டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது, நீதிமன்றங்கள் தான், என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பேசினார்.
தேனியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக மகளிர் விரைவு நீதி மன்றம், மாற்று வழி தீர்வு மையம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமை வகித்து திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வழக்குகளை, தாமதமின்றி விசாரித்து விரைவாக நீதி வழங்க வேண்டும், என்பதற்காக மகளிர் நீதி மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 22 மகளிர் நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் அளவில் பலத்தை தவிர, மற்ற அனைத்து விஷயங்களிலும் ஆணுக்கு பெண் சமம். இதை பயன்படுத்தி, பெண்ணை கொடுமை செய்தல், துன்புறுத்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது. இந்த மகளிர் நீதி மன்றத்திற்கு, 117 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் திருமணத்தை, விழிப்புணர்வு மூலம் தான் தடுக்க முடியும். ஐந்து நீதிபதிகள் பார்க்கும் வழக்குகளை இன்று ஒரு நீதிபதி பார்க்கும் நிலை உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய சிறுசிறு உரசல்களுக்கு கூட வழக்கறிஞர்கள், கோர்ட் புறக்கணிப்பு செய்யக்கூடாது. யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற போட்டி தேர்வர்கள் மற்றும் பொது நல பிரச்னைகளில், பாதிக்கப்படும் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும், பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள் தான். அதை மக்கள் உணர்ந்துள்ளனர், என்றார். மாவட்ட முதன்மை நீதிபதி அருள்ராஜ், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுமதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக