திங்கள், 16 டிசம்பர், 2013

குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த  தேர்வர்கள் கோரிக்கை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்துவோருக்கான சங்கம் சார்பில், வெங்கடேசன், ரிச்சர்டு, பிரியா, ராமநாதன், அருள்மொழி, சுமதி ஆகியோர் சென்னையில் அளித்த பேட்டி:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 போட்டித் தேர்வை எழுத, பொதுப் பிரிவினருக்கு, வயது வரம்பு, 30; பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பு, 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2001 முதல் 2013 வரை, 12 ஆண்டுகளில், ஐந்து முறை மட்டுமே, குரூப் - 1 தேர்வுகள் நடந்துஉள்ளன. குரூப் - 1 தேர்வு அறிவிப்பில் இருந்து பணி நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் ஆகின்றன.இதில், ஒருவர் ஒரு முறை வாய்ப்பை இழக்கும் பட்சத்தில், மூன்று ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பலர், தேர்வுக்கான வயது வரம்பை கடந்து விடுகின்றனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போல, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தொடர்ச்சியாக தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. சில நேரங்களில், மிகக் குறைவான காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் - 1 போட்டித் தேர்வுகளை, கிராமப்புறங்களைச் சேர்ந்த, 50 சதவீதம் பேர் எழுதுகின்றனர். குறைந்த வயது வரம்பால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களில், வயது வரம்பு, அனைத்து பிரிவினருக்கும், 
45 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கு, 35 என்றும், மற்ற பிரிவினருக்கு 40 என்றும் வயது வரம்பை உயர்த்த வேண்டும். 
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக