சனி, 27 ஜூலை, 2013

 முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை


 முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக
எழுத்துப்பிழைகள்    --   தினமணி கட்டுரை

 'வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே' எனும்
உவமைத் தொடரால் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றி ஒளவையார் பாடிய
பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு எட்டுத்
தேர்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்க தச்சன் ஒருவன், ஒரு திங்கள்
முழுதும் அரிதின் முயன்று கவனத்தோடு செய்த ஒரு தேர்ச் சக்கரம்
போன்று நுணுக்கமான கூர்மையான போராற்றல் உடைய மன்னன் என்பது இத்தொடரின் பொருள். எந்தத் தேர்வாயினும் அதற்காகத் தயாரிக்கப்படும் வினாத்தாள், ஒரு திங்கள்
முயன்று செய்த ஒரு தேர்ச்சக்கரம் போன்று தெளிவானதாய் பிழையற்றதாய்
இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஒரு வினாத்தாளை பல லட்சம்பேர்
படித்து விடை தருகின்றனர். எனவே, அத்தகைய வினாத்தாளின் பிழைகளும் குறைகளும் எத்தனைபேரைபபாதிக்கும் என்பதைத் தேர்வு நடத்துவோர் உணரவேண்டும்.                        

     "இதற்கு மேல் இனி பிழைகளைச் செய்ய முடியாது' என்று எக்காளமிட்டுக்
கூறுவதுபோல அமைந்துள்ளது 21-7-2013 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்திய தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாள். 
ஆசிரியர் தேர்வு வாரியம் 2881 முதுகலையாசிரியர் பணியிடங்களுக்கான
போட்டித் தேர்வினை, தமிழ்நாடு முழுவதுமாக 421 மையங்களில்
ஞாயிறன்று நடத்தியது. இதில் 1.67 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 600 பணியிடங்கள் முதுகலைத் தமிழாசிரியர்களுக்கானது. அநேகமாக,
இப்பணியிடங்களுக்கு ஐம்பதினாயிரம் பேர் தேர்வை எழுதியிருக்கலாம்.
இத்தேர்வுக்குரிய வினாத்தாள் 150 வினாக்களைக் கொண்டது. கொள்குறிவகையில் ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்டுள்ளநான்கு விடைகளுள் சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அமைந்த தேர்வில், முதுகலைத் தமிழாசிரியர்
தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் அளவுக்கு அதிகமாக
எழுத்துப்பிழைகள் இடம்பெற்றுள்ளன. வினாத்தாள் முழுவதுமாக 69
சொற்களில் எழுத்துப்பிழை காணப்படுகிறது. இவற்றில் எழுத்துப் பிழையால்
பொருள் வேறுபட்டு, தேர்வாளர்கள் சரியான விடையைத் தேர்வு செய்ய
முடியாத நிலையில் அமைந்தவை 19. இப்பிழைகள் வினாக்களிலும் விடைகளிலும் அமைந்துள்ளன! 
 "துஞ்சினார்' என்று செத்தாரைக் குறிப்பது எவ்வகை வழக்கு என்னும்வினாவிற்கான விடை, எழுத்துப் பிழையால் பொருள் மாறுபட்டு நிற்கிறது.
"மங்கல வழக்கு' என்றிருக்கவேண்டிய சொல், "மதுகல வழக்கு' என்றிருப்பதால்
தேர்வாளர்கள் அப்பெயரில்ஒரு வழக்கு இல்லையே என்றெண்ணி அவ்வினாவிற்குத் தவறான விடையைத்தேர்வு செய்துள்ளனர். 
யாப்பிலக்கணக் கலைக்களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது எனும்வினாவுக்குரிய விடைகளில் யாப்பருதுகலக்காரிகை, யாப்பருதுகலம் எனச்
சொற்கள் அச்சாகியுள்ளன. இதனால் பலர் சரியான விடையைக் கண்டறிய
முடியாமல் திணறியுள்ளனர். 
அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையானது எது என்னும்வினாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் "தண்டியலதுகாரம்',
"மாறனலதுகாரம்' என இரண்டு சொற்களில் ஏற்பட்டுள்ள பிழை, சரியான
விடையைக் கண்டறிவதில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இடம்பெற்றுள்ளது! 
திருமந்திரத்தின் உட்பிரிவாக எத்தனைத் "தந்திர துகள்'இடம்பெற்றுள்ளது என்னும் வினாவில் "தந்திர துகள்' என்னும் பிழையானசொல்லால் பரிதவித்தவர்கள் பலர். "தந்திரங்கள்' என்றிருக்க வேண்டியசொல்தான் தமிழ்த் தேர்வு வினாத்தாளில் இந்தக் கோலத்தில்
பாரதியார் எழுதிய "சின்ன சங்கரன் கதை' எனும் பெயர் "சின்ன சதுகரன் கதை'என்றும், "ஆனந்தரங்கம் பிள்ளை' என்னும் பெயர் "ஆனந்தரதுகம்' என்றும்
இருந்தால் தேர்வாளர்கள் குழப்பமடையமாட்டார்களா? 
 "கங்கை கொண்ட' சோழனை, "கதுகைகொண்ட' சோழன் என்றும்சொல்லலாமோ என்னும் ஐயத்தினை இவ்வினாத்தாள்தேர்வாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 
அதே போன்றே "புகழ்தல்' என்னும் சொல், வேறுபொருள் தரத்தக்க வகையில்முற்றிலுமாக மாறுபட்டு "புகாதல்' என்றும் "பங்குனி' என்னும் காலப்பெயர்"பதுகுனி' என்றும் அச்சாகியிருந்தால் தேர்வாளர்கள் எப்படி எளிதாகவிடையைக் கண்டறிய முடியும்? 
இதே கோலத்தில் "கோச்செதுகணான்', "பெருதுகடுதுகோ',"பிதுகலநிகண்டு' எனச் சொற்கள் சிதைந்தும் சீரழிந்தும் அச்சாகியிருப்பதைப் பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. 

இச்சொற்களுக்கான பொருளறியாது தேர்வாளர்கள் திகைப்பது நியாயந்தானே! இதைப்போன்று இன்னும் பிழைகள் ஏராளமாக உள்ளன. தமிழில் முதுகலைப் பட்டப்படிப்புப் படித்தவர்களால், எழுத்துப் பிழையான சொற்களை ஒருவாறாக ஊகித்து அறிய முடியாதா எனக் கேட்கலாம்.அவ்வாறு அறிந்து செயல்படுபவர்கள் மிகச் சிலரே. இதுதான்இன்றையகல்வி நிலை. எடுத்துக்காட்டாக, "பவளக்கொடி' நாடக ஆசிரியர் யார்? என்னும்வினாவுக்குரிய விடை "சங்கரதாஸ் சுவாமிகள்' என்பது. இது "சதுகரதாஸ்'என அச்சாகியிருந்ததால், அதை ஊகித்தறிய முடியாத பலர்,அவ்வினாவுக்கு "பம்மல் சம்பந்த முதலியார்' எனும் தவறான விடையைத்தேர்வு செய்துள்ளனர். 
கணிப்பொறி எழுத்துருக்களில் மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம். தக்கவரைக்கொண்டு அதைச் சரி செய்ய வேண்டுமே அல்லாது,பிழைகளை அப்படியே வெளியிடுவது பொறுப்பற்ற செயலாகும். அதுவும்தமிழில் ஏற்பட்டுள்ள இந்த இமாலயப் பிழையை யாரும்
சகித்துக்கொள்ளமாட்டார்கள். 
வினாத்தாள் பிழையால் எண்ணற்றோர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கல்வித்துறையும், தேர்வு வாரியமும் உணர வேண்டும். "என்று தணியும் இந்தப் பிழைகளின் போக்கு?' என்றுதான்
தமிழுலகம் ஏங்கித் தவங்கிடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக