திங்கள், 11 நவம்பர், 2013

மாதிரிப் பள்ளிகள் திட்ட பிரச்னையிலும் தமிழக அரசு உறுதியான, தமிழர்களுக்குப் பயனளிக்கக் கூடிய நடவடிக்கையை எடுக்கும்-முதல்வர் ஜெயலலிதா

மத்திய அரசின் தனியார் ஒத்துழைப்புடனான த்துக்கு தி.மு.க. ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
'ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா' திட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திவிட்டு, இப்போது மத்திய அரசுக்கு மறுப்புத் தெரிவிக்க மாநில அரசு முன் வருமா எனவும், மாநில சுயாட்சி குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விட்டிருக்கிறார்.
எப்போது அறிவிப்பு?: 2007 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிவிப்புக்கு ஏற்ப மாதிரிப் பள்ளி திட்டத்தை மத்திய அரசு 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடுமுழுவதும் 6 ஆயிரம் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், இதில் 3 ஆயிரத்து 500 பள்ளிகள், கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் மாநில அரசுகள் மூலம் தொடங்கப்படும் என்றும், எஞ்சிய 2 ஆயிரத்து 500 பள்ளிகள் பிற வட்டாரங்களில் அரசு - தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயல் அறிக்கையை வழங்குமாறு மத்திய மனித ஆற்றல் துறை அனைத்து மாநில அரசுகளையும் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கேட்டுக்கொண்டது.
தி.மு.க. அமைச்சரவை முடிவு: இதுதொடர்பான சுற்றோட்டக் குறிப்பு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டு, அந்தக் கோப்பில் அமைச்சரவையில் பேசலாம் என கருணாநிதி தன் கைப்பட எழுதியுள்ளார்.
அவரது அறிவுரைக்கு ஏற்ப, இந்தக் கருத்துரு 2009 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான குறிப்புகளில், "6 ஆயிரம் மாதிரிப் பள்ளிகளில், 2,500 மாதிரிப் பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களிலும், எஞ்சிய 2,500 பள்ளிகள் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்படும். எஞ்சிய 1,000 பள்ளிகளை தொடங்குவதற்கான வழிமுறைகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை' என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விரிவான விவாதத்துக்குப் பின்னர், தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 20 மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசு உதவியுடன் ரூ.75 கோடி மதிப்பீட்டில் தொடங்க விழையும் பள்ளிக் கல்வித் துறையின் கருத்துருக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பே தெரிவிக்காமல் அனுமதி: அதாவது, கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கவும், இதர வட்டாரங்களில் அரசு, தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கும் கருணாநிதி தலைமையிலான அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக அப்போது வாய் திறக்காமல் ஒப்புதல் அளித்த கருணாநிதி, தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கருணாநிதி பதிலளிக்க வேண்டும்: இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டு என்பதும், இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து பேசும் கருணாநிதி, அப்போது ஏன் இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்தார் என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும்.
ஆட்சியில் இருந்தபோது மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்பட்ட கருணாநிதி, இப்போது மாநில சுயாட்சி குறித்து பேசுகிறார்.
அரசு-தனியார் ஒத்துழைப்புடன் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்ததா, இல்லையா? இந்த மாதிரிப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படுவது கருணாநிதிக்குத் தெரியுமா, தெரியாதா? போன்ற கேள்விகளுக்கு அவர் விடையளிக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இயல்பான மத்திய உதவி மூலம் மாநில அரசின் திட்டங்களுக்கு தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், இதில் மத்திய அரசின் திட்டங்களை இணைக்கக் கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. இதை நான் திட்டக்குழு துணைத் தலைவர் உடனான கூட்டங்களிலும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலும் எடுத்துக் கூறியுள்ளேன் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
கேலிக்கூத்து: சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு, உணவுப் பாதுகாப்புச் சட்டம், மதிப்புக் கூட்டுவரிச் சட்டம் போன்ற மாநில அரசு அதிகாரங்களைக் குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரித்த அவர் இன்று மாநில சுயாட்சி குறித்துப் பேசுவது கேலிக்கூத்தானது.
காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, பாலாறு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை தன்னலத்திற்காக காவு கொடுத்த கருணாநிதி, மாநில சுயாட்சிக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசுக்கு அறிவுரை கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
யாரும் விண்ணப்பிக்கவில்லை: மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் அரசு-தனியார் ஒத்துழைப்புடன் முதல் கட்டமாக, 41 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒன்றுகூட தமிழ்நாட்டில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் 500 வட்டாரங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15-ம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரையில் தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகிறது.
பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்: இலங்கைத் தமிழர்கள் பிரச்னை, மீனவர் பிரச்னை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்னை, புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்துதல் போன்ற பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பதைப் போல், இந்த விஷயத்திலும் மத்திய அரசு மௌனம் சாதிக்கும்.
இருப்பினும், மாதிரிப் பள்ளிகளை அடுத்த கல்வியாண்டுக்கு முன்னர் தொடங்க முடியாது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி மாறும். தமிழக மக்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் வரும். அதன்மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது, என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க விடாமல் தடுத்தது போன்ற நடவடிக்கைகளைப் போல இந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு உறுதியான, தமிழர்களுக்குப் பயனளிக்கக் கூடிய நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக