் சொல்வோம் மீண்டும் மீண்டும்!

- சி.கதிரவன், வி. சீனிவாசன், 
எஸ்.எஸ். லெனின்