வியாழன், 22 மே, 2014

பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குநரின் கட்டுபாட்டில் உள்ளன. பள்ளி கல்வி விதிப்படி ஒரு நாளைக்கு 5.40 மணி நேரத்திற்கு குறையாமலும், ஆண்டுக்கு 200 நாளும் பள்ளி நடக்க வேண்டும்.இதில் 180 நாட்கள் கல்வி கற்பிக்கவும், 20 நாட்கள் தேர்வுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சில அரசு பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடக்கிறது. தனியார் பள்ளிகள் ரேங்க் பெறும் போட்டியில் 10ம் வகுப்பு பாடத்தை 9ம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடத்தை 11ம் வகுப்பிலும் நடத்துகிறார்கள். இதற்காக மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மாற்றுகிறார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.சமச்சீர் கல்வியின் நோக்கம் பாதிக்கிறது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுப்பு தர மறுக்கின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு கல்வித்துறை விதி எண் 76 மற்றும் 77 ன்படி, விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று நீதிபதிகள் என்.கிருபா கரன், எஸ்.வைத்தியநாதன் பெஞ்ச் விசாரித்தது. மனு குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறி ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக