கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்., 30 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவம்பர் 5 முதல் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 9 கடைசித் தேதியாகும்.
மேலும் விவரங்களை www.ugcnetonline.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக