வெள்ளி, 8 நவம்பர், 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு ;2 வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் 126 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுக்க வேண்டும்.
இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரம் பேர் (4 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். இதில் 71 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களை மொத்தம் 8 பேர் பிடித்துள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்கள்.
முதல் தாளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சி.ராஜாம்மாள் 150-க்கு 126 மதிப்பெண் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்ததாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.சத்யா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முதல் தாளில் தலா 122 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இரண்டாம் தாளில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.வினுஷா 126 மதிப்பெண் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜகாளீஸ்வரி 123 மதிப்பெண்ணும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.மேகலா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சி.குருமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பி.அன்பரசி ஆகியோர் தலா 122 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
தேர்ச்சியில் முதலிடம்: இந்தத் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்தாளை எழுதிய 13 ஆயிரத்து 372 பேரில் 687 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இரண்டாம் தாளை எழுதிய 20 ஆயிரத்து 808 பேரில் ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெண்களே பெரும்பான்மையாக கலந்து கொண்டனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 19 ஆயிரம் பேர் பெண்கள். ஆண்களை விட அவர்கள் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுதான் இதற்குக் காரணம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனத்துக்கு தனியே விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக