சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை (நவ.13) இவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம்( now in krishnagiri dt) ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் நீதிபதி ஆர்,பானுமதி. 1955-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் நேரடியாக மாவட்ட நீதிபதியானார். சென்னை, கோவை, வேலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி ஆர்.பானுமதி பதவியேற்றார். பணி மூப்பு அடிப்படையில் இவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கான உத்தரவை நவம்பர் 11-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிறப்பித்தார். இதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று செல்ல உள்ளார். அவருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை (நவ.13) பிற்பகல் 3.30 மணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையினருக்கு இரட்டை பதவி உயர்வு உள்பட உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு வழக்குகள் மீதான தீர்ப்புகளை நீதிபதி ஆர்.பானுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக