மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ராமச்சந்திரன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்.காம், எம்.பில், பிஎட் முடித்துள்ளேன். தமிழகத்தில் கடந்த ஜூலை 21ல் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) பணித்தேர்வில் கலந்துகொண்டேன்.
இந்த தேர்வு முடிவின் தற்காலிக விடை சுருக்கத்திலும், இறுதி விடை சுருக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருந்த பதில்கள் வேறுவேறாக இருந்தன. நான் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தேன். அதற்கு மதிப்பெண் வழங்கவில்லை. நான் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கட்,ஆப் மதிப்பெண் 107 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் 103 மதிப்பெண் பெற்றேன். எனவே, தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கி, என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவரைப்போன்று மேலும் பலர் முழு மதிப்பெண் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நிபுணர் குழு ஒன்றை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர்கள் குழு நேரில் ஆஜராகி, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை, பாடப்புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தவறான கேள்வி மற்றும் பதில்களுக்கு உரிய மதிப்பெண்களை நீதிபதி நேரடியாக வழங்கினார். அந்த மதிப்பெண் அடிப்படையில் மனுதாரர்களை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக