புதன், 21 மே, 2014

பள்ளி மாணவர்களுக்காக 4.2 கோடி புத்தகங்கள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக 4.2 கோடி புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஏறத்தாழ 100 சதவீத புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கும், பாடநூல்கழகத்தின் வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தக விற்பனை மே 16-ஆம்தேதியே தொடங்கி விட்டது. சில்லறை விற்பனை பெரும்பாலும் இந்த வாரத்தில் தொடங்கும் எனதகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 2.2கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 57 லட்சம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 33லட்சம் பேரும் உள்ளனர். இவர்களுக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக