சனி, 24 மே, 2014

கவிச்சக்கரவர்த்தி கம்பர்

3.1 கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர். கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. கவிச் சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி மகாகவி பாரதியார் தமது சுயசரிதையில் "கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்" என்று குறிப்பிட்டு உள்ளார். "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பர் பிறந்த தமிழ்நாடு" என்றும் அவர் பாராட்டி உள்ளார். "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி" (அம் - அழகிய; புவி - உலகம்) என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றி உள்ளார். தமிழ்மொழிக்குத் தவச் சிறப்புத் தந்தது என்ற பொருளில் நாமக்கல் கவிஞர் , "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே" என்று புகழ்ந்து உள்ளார். "கல்வியிற் பெரியன் கம்பன்" எனவும் "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" எனவும் வரும் பழம் தொடர்கள் கம்பரின் சிறப்பை வெளிப்படுத்தும்.

3.1.1 கம்பர் - பெயர் கம்பர் தஞ்சை மாவட்டத்துத் திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். இதனைத் தனிப்பாடல் ஒன்று விவரிக்கிறது. கம்பர் என்ற பெயர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பர் உவச்சர் குலத்தில் (பூசாரிக் குலம்) பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் 'கம்பன்' என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.

3.1.2 கம்பர் - காலம் கம்பரது காலத்தைப் பற்றி மூன்று வேறு கருத்துகள் நிலவுகின்றன. இராமாயணத்தின் தொடக்கத்தில் "கம்பர் தனியன்கள்" என்ற தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பாடலில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது. இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய காலம் கி.பி. 885 என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் 16ஆம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச் செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இதே போல் ஆவின் கொடைச் சகரர் என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் காலம் கி.பி. 978 என்று சிலர் விளக்கி உள்ளனர். இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் ஆகும். இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்து உள்ளனர். கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர். மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். கி.பி. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலை முறை காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் தெரிவிக்கிறது. எனவே கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றி இருக்க வேண்டும் என்று மா.இராசமாணிக்கனார் கருதுகிறார். கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவருக்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். அவர் தங்கி இருந்த நாடு ஓரங்கல் என்பது ஆகும். அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன் ஆவான். அவன் காலம் கி.பி. 1162 - 1197 வரை ஆகும். இதே கால கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான். இவன் காலம் கி.பி. 1178 - 1208 வரை ஆகும். எனவே கம்பர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று முடிவு கூறலாம்.

3.1.3 கம்பர் இயற்றிய நூல்கள் வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைக் கம்பர் தமிழில் இராமகாதையாக இயற்றினார். அவர்தம் நூல்களுள் இதுவே தலைசிறந்த நூல் ஆகும். இதுவன்றி வேறு சில நூல்களையும் எழுதியதாகக் கம்பர் பற்றிய கதைகள் கூறுகின்றன. கம்பர் உழவுத் தொழிலையும் உழவரையும் பாராட்டி எழுதிய நூல்கள் ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்பன. கலைமகளின் (சரசுவதி) அருளைப் போற்றி எழுதிய நூல் சரசுவதி அந்தாதி ஆகும். நம்மாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவர் மீது கம்பர் கொண்ட ஈடுபாட்டைச் சடகோபர் அந்தாதி என்னும் நூல் வெளிப்படுத்துகிறது. கம்பர் செய்ததாக மும்மணிக்கோவை என்ற நூலையும் தனிப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 3.1.4 கம்பரைப் பற்றிய கதைகள் கம்பர் பற்றிய பல்வேறு கதைகள் வழங்குகின்றன. கம்பரின் தந்தை ஆதித்தன் என்றும், மகன் அம்பிகாபதி என்றும் அக்கதைகள் கூறுகின்றன. அம்பிகாபதி பெரும் கவிஞனாக விளங்கி உள்ளான். சோழ மன்னனின் மகள் அமராவதி இவன் மேல் காதல் கொண்டாள். இக்காதல் காரணமாக அம்பிகாபதி மன்னனால் கொல்லப்பட்டதாகக் கதை ஒன்று கூறுகின்றது. மகனின் பிரிவால் கம்பர் பெருந்துயர் அடைந்தார். இந்தத் துயரமே இராமனைப் பிரிந்த தயரதன் துயராகவும், இந்திரசித்தைப் பிரிந்த இராவணன் துயராகவும் கம்ப இராமாயணத்தில் வெளிப்படுவதாகக் கூறுவர். கம்பரும் சடையப்ப வள்ளலும் வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வள்ளல் ஒருவன் சடையப்ப வள்ளல் என்று புகழப்பட்டான். இவனே கம்பரை ஆதரித்த வள்ளல் ஆவான். தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பர் பத்து இடங்களில்
இராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் வள்ளலின் கொடை, பண்பு, புகழ், பெருமை முதலியவற்றை நன்றியோடு பாராட்டியுள்ளார். இராமாயணத்தில் இராமன் முடிசூடும் சடங்கு நிகழ்கிறது. முடியினை வசிட்டன் புனைந்தான் என்று கூறாமல், வெண்ணெய் நல்லூர்ச் சடையன் வழி முன்னோன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் முடி சூட்டினான் என்று கம்பர் பாடியுள்ளார். கம்பரும் சோழ மன்னனும் சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் சுட்டுகின்றன. எடுத்துக்காட்டாக,
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு (தனிப்பாடல் திரட்டு)
(ஓதினேன் = படித்தேன்; வேந்து = மன்னன்; கொம்பு = கிளை) என்னும் பாடல் இதை வெளிப்படுத்துகிறது.
மேலே சுட்டி உள்ள பாடல் சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாகத் தெரிகிறது. சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே கம்பர், "மன்னவன் நீ ஒருவன் தானா? நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான் தமிழைக் கற்றேன்? என்னை ஆதரிக்காத மன்னர் உலகில் உண்டோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கிளையைப் பார்த்தது உண்டா? அதுபோல என்னை ஆதரிக்காதவர்களைப் பார்த்தது உண்டா?" என்று கூறி நீங்கினார்.

இதேபோல் சோழ அரசவைப் புலவர் ஒட்டக் கூத்தருக்கும் கம்பருக்கும் போட்டியும் பூசலும் இருந்தமை பற்றிய செய்தியும் உண்டு. கம்பரும் இராமாயண அரங்கேற்றமும் கம்பர் இராமகாதையை எழுதி முடித்த பிறகு அதனை அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கம் சென்று அங்குள்ளோரை வேண்டினார். திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் தில்லைத் தீட்சிதர்கள் இதற்கு ஒப்புக் கொண்டால் அரங்கேற்றம் செய்யலாம் என்று கூறிவிட்டனர். உடனே கம்பர் தில்லை க்குச் சென்றார். தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரம் பேர். இவர்களை ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் கூட்டி ஒப்புதல் வாங்குவது இயலாமல் இருந்தது. ஒரு சமயம் குழந்தை ஒன்று பாம்பு தீண்டி இறந்து போனது. இதற்காகத் தீட்சிதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இருந்தனர். அங்குச் சென்ற கம்பர், தமது இராமாயணத்தில் நாகபாசப் படலம் என்ற பகுதியில் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடினார். உடனே குழந்தை பிழைத்து எழுந்தது. இதனைக் கண்ட தீட்சிதர்கள் மகிழ்ந்து கம்பரைப் போற்றினர். பின்னர்க் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்ற ஒப்புதலையும் தந்தனர். கம்பர் மீண்டும் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் செய்ய முனைந்தார். திருவரங்கத்தார் வேண்டுகோளுக்கு இணங்கச் சடகோபர் அந்தாதி பாடி, இரணிய வதைப் படலத்தை விரிவாக விளக்கிக் கூறினார். இதன் பின்னர் இராமாயண அரங்கேற்றம் நிகழ்ந்தது. இவ்வாறாகக் கம்பர் பற்றிய பல்வேறு கதைகளை அபிதான சிந்தாமணி என்னும் நூல் விரிவாகக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக