தமிழ்:கடைவிரித்தேன்... கொள்வாரில்லை..
கடைவிரித்தேன்... கொள்வாரில்லை என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ? அது தமிழகத்தில் தமிழை பாடமாக வைத்து, அதை ஒரு துறையாக அங்கீகரித்திருக்கும் கல்லூரிகளுக்குப் பொருந்தும். தமிழ் பாடம் படிக்க மாணவர்களைத் தேடி திண்டாட வேண்டியிருப்பதாக கூறுகின்றனர் தமிழ்த்துறை கல்வியாளர்கள்.
தமிழ்ப் பாடத்தை முதன்மையாக எடுத்து ஆய்வு செய்து வரும் ஆய்வு மாணவர்கள் சிலர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளும், 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் உள்ளன. அரசு கலைக் கல்லூரி, பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரி தவிர வேறு எங்கும் தமிழுக்கு பி.ஏ இளங்கலை பட்டப் படிப்புகள் இல்லை. பாரதியார் பல்கலைக்கழகமும், இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தமிழ் எம்.ஏ பாடத்தை பெயரளவுக்கே வைத்துள்ளன. முழுமையான மாணவர்கள் சேர்க்கை இல்லை. இந்தக் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை எடுத்துப் படிக்க மாணவர்கள் விண்ணப்பங்கள் வாங்குவது மிகக் குறைவு. கடைசியாகவே மாணவர்கள் சேருகிறார்கள், வேறு பாடம் கிடைத்தால் டி.சி-யை வாங்கிச் சென்றுவிடுகிறார்கள்.
தமிழகம் முழுக்க உள்ள தமிழ்க் கல்லூரிகளின் பாடு பெரும் திண்டாட்டம். 1938-ம் ஆண்டு திண்டிவனம் அருகே மயிலம் சிவஞான பாலய்ய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியும், தஞ்சாவூரில் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன.
கும்பகோணம் திருப்பனந்தாள் மடம் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி 1945-லும், தர்மபுரம் ஆதீனம் சார்பாக தர்மபுரம் தமிழ்க் கல்லூரி 1946-லும், கோயம்புத்தூர் பேரூர் ஆதீனம் சார்பாக தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி 1953-லும், மேலைச் சிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி 1955-லும், அதன்பிறகு பாபநாசம் அருள்நெறி திருப்பணி மன்றம் சார்பாக திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
இவற்றில், திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பாடத்தைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது. பிற தமிழ்க் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது பத்தாண்டுகளாகவே திண்டாட்டமாகத்தான் உள்ளது.
கோவை சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பி.லிட் பாடப் பிரிவில் 60 சீட்டுகள் உள்ளன. அவற்றில் 51 சீட்டுகளே சென்ற ஆண்டு கடைசிவரை காத்திருந்து நிரப்பப்பட்டன. மற்ற மாவட்டங்களில் உள்ள தமிழ்க் கல்லூரிகளில் இந்த அளவு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் 25 இடங்கள் உள்ளன. அதில் 15 இடங்களே நிரம்பின. மற்ற தமிழ்க் கல்லூரிகளில் பாதி கூட இல்லை.
தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு தொல்பொருள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பத்திரிகை, தொலைக்காட்சிகள் என நிறைய வாய்ப்புகள் தற்போது உள்ளன. இணையதளங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, லண்டன், கனடா, பிலிப்பைன்ஸ, இலங்கை என அனைத்து நாடுகளிலும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர்கள் கூட்டம் பெருகிவிட்டது.
அவர்கள் எல்லாம் இணையதளங்கள் மூலம் பதிப்பகங்கள், பத்திரிகைகள் நடத்துகிறார்கள். அவற்றுக்கு நிறைய பிழை திருத்துந ர்கள், தட்டச்சர்கள் தேவைப்படு கிறார்கள்.
பலருக்கு இதன்மூலம் வெளிநாட்டு பணி வாய்ப்பும் அமைகிறது. ஆனால், அது புரி யாமல் தமிழை தீண்டத்தகாத தாகவே மாணவ சமுதாயம் பார்ப்பது வேதனைக்குரியதாக உள்ளது. ஆனால், எந்த ஒரு விஷயம் அருகி வருகிறதோ அதற்கு எதிர்காலத்தில் நிறைய மதிப்பு வரும். விலைமதிக்க முடியாததாகவும் மாறும். அது தமிழுக்கும் பொருந்தும் என்பதே உண்மை. அதை உணர்ந்து மாணவர்கள் தமிழில் பட்டம் பெற முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக