பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்குவது மற்றும் பூர்த்தி செய்வதற்காக சேலம் மாவட்டத்தில் மூன்று பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் இரா. ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மார்ச், ஏப்ரல் 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை, இடைநிலைக் கல்விப் பொதுத்தேர்வுகளுக்கு சேலம் மாவட்டத்தில் தனித் தேர்வர்களிடமிருந்து நவம்பர் 15 முதல் 25 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பங்களை www.tndge.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடந்த செப்டம்பர் 2013 தேர்வின்போது, தனித்தேர்வர்கள், தனியார் இணையதள மைங்களின் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்தபோது அவர்களது விவரங்களில் பல தவறுகள் இருந்தன. தனித்தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாடங்கள் மற்றும் பயிற்று மொழி போன்றவற்றில் பல தவறுகள் ஏற்பட்டன.
இதனால், தேர்வு நுழைவுச் சீட்டுகள் வழங்குவதிலும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. பிழைகள் ஏற்படாமல் விண்ணப்பங்களைப் பதிவு செய்திட வேண்டியும், தேர்வுத்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு மையங்கள் கல்விமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களை புகைப்படம் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்குச் செல்லும்போது புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. மையங்கள் மூலமாகவே விண்ணப்பங்களை சமர்ப்பித்து, தேர்வுக் கட்டணத்தையும் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மூன்று பணிகளையும் ஒரே இடத்தில் தனித்தேர்வர்கள் மேற்கொள்ள முடியும்.
விண்ணப்பங்கள் பெறப்படும் ஒருங்கிணைப்பு பள்ளிகளான சங்ககிரி கல்வி வட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் ரோடு, மேச்சேரி. சேலம் வட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் மற்றும் மாநகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி, சகாதேவபுரம், சேலம் ஆகிய பள்ளிகளில் தனித்தேர்வர்கள் அணுகி தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்திடுமாறு முதன்மை கல்வி அலுவலர் இரா.ஈஸ்வரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக